
கம்பேரிஸன் கோவாலு!
உழைப்பால் உயர்ந்து பல்வேறு சாதனைகள் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு, நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘எப்படிப்பா கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம?’ என உங்களுக்குத் தோன்றும் கேள்வியை, அடுத்து நான் சொல்லப்போவதற்கும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். விலை 300 ரூபாயாம். சரி, நமக்கென்ன? இதேபோன்று வேறு சிலருக்கும் புத்தகங்கள் எழுதப்பட்டால் எப்படி இருக்கும்?

நான் நடத்திய தர்ம யுத்தம்
மௌன சாமியாராக இருந்த காலம் முதல் மெரினாவில் தியான விரதம் இருந்ததுவரை சகல தகவல்களும் அடங்கிய நூல் இது. இதன் சிறப்பம்சமே ‘போர்க்குறிப்புகள்’ என்ற பெயரில் அடுத்து போருக்காகக் காத்திருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள்தான். அரசியல் மேல் கொஞ்சநஞ்சம் நல்லெண்ணம் இருப்பவர்களும் இந்த நூலைப் படித்து, தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அட்மினால் வீழ்ந்த கதை
தல அஜித்துக்கு நிகராக முதுகில் குத்தப்பட்டு வீழ்ந்த ஒருவரின் துரோகச் சரித்திரம். ஆள் இல்லாத நேரம் பார்த்து அட்மின் ஒருவர் ஸ்டேட்டஸ் போட, அதற்கு விழுந்த ஊமைக்குத்துகளைக் கதையின் நாயகன் தாங்கிய கதை இது. ஆனாலும், பெருந்தன்மைகொண்டு தாயுள்ளத்துடன் அட்மினை அடையாளம் காட்டாமல்விட்ட நெகிழ்ச்சிக்கதையும்கூட!
நடந்தேன் வாழி தமிழ்நாடு
நடந்து நடந்தே தமிழகத்தை அளந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு. அதற்காக அவரை, சென்சஸ் எடுக்கும் அதிகாரி எனத் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சட்டெனக் கண்ணில் குளம் வைக்கும் சென்சிட்டிவ் நபர் அவர். தமிழகத்தைச் சாலைவழி அணுகத் துடிக்கும் பயணிகளுக்கு இந்நூல் ஓர் அற்புத வழிகாட்டி. கூடவே, தமிழகம் டு ரோமாபுரி ரூட் மேப் இலவசம்.
அண்ணனின் தம்பி
இவரின் வாழ்க்கை வரலாற்றில் ஆமைகளைத் திருப்பிப்போட்டுப் பயணம் செய்திருக்கிறார். பறக்கும் டைனோசர்களின் றெக்கைகொண்டு விசிறி செய்திருக்கிறார். தீக்கோழியின் முட்டை ஓட்டில் கதகதப்பாகத் தங்கியிருக்கிறார். இதையெல்லாம் படித்துவிட்டுக் குழந்தைகளுக்கான ஃபேன்டஸி கதைகள் எனத் தவறாக எண்ணிவிடக் கூடாது. இது ஒரு கறுப்புச் சரித்திரம். தமிழரைப் புரட்டிப் போடவரும் விசித்திரம்.
ஓவியம்: பிரேம் டாவின்ஸி