அலசல்
Published:Updated:

“உச்ச நீதிமன்றமும் நமக்கு எதிரியா?”

“உச்ச நீதிமன்றமும் நமக்கு எதிரியா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“உச்ச நீதிமன்றமும் நமக்கு எதிரியா?”

காவிரி பயணத்தில் எழுந்த கேள்வி

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. அதில், 2-வது பயணக் குழுவினர் தங்கள் பயணத்தை அரியலூரில் தொடங்கினர். 

அரியலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் மத்திய, மாநில அரசுகளை வெளுத்து வாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “காவிரி விவகா ரத்தில் மத்திய, மாநில அரசுகள்தான் தமிழகத்துக்கு எதிராக இருக்கின்றன என்றால், அதில் உச்ச நீதிமன்றமும் இணைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை, மத்திய அரசு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட்டது. இதற்கு என்ன எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஏராளமான புகார்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கூறியுள் ளார்கள். இவரைத்தான், காவிரிப் பிரச்னையில் நாம் நம்பியுள்ளோம். ஆறு வார காலத்துக்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என நீங்கள்தானே கறாராகச் சொன்னீர்கள் நீதிபதிகளே? தீர்ப்பைப் புரட்டிக்கூடப் பார்க்காத மோடி அரசு, ஆறு வார காலம் முடிந்த பிறகு ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறது. அதற்காக, மத்திய அரசைக் கண்டித்திருக்க வேண்டாமா? அந்த மனுவை ஏற்கிறீர்களே, இது நியாயமா? வரைவுத்திட்டத்தை மே 3-ம் தேதி தாக்கல் செய்யச் சொல்கிறீர்கள். பிறகு, வாதப் பிரதிவாதங்கள் நடக்குமாம். இதெல்லாம் நடக்கிற கதையா? மோடி ஆட்சி இருக்கும்வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது. எனவே, மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்’’ என்றார்.

“உச்ச நீதிமன்றமும் நமக்கு எதிரியா?”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும். அது நடக்காததாலேயே, தமிழக அரசை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமரைச் சந்திக்கத் தமிழகத்திலிருந்து யாரும் கடிதம் தரவில்லை எனக் கூறியுள்ளார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? ‘பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்’ என்று தமிழக அமைச்சர் ஒருவர் சொல்லியிருப்பது வேதனைக்குரியது. நீங்கள் போராட வரவில்லை என்றாலும் பரவாயில்லை, போராட்டங்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்’’ என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நம்பவைத்துக் கழுத்தை அறுத்த கதையாக ஆகிவிட்டது. 50 எம்.பி-க்களை வைத்து நாடாளுமன்றத்தை முடிக்கி விட்டதாக அ.தி.மு.க-வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், அனைத்துக் கட்சியினர் பிரதமரைச் சந்திக்க இவர்களால் நேரம் வாங்க முடிய வில்லை. இதைவிட வெட்கக்கேடான செயல் உண்டா? இது, தமிழக அரசுக்குத் தலைகுனிவு இல்லையா? இனி உச்ச நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகளை நம்பி, எந்தப் பயனும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

- எம்.திலீபன்