அலசல்
Published:Updated:

பயணம் முடிந்ததும் கவர்னருக்கு நெருக்கடி! - ஸ்டாலின் பிளான்!

பயணம் முடிந்ததும் கவர்னருக்கு நெருக்கடி! - ஸ்டாலின் பிளான்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயணம் முடிந்ததும் கவர்னருக்கு நெருக்கடி! - ஸ்டாலின் பிளான்!

#WeWantCMB#GoHomeEPSnOPS

ச்சைத் துண்டுபோட்டு புறப்பட்டுவிட்டார் ஸ்டாலின். இதுவரை அவர் போனதெல்லாம் ‘நமக்கு நாமே’ பயணம். ஆனால், இப்போது போவது விவசாயிகளுக்காக, காவிரிக்காக!

‘நடப்போம் - குரல் கொடுப்போம்- மீட்டெடுப்போம்’ என முழக்க மிட்டபடி பயணத்தை ஸ்டாலின் திட்டமிட்டபோது, அது நடைப் பயணமா, வாகனப் பயணமா என்ற குழப்பம் இருந்தது. ‘‘இது காவிரிப் பிரச்னையில் மத்திய அரசின் வஞ்சகத்தையும் மாநில அரசின் செயல்படாத தன்மையையும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற தன்மையையும் சொல்வதற்கான பயணம். நடைப்பயணமாக வந்தால் நாள்கள் ஆகும். கவர்னரைச் சந்தித்து மனுகொடுப்போம். தமிழகக் கட்சிகளைச் சந்திக்க பிரதமர் மறுப்பதால், குடியரசுத்தலைவர் கவனத்துக்கு இதைக் கொண்டுபோவோம்’’ என்றாராம் ஸ்டாலின். அந்த அடிப்படையில்தான், தி.மு.க-வின் தோழமைக் கட்சிகள் ஏப்ரல் 6-ம் தேதி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

இந்தப் பயணத்துக்காக பிரத்யேகப் பாடல்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல், பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஸ்டாலின் பேசும் வீடியோ, ஆடியோக்களும் தயார் செய்யப்பட்டன.

பயணம் முடிந்ததும் கவர்னருக்கு நெருக்கடி! - ஸ்டாலின் பிளான்!

பச்சைத்துண்டு... பச்சைக்கொடி!

ஏப்ரல் 7-ம் தேதி காலை 11 மணிக்கு விமானம்மூலம் திருச்சி வந்தார் ஸ்டாலின். அப்போதே அவர் பச்சைத் துண்டுடன்தான் வந்தார். திருச்சியில் கே.என்.நேரு இதற்கான முழு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பயணம் துவங்கிய முக்கொம்புப் பகுதியில், மதியம் 12 மணியிலிருந்தே தொண்டர்கள், கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். காவிரி உரிமை மீட்புப் பயணக் கொடியை ஸ்டாலின் ஏற்றி வைக்க, பயணத்தைப் பச்சைக்கொடி காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடக்கி வைத்தார். ‘‘இந்தப் பயணத்துக்குப் பிறகு கவர்னர் மாளிகைக் கதவைத் தட்டவிருக்கிறார் ஸ்டாலின். மத்திய அரசுக்கு ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்‌ஷனரியை எடுத்துப் பார்க்க வேண்டியதுதானே? மத்திய, மாநில ஆட்சிகள் வந்த பிறகு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது. ஆளும் கட்சியினர் அடகுவைத்த தமிழரின் உரிமையை மீட்கும் பயணம் இது’’ என்றார் வீரமணி.

அடுத்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘‘ஸ்டாலின் நகர்த்தும் அரசியல் காய்கள், இரு அரசுகளையும் அம்பலப்படுத்தும் விதமாக உள்ளன. காவிரிக்காக நமது போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு கூடியுள்ளது. காவிரி உரிமை மீட்கும் இந்தப் பயணம், மத்திய மாநில அரசுகளை நடுங்கவைக்கும். காவிரிக்காக நாம் மக்களுடன் ஓரணியில் நிற்கிறோம்’’ என்றார்.

இந்த உற்சாகத்துடன் மைக் பிடித்த ஸ்டாலின், ‘‘இந்தப் பயணம் முடிவடைவதற்குள் நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைத்துவிடும். அப்படி வெற்றி கிடைக்கவில்லை என்றால், இந்தப் பயணத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவேன். 1938-ல் இதே திருச்சியிலிருந்து தாய்மொழி காக்கச் சென்னை வரை நடைப்பயணம், தந்தை பெரியார் தொடக்கிவைத்தார். தந்தை பெரியாரின் வாரிசாக இருக்கும் வீரமணி ஐயா அவர்கள், இந்தப் பயணத்தைத் தொடக்கி வைக்கிறார். அந்தத் தமிழர் பயணம் எப்படி வெற்றிபெற்றதோ, அதுபோல் இந்தப் பயணமும் வெற்றி பெறும்’’ என்று முடித்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கினார்.

பயணம் முடிந்ததும் கவர்னருக்கு நெருக்கடி! - ஸ்டாலின் பிளான்!

வழியெங்கும் ஆரத்தி!

