அலசல்
Published:Updated:

ஞாபகம் இருக்கா மோடி?

ஞாபகம் இருக்கா மோடி?
பிரீமியம் ஸ்டோரி
News
ஞாபகம் இருக்கா மோடி?

ப.திருமாவேலன்

ப்போது இந்தியாவின் மாட்சிமை தாங்கிய பிரதமர் பதவியில் பேசாப் பூச்சி மன்மோகன் சிங் இருந்தார். எந்த அத்வானியைப் பிரதமராக்க முந்தைய 10 ஆண்டுகள் நீங்கள் துடித்தீர்களோ, அவரையே இருட்டில் தள்ளிவிட்டு பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக நீங்கள் ஆனீர்கள். தேர்தல் நேரத்தில், தமிழ்நாட்டுக்கும் வந்தீர்கள். ராமநாதபுரத்தில் என்ன பேசினீர்கள் என்று ஞாபகம் இருக்கா மோடி?

‘‘இந்தியாவில் ஏழ்மையைப் போக்குவதே எனது கடமை. ஏழ்மையின் வலியை உணர்ந்தவன் நான். ஏனென்றால், ஏழைத்தாயின் மகன் நான். என்னை எதிர்த்து நிற்பவர் இளவரசர். அவர் ஏழைகளைப் பார்ப்பதாக இருந்தால் கேமராவுடன்தான் போவார். ஆனால், நான் ரயிலில் பெட்டி பெட்டியாக ஏறி டீ விற்றவன். ஏழ்மையை அனுபவித்தவன். எனக்கு 300 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாருங்கள். இந்தியாவின் ஏழ்மையைப் போக்குகிறேன்’’ என்று புதிய ரட்சகராகப் புறப்பட்டுவந்து பேசினீர்கள். காவிரி டெல்டா ஏழை விவசாயிகளின் அழுகுரல் உங்களுக்குக் கேட்க வில்லையா? தமிழ் மக்களின் அபயக்குரல் கேட்கவில்லையா?

ஞாபகம் இருக்கா மோடி?

மன்மோகன் சிங் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டே, ‘துணிச்சல் இல்லாதவர்’ என்பதுதான். இதன்மூலம் உங்களை இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதராகக் காட்டிக்கொண் டீர்கள். பாகிஸ்தான் ஏன் வாலாட்டுகிறது? ‘பயப்படும் பிரதமர் இருப்பதால்’! இலங்கை ஏன் தமிழக மீனவர்களைச் சுடுகிறது? ‘துணிச்சலற்ற பிரதமர் இருப்பதால்’! இப்படியெல்லாம் நீட்டி முழக்கினீர்கள். இந்த இரும்பு மனிதர் இப்போது கர்நாடகாவைப் பார்த்துப் பயப்படுவது ஏனோ? சித்தராமையாவைப் பார்த்துப் பயப்படும் நீங்கள் சீனாவிடமிருந்து இந்தியாவை எப்படிக் காப்பாற்றுவீர்கள்? எடியூரப்பாவின் யோக்கியதை எங்களைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த மனிதரை முதலமைச்சர் ஆக்குவதற்காக லட்சக்கணக்கான ஏக்கர் தமிழக மண் பரப்பு காய்ந்து கருகவும் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கவும் ஆகும் சூழ்நிலைதான், நீங்கள் காட்ட நினைத்த வளர்ச்சி இந்தியாவா?

நீங்கள் சட்டம் தெரியாதவர் அல்ல. காவிரி நடுவர் மன்றம் என்பது சட்டபூர்வமான அமைப்பு. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள்’ என்று காவிரி நடுவர் மன்றம்தான் சொன்னது. ‘காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு எப்போது மத்திய அரசின் அரசிதழில் வெளியானதோ, அன்று முதல் அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கான மரியாதை தரப்பட வேண்டும்’ என்பதும் சட்டம். அதன்பிறகும் இந்த ஏழையின் மகன், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லையே... என்ன காரணம்? தமிழ் ஏழையின் கண்ணீர் என்ன இனிக்குமா? பி.ஜே.பி-க்கு வாக்களிக்காதவனாக இருக்கலாம். ஆனால், அவனும் இந்தியன்தானே!

‘காவிரி குறித்த செயல்திட்டம் பற்றிய அறிவிக்கை வெளியிட்டால், கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும்’ என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ளது. இதைச் சொல்வதற்கு இரும்பு மனிதருக்குக் கூச்சமாக இல்லையா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல் படுத்தினால் ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றால் ராணுவம் எதற்கு? உச்ச நீதிமன்றம்தான் எதற்கு? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனால் அதுபற்றி மத்திய அரசுக்குக் கவலை இல்லையா?

‘காவிரி விவகாரம் கர்நாடகாவில் உணர்வுபூர்வமான பிரச்னையாக இருந்து வருகிறது’ என்கிறது மத்திய அரசின் மனு. அது தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமான பிரச்னையாக இல்லையா? இங்கு கலவரம் நடக்கவில்லையா? சாவு இல்லையா? தற்கொலைகள் இல்லையா? கர்நாடகாவில் தேர்தல் வருகிறது என்பதெல்லாம் விவசாயத்துக்கு ஒரு காரணமா? பருவத்தே பயிர் செய்வாயா? தேர்தல் இல்லாத நேரத்தில் பயிர் செய்வாயா? தேர்தல் நடக்காத காலம் என்ற ஒன்று உண்டா? சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும். சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாத அவகாசம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாத அவகாசம்.. இப்படித் தேதி குறித்துச் சாவதற்குச் சபிக்கப்பட்டவனா தமிழ் விவசாயி?

மக்களின் மறதியின் மீது உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்’ என்று பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் சொன்னது என்றும், ஆறு வார கால அவகாசம் தந்தது என்றும், அந்த அவகாசம் மார்ச் 29-ம் தேதி முடிந்தது என்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ‘எங்களுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வேண்டும்’ என்று நல்ல பிள்ளையாக மத்திய அரசும் கேட்கிறது. ஆனால், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள்’ என்று உச்ச நீதