பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இது முதுகெலும்பு இல்லாத அரசு!”

“இது முதுகெலும்பு இல்லாத அரசு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இது முதுகெலும்பு இல்லாத அரசு!”

ஜெ.அன்பரசன், படங்கள்: எஸ்.தேவராஜன்

காவிரிப் பிரச்னை குறித்த போராட்டத்தில் முதல்நாளே தமிழகம் திரும்பிப்பார்த்தது வேல்முருகனை. தொடர்ந்து அடுத்தகட்டப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகளில் இருந்தவரைச் சந்தித்தேன்.

“போராட்டம் தேவைதான். ஆனால் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்குவது மாதிரியான வன்முறைப் போராட்டங்கள் அவசியமா?”

“இது வன்முறையென்றால் தொடர்ச்சியாக மத்திய அரசு, தமிழகத்துக்குச் செய்வதற்குப் பெயர் என்ன? சுங்கச்சாவடிகளை கார்ப்பரேட் கைகளில் கொடுத்து, கோடிகோடியாகக் கொள்ளையடிக்கிறார்களே, அதன் பெயர் வன்முறையில்லையா? இதை எதிர்த்துக் கடந்த ஆறு ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். நீதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்காமல் இருக்கும் மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வரிகொடா இயக்கத்தை ஆரம்பித்தோம்.  சில சுங்கச்சாவடி ஊழியர்கள் எங்களைக் கடந்து செல்ல அனுமதிக்காததால்தான் நாங்கள் அவ்வாறு நடந்துகொண்டோம். இவ்வளவு ஏன், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருக்கும் மத்திய அரசைவிடவா நாங்கள் வன்முறையில் இறங்கிவிட்டோம். இப்போதும் சொல்கிறேன். நாங்கள் செய்தது வன்முறையல்ல!”

“இது முதுகெலும்பு இல்லாத அரசு!”

“கர்நாடகாவில் தமிழர்களும் தமிழகத்தில் கன்னடர்களும் வசித்து வருகிறார்கள். உங்கள் போராட்டங்கள் இருதரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதா?”

“நாங்கள் இந்திய அரசுக்கு எதிராகத்தான் போராடி வருகிறோம். நீங்கள் சொல்வது போல இங்கு ஏராளமான கன்ன டர்கள் வசித்தும் பணிபுரிந்தும் வருகிறார்கள். எங்கள் போராட்டத்தினால் தமிழகத்தி லிருக்கும் கன்னடர்களுக்குச் சிறிதளவும் பாதிப்பு இருக்காது. ஆனால், கர்நாடகத்திலோ ‘ஒகேனக்கல் எங்களுக்குத்தான் சொந்தம்’ என்றும், ‘கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் ஓடக் கூடாது’ என்றும் வட்டாள் நாகராஜ் சொல்லிவருகிறார். அதுபோலத் தமிழகத்தில் ‘கன்னட நடிகர்கள் படம் ஓடக்கூடாது’ என்று வேல்முருகனோ, இங்கிருக்கும் தமிழ்த் தேசிய வாதிகளோ யாராவது சொல்லியிருக்கிறார்களா?”

“தமிழர்களுக்காகப் போராடுவதாகச் சொல்லும் வைகோவுக்கும் சீமானுக்கும் இடையிலேயே மோதல் வலுக்கிறதே?”

“இந்தச் சண்டை நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய உரிமைப்போராட்டம் நடந்துவருகிறது. இந்த நேரத்தில் யாரும் இதைப் பெரிதுபடுத்திப் போராட்டத்தை மடைமாற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.”

“என்னதான் நீங்கள் தமிழ்த்தேசிய அரசியல் பேசினாலும் உங்களுக்குச் சாதி அரசியல் அடையாளம் இருக்கிறதே?”

“சமத்துவத்தையும் சமூக நீதியையும் போற்றக்கூடிய தளத்திலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கியவன் நான். என்னைப் பற்றித் தெரியாதவர்களால் வைக்கப்படும் மேலோட்டமான குற்றச்சாட்டு அது. ‘சாதி ஒழிப்பே தமிழ்த்தேசிய விடுதலை’ என்ற தமிழரசனை ஏற்றுக்கொண்டு 15 வயதில் தமிழ்த்தேசியப் பயணத்தைத் தொடங்கியவன் நான்”

“இது முதுகெலும்பு இல்லாத அரசு!”

“சாதி அடையாளங்களைத் தாண்டித் தமிழர்கள் ஒன்றிணைவது சாத்தியமா?”

“பன்னெடுங்காலத்துக்குமுன் ஆதிக்க வாதிகளால் திணிக்கப்பட்டதுதான் சாதியப் பாகுபாடு. ‘ஆதியில் சாதியில்லை... இடையில் வந்ததுதான் சாதி’ என்கிற வரலாற்று உண்மையை ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளைகளும் உணரும்போது சாதிகள் ஒழியும். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், கூடங்குளம் போராட்டத்தி லெல்லாம் சாதிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதுபோலத் தமிழகத்தில் விரைவில் முழுமையாகச் சாதிகள் ஒழிக்கப்படும்”

“காவிரிப் பிரச்னைக்கான தீர்வு என்று எதைக் கருதுகிறீர்கள்?”

“மன்னராட்சி காலத்திலேயே காவிரி தமிழகத்தில் நன்றாக வந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசும் கர்நாடக அரசும் ஏற்றுக்கொள்ள வில்லை. இது அநியாயமில்லையா? இந்திய அரசு எப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறதோ அப்போதுதான் இதற்குத் தீர்வு கிடைக்கும்”

“ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வை ஆதரித்தவர் என்ற முறையில், இன்றைய தமிழக அரசு குறித்து உங்கள் கருத்து என்ன?”

“எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ மக்கள் நினைக்கத் தயாராக இல்லை. மத்திய அரசும் இவர்களை அப்படி நினைக்கவில்லை. தமிழர்கள் பற்றியோ, தமிழர்களின் உரிமை பற்றியோ இவர்களுக்குக் கவலையில்லை. தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதுகெலும்பில்லாத அரசு என்றால் அது ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அரசுதான்!”