அலசல்
Published:Updated:

மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்

மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்

மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்

ள்கட்சிப் பிரச்னை, எதிர்க்கட்சிப் பிரச்னை, வழக்குகள் என அரசியல் கட்சிக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்; அது அரசியல் விதி! ஆனால், தமிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க-வுக்கு இருக்கும் பிரச்னைகள் விசித்திரமானவை. அந்தக் கட்சியின் அடையாளங்களே வழக்குகளில் சிக்கிக் கிடக்கின்றன. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் சின்னத்தையும் முடக்கும் நோக்கத்தில் அ.தி.மு.க தொடர்ந்த வழக்கு, இப்போது அதன் கையில் இருக்கும் கட்சியின் பெயருக்கும் இரட்டை இலைச் சின்னத்துக்கும் கழுத்தறுக்கும் கத்தியாக மாறியிருக்கிறது.

மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்

சென்னை முதல் டெல்லி வரை வழக்குகள்!

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு,  அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகச் சசிகலா நியமிக்கப்பட்டார்.  பிறகு, சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன் அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.  அதையடுத்து, அந்தக் கட்சியின் பொருளாளரான ஓ.பி.எஸ் தனி அணியாகப் பிரிந்துபோனார். அவர், ‘அ.தி.மு.க என்ற கட்சியின் பெயரும் கொடியும் இரட்டை இலைச் சின்னமும் தனக்குத்தான் சொந்தம்’ என்று கேட்டுத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். அதையடுத்து, 2017 மார்ச்சில் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் முடக்கியது தேர்தல் ஆணையம். சசிகலா-தினகரன்-எடப்பாடி பழனிசாமி அணிக்கு ‘அ.தி.மு.க அம்மா’ என்ற பெயரையும் ஓ.பி.எஸ் அணிக்கு ‘அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா’ என்ற பெயரையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். கட்சிப் பெயரையும் சின்னத்தையும் மீட்பதற்காக, அப்போது ஒன்றாக இருந்த சசிகலா-தினகரன்-எடப்பாடி அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். ஓ.பி.எஸ் சார்பில், அதற்கு எதிரான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தப் பிரச்னை தேர்தல் ஆணையத்தில் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க-வின் உள்கட்சி அரசியல் அதிரடியாக நிறம் மாறியது. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த எடப்பாடி மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள், தினகரனைக் கட்சியிலிருந்து வெளியில் அனுப்பும் வேலையில் இறங்கினர். தினகரனை ஒதுக்கி வைக்கும் அறிவிப்பு வெளியானதும், வெளியேபோன ஓ.பி.எஸ் உள்ளே வந்து இணைந்து கொண்டார். அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா ஆகிய அணிகள் இணைந்துவிட்டதாக எடப்பாடியும் பன்னீரும் பொதுக்குழுவைக் கூட்டி அறிவித்தனர். அதோடு, கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளர் தினகரனையும் அந்தப் பொறுப்புகளிலிருந்து நீக்கியதாகப் பொதுக்குழு அறிவித்தது. ‘இந்தப் பொதுக்குழுவே செல்லாது; இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது’ என்று சசிகலா-தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்தச் சூழலில், தேர்தல் ஆணையம் 2017 நவம்பர் 23-ம் தேதி அ.தி.மு.க என்ற பெயரையும் அதன் சின்னமான இரட்டை இலையையும் ஓ.பி.எஸ்-மதுசூதனன் அணியிடம் ஒப்படைத்தது. அதை எதிர்த்து, சசிகலா-தினகரன் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!

இப்படி இரண்டு வழக்குகளும் நிலுவையில் இருக்கும் நேரத்தில், 2017 டிசம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது. அதில், தினகரன் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்பட 21 பேர் இப்போது தினகரன் பக்கம் உள்ளனர். இந்தச் சூழலில், எல்லாப் பகுதிகளுக்கும் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். ‘உள்ளாட்சித் தேர்தலோ, பொதுத்தேர்தலோ வந்தால், அனைத்துத் தொகுதிகளிலும் சுயேச்சையாகப் போட்டியிட முடியாது’ என்ற நெருக்கடியில் தினகரன் இருந்தார். அதனால், ‘அ.தி.மு.க என்ற கட்சி யாருக்குச் சொந்தம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை, தங்கள் அணியை அங்கீகரிக்கவும் தங்களுக்குத் தனியாக ஒரு சின்னத்தை ஒதுக்கவும்’ வேண்டித் தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தார். ‘மெயின்’ வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா புல்லி இந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றார். அவர், தினகரன் கேட்கும் பெயரையும் தினகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற குக்கர் சின்னத்தையும் அவருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். தேர்தல் ஆணையமும் அவற்றைத் தினகரனுக்கு ஒதுக்கிக் கொடுக்க முன்வந்தது. அதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனி அணியை உருவாக்கி, கறுப்பு-வெள்ளை-சிவப்புப் பட்டைகளின் நடுவில், ஜெயலலிதா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்தார் தினகரன்.