காவிரிக் கரையில் திருமாவளவன், முத்தரசன் சகிதமாகக் கொடியை ஏந்தியபடி நடந்தார் ஸ்டாலின். பிறகு, பிரசார வாகனத்தில் பயணம் செய்த அவர், ஜீயபுரம், கம்பரசம்பேட்டை, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் வழியாக சர்க்கார்பாளையம் சென்று, அங்கிருந்து ஒட்டக்குடி, கீழ முல்லைக்குடி, புத்தாவரம், வேங்கூர் பூசத்துறை வழியாகக் கல்லணை அமைந்துள்ள தோகூரில் அன்றைய பயணத்தை முடித்தார். இடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி நடைப்பயணம் போனதுடன், காவிரி விவகாரம் குறித்துப் பேசவும் செய்தார். சில இடங்களில் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சில இடங்களில் செல்ஃபிக்களுக்கு போஸ் கொடுத்தபடி பயணம் செய்தார். அன்று ஒருநாள் பயணம் செய்த திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுமார் 34 கிலோமீட்டர் தூரம் வரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் பின் தொடர்ந்ததால், சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

நேருவைப் பிடித்தபடி வந்த ஸ்டாலின்!

கல்லணையை அடுத்த தோகூரில் காவிரி ஆற்றுக்குள்ளேயே மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்து சேர்ந்தபோது, ஸ்டாலின் சோர்ந்து விட்டார். ஆற்று மணலில் நடக்க முடியாமல் சிரமப்பட்டவர், நேருவின் கையைப் பிடித்தபடி மேடைக்கு வந்து சேர்ந்தார். காவிரி மணலில் தொண்டர்கள் அமர்ந்துகொள்ள, ஸ்டாலின் பேசினார். ‘‘காவிரி பிரச்னை என்பது டெல்டா பிரச்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பிரச்னை. காவிரி வறண்டால், பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும். அதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடைக்காது’’ என எச்சரித்தார்.

கால்நடைகளுக்குக்கூடத் தண்ணீர் இல்லை!

அடுத்த நாள் வறண்ட காவிரியையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களையும் பார்வையிட்டபடி பயணம் தொடர்ந்தது. தஞ்சாவூர் சங்கம் ஹோட்டலில் தங்கியவர், காலை 8.30 மணிக்குச் சூரக்கோட்டை அய்யனார் கோயிலிலிருந்து, இரண்டாவது நாள் பயணத்தைத் தொடங்கினார். பெரும்பாலும் நடந்தே சென்றார். சில இடங்களில் ஆற்றின் கரையை ஒட்டியே சென்ற சாலையில் வேனில் பயணித்தார். தண்ணீர் இல்லாமல் வறண்டு வெடித்துக் கிடந்த நிலங்களை வெறித்துப் பார்த்தபடியே சென்றார். சில இடங்களில் வறண்ட வயலில் இறங்கி நடந்தார். ஆற்றை ஒட்டி மேய்ந்துகொண்டிருந்த ஆடு, மாடுகள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக அலைந்துகொண்டிருந்ததைப் பார்த்து, ‘‘நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த தஞ்சையிலேயே இப்படி ஒரு நிலைமை இருப்பதைப் பார்க்கையில் வேதனையாக இருக்கிறது’’ எனக் கலங்கினார்.

பயணம் முடிந்ததும் கவர்னருக்கு நெருக்கடி! - ஸ்டாலின் பிளான்!

‘‘தஞ்சை எனது மண்!’’

பின்னர், முன்னாள் எம்.எல்.ஏ-வான மகேஷ் கிருஷ்ணசாமியின் சொந்த ஊரான சில்லத்தூரில் வயலில் அமைக்கப்பட்ட மேடையில் பேசிய ஸ்டாலின், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக பிரதமர் மோடி எள்ளளவும் முயற்சி எடுக்கவில்லை. காவிரிக்காகப் போராடும் எங்கள் மீது பல வழக்குகளைப் போடுகிறது காவல்துறை. அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்’’ என்று கொந்தளித்தார். பிறகு, அவரது வேன் பட்டுக்கோட்டை நோக்கிச் சென்றது. இடையில் ஸ்டாலினின் வேனை மறித்த மூதாட்டி ஒருவர், ‘‘காவிரிக்கு நிரந்தர நீதியும் தீர்வும் வேண்டும். அதற்காகத் தொடர்ந்து போராடணும். மக்களாகிய நாங்கள் உங்க பக்கம் இருக்கோம்’’ எனத் திருத்தமாகச் சொன்னதை ரசித்த ஸ்டாலின், ‘‘நிச்சயமாக நமக்கான உரிமையைப் பெறுவோம்’’ என்றார்.

அடுத்து ஒக்கநாடு மேலையூர் என்ற கிராமத்தில் பேசிய ஸ்டாலின், ‘‘திருச்சியில் கூடிய கூட்டத்தைத் தஞ்சைக் கூட்டம் மிஞ்சிவிட்டது. தஞ்சை மண் நமது மண் என்ற உணர்வு எனக்கும் உள்ளது” என்றார். இதேபோல், அரியலூரிலிருந்து ஒரு பயணம் தொடங்கியுள்ளது. இரண்டு பயணங்களும் ஏப்ரல் 13-ம் தேதி கடலூரில் சேர்கின்றன. அங்கிருந்து அனைத்துத் தலைவர்களும் சென்னைக்கு வந்து கவர்னரைச் சந்திக்கிறார்கள். கவர்னருக்கு அப்போது நெருக்கடி கொடுக்கத் திட்டம் வைத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்கிடையில், 12-ம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தையும் தி.மு.க கூட்டணிக்கட்சிகள் அறிவித்துள்ளன. 

பச்சையும், கறுப்புமாக போய்க்கொண்டி ருக்கிறது காவிரிப் போராட்டம்!

- சி.ய.ஆனந்தகுமார், கே.குணசீலன்
படங்கள்: தே.தீட்ஷித், ம.அரவிந்த்