அலசல்
Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

‘ஸ்கீம்’ என்ற ஒற்றை வார்த்தை மொத்தத் தமிழகத்தையும் பற்ற வைத்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து பி.ஜே.பி மேலிடம் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருப்பதால், தமிழக பி.ஜே.பி தலைவர்களிடம் எக்ஸ்க்ளூசிவ்வாகக் கருத்து கேட்டோம். அவர்கள் சொன்னது அப்படியே:

(பி.கு) இதெல்லாமே கற்பனைனு சொல்லித் தெரியவேண்டுமானால், நீங்கள் கோவாலு ஏரியாவுக்குப் புதுசு என அர்த்தம்.

கம்பேரிஸன் கோவாலு!

தமிழிசை: ஒரு மருத்துவராக நான் சொல்லிக்கொள்வதெல்லாம் காவிரி ஆறு ஓடி வரும் பாதை முழுக்க மண், செடி, கொடிகள் நிறைய இருக்கின்றன. எனவே, காவிரி நீரை அப்படியே குடிப்பதை ஒரு மருத்துவராக நான் தடுப்பேன். காய்ச்சி வடிகட்டிக் குடிப்பதை மட்டுமே ஒரு மருத்துவராக நான் பரிந்துரைப்பேன். மேலும், ஒரு மருத்துவராக நான் மேலாண்மை படிப்பு படிக்கவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஹெச்.ராஜா: என்ன ஓர் ஆணவம் இருந்தால் அண்ணா சாலையில் தி.மு.க-வினர் போராட்டம் நடத்தியிருப்பார்கள்? அதுவும் அண்ணா சிலைக்கு முன்? அண்ணா யார்? தமிழ்நாட்டைச் சீரழித்த திராவிடக்கட்சியின் பிதாமகன். அவர் பெயர்கொண்ட சாலையில் அவரின் கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தியதன் உள்நோக்கம் என்னவென்பதைக் கண்டறிந்து கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

(சில நிமிடங்கள் கழித்து, ‘‘நீங்க பேசுனப்போ பதில் சொன்னது என் அட்மின். அவர் ஏதோ சி.எஸ்.கே டீம் பத்திக் கேக்குறீங்கன்னு நினைச்சுப் பேசிட்டார். எதுவும் எழுதிடாதீங்க’’ என ஹெச்.ராஜாவே லைனில் வந்து குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது)

சுப்பிரமணியன் சுவாமி: காவிரி நீர் எப்படியும் தமிழகத்துக்குக் கிடைக்காது. ஏன், டைம் வேஸ்ட் பண்றீங்க? கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் என்னிடம் இருக்கிறது. ஆனால், அதுவும் பலன் தராது. அடுத்து, மேகத்தில் படியும் நீராவியைத் தண்ணீராக்கும் திட்டம் ஒன்றும் என்னிடம் உள்ளது. ஆனால், வழக்கம்போல அதுவும் பலன் தராது. நான் இப்படிப் பல யோசனைகளைக் கைவசம் வைத்திருக்கிறேன்.

இல.கணேசன்: ஏற்கெனவே, கோதாவரி நீரைக் கிருஷ்ணாவுக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரும் திட்டம் ஒன்று உள்ளது. இதுதவிர, துங்கபத்ரா வடக்கே நோக்கிப் பாயும் வழியில் பாதை மறித்து டேக் டைவர்ஷன் போர்டு ஒன்று வைக்கும் திட்டமுள்ளது. இதனால், அந்த நதி அப்படியே தெற்குப் பக்கம் திரும்பிவிடும். தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்துவிடும்.

எடப்பாடி பழனிசாமி:
காவிரி தராத ஆளுங்கட்சியைக் கண்டித்து ஒளிந்திருந்து உண்ணும் மாபெரும் போராட்டம் நடத்தியிருக்கிறோம். அடுத்தபடியாக, காணாமல் போன காவிரியைத் தேடித் தொடும் ஐஸ்பால் விளையாட்டு விளையாடவுள்ளோம். இதன்மூலம் சர்வதேச கவனம் நம்மீது திரும்பும். வழக்கம்போல அ.தி.மு.க-வின் அனைத்து அணிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்.

ஓவியம்:  பிரேம் டாவின்ஸி