ஏப்ரல் 28 இறுதிக்கெடு! 

தினகரன் எதையாவது செய்துகொள்ளட்டும் என ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி விட்டிருந்தால், ‘தானுண்டு... தன் கட்சியுண்டு... தனக்கொரு கொடியுண்டு...’ என்று தினகரன் தனியாக ஆவர்த்தனம் நடத்திக்கொண்டு இருந்திருப்பார். ஆனால், ‘தினகரன் அணிக்குத் தனிச் சின்னம், தனிப்பெயரைக் கொடுக்கச் சொல்லித் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது செல்லாது. எனவே, அந்த உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும்’ எனக் கேட்டு ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ‘டீம்’ உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, மொத்தமாக இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து, ‘அ.தி.மு.க யாருக்குச் சொந்தம்’ என்ற மெயின் வழக்கையே ஏப்ரல் 30-ம் தேதிக்குள் முடித்து வைக்கச் சொல்லி டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதுதான், இப்போது இரட்டை இலைக்கு மீண்டும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மொத்தம் ஏழு விஷயங்கள் இருந்தன. ‘அ.தி.மு.க யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை விசாரிக்கத் தனி அமர்வை ஏற்படுத்த வேண்டும்; அப்படி அமைக்கப்படும் அமர்வில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க அணி இனிமேல் கூடுதல் ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யக் கூடாது; 2 வாரங்களுக்குள் தினகரன்-சசிகலா தரப்பு எதிர்மனு தாக்கல் செய்யலாம்; தினகரன் அணியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படும்; இந்த வழக்கை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அந்த அமர்வு முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்; இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் புதிதாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது; இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், தினகரன் தரப்பு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்’ என்பவை அந்த உத்தரவுகள். ஏப்ரல் 29, 30 ஆகியவை உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை நாள்கள். அதனால், ஏப்ரல் 28-ம் தேதிதான் இப்போதைக்கு இறுதிக்கெடு! 

மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்

சாதகம் யாருக்கு? பாதகம் யாருக்கு?

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மூன்றுவிதமான உத்தரவுகள் வருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.

* ‘சசிகலா-தினகரன்-இ.பி.எஸ் ஒன்றாக இருந்தபோது நடந்த நியமனங்கள், தேர்தல் ஆணையத்தில் கொடுத்த ஆவணங்கள்தான் சரி’ என்று தீர்ப்பு வெளியானால், அது சசிகலா-தினகரன் தரப்புக்கு வெற்றியாக முடிந்துவிடும்; அது தொடர்பான அனைத்து வழக்குகளும் ரத்தாகிவிடும்.

* ‘ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகள் இணைந்தபிறகு, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் குளறுபடிகள் உள்ளன; கையெழுத்துக்களில் மாறுபாடுகள் இருக்கின்றன’ என்று தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னையை முதலிலிருந்து மீண்டும் விசாரிக்கச் சொல்லித் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடலாம். அப்படி உத்தரவாகி, இந்தப் பிரச்னை மீண்டும் தேர்தல் ஆணையத்துக்குப் போனால், உடனே அ.தி.மு.க என்ற பெயரும் அந்தக் கட்சியின் சின்னமும் முடங்கிவிடும். அதன்பிறகு, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி புதிதாக ஒரு பெயரையும் சின்னத்தையும் கேட்க வேண்டும்.

* ‘ஓ.பி.எஸ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள்தான் சரி’ என்று தீர்ப்பு வந்தாலும், அது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தினகரன் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையையும் உருவாக்காது. அவர் அதைத் தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவுசெய்து, அதே பெயரிலேயே இயங்கலாம். ஆக, தீர்ப்பு எப்படி வந்தாலும் அது தினகரனுக்குப் பாதகமாக இருக்காது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், அது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிக்குப் பாதகம் என்றுதான் சொல்லமுடியும்.

தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசினோம். ‘‘டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள மெயின் வழக்கைப் பொறுத்த வரையில், அது ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிக்குச் சாதகமாக இருக்காது. காரணம், சமீபத்தில் ‘ஆம் ஆத்மி’ கட்சி வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. என்ன காரணங்கள் மற்றும் ஷரத்துகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்ததோ, அதே காரணங்களும் ஷரத்துகளும்தான் அ.தி.மு.க மெயின் வழக்குக்கும் பொருந்துகிறது. ஆம் ஆத்மி கட்சி வழக்கில், ‘பொதுக்குழு உறுப்பினர்களை நேரில் அழைத்து விசாரிக்கவில்லை; இரு தரப்புக்கும் குறுக்கு விசாரணை நடத்தும் வாய்ப்பை வழங்கவில்லை; ஆவணங்களில் போலித்தன்மை இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையமே அதன் உத்தரவில் ஒப்புக்கொண்டுள்ளது. அந்தப் போலித்தன்மையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாதது இயற்கை நீதிக்கு எதிரானது’ என டெல்லி உயர்நீதிமன்றம் சொன்னது. அதே பிரச்னைகள்தான் அ.தி.மு.க வழக்கிலும் உள்ளன.

மீண்டும் முடங்குமா இரட்டை இலை? - ஏப்ரல் 28 திக்திக்

நாங்கள் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டுபோய் நிறுத்தினோம். அவர்களை விசாரிக்கவில்லை. ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் தாக்கல் செய்திருந்த ஆவணங்களில் போலித்தன்மை உள்ளது என்பதைத் தேர்தல் ஆணையம் அதன் உத்தரவில் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, அந்த அணியிடம் கட்சியை ஒப்படைத்த தேர்தல் ஆணையத்தின் முடிவு செல்லாது’ என்றே மீண்டும் தீர்ப்பு வரும். அதுவும் எங்களுக்கு வெற்றிதான். அப்படி இல்லையென்றால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் நாங்கள் இயங்குவதற்குத் தடை விதிக்க முடியாது. இது தனிக்கட்சி என்று அர்த்தமாகிவிடும். எனவே, அதுவும் எங்களுக்கு வெற்றிதான்’’ என்றார்.

- ஜோ.ஸ்டாலின்

கொடிக்குத் தடைபோட முடியுமா?

தி
னகரனின் கட்சிக் கொடியில், கறுப்பு-வெள்ளை-சிவப்பு பட்டைகள்கொண்ட கொடியின் நடுவில் ஜெயலலிதா படத்தைப் போட்டுள்ளார். அதை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கறுப்பு-வெள்ளை-சிவப்பு எங்கள் கட்சியின் (அ.தி.மு.க) கொடியைப் போன்றே உள்ளது. எனவே, தினகரன் இதைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளனர்.

தினகரன் தரப்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘கறுப்பு-வெள்ளை-சிவப்பு என்பது அ.தி.மு.க கொடியில் இல்லை. மாறாக, அ.தி.மு.க கொடியில் 50 சதவிகிதம் கறுப்பும், 50 சதவிகிதம் சிவப்பும் மட்டுமே உள்ளன. அந்தக் கொடியில் உள்ள அண்ணாவின் உருவம் வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளதே தவிர, வெள்ளைப் பட்டை இல்லை. மேலும், தமிழகத்தில் திராவிடர் கழகம் தோன்றி, அதன்பிறகு தோன்றிய திராவிடக் கட்சிகள் அனைத்தும் கறுப்பு சிவப்பைத்தான் பயன்படுத்தியுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதோடு, 14 கட்சிகளின் கொடிகளையும் நீதிமன்றத்தின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளனர்.

தி.க, தி.மு.க, பெரியார் தி.க, ம.தி.மு.க, வீரப்பன் ஆரம்பித்த எம்.ஜி.ஆர் கழகம், எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோதே எஸ்.டி.சோமசுந்தரம் ஆரம்பித்த நமது கழகம், திருநாவுக்கரசர் தொடங்கிய எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க., சந்திரகுமார் தலைமையில் உருவான மறுமலர்ச்சி தே.மு.தி.க, தீபா ஆரம்பித்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, திண்டுக்கல் முருகன் என்பவர் தொடங்கிய அண்ணா- எம்.ஜி.ஆர் தி.மு.க., மக்கள் நீதி மய்யத்தின் கொடி ஆகியவையே அவை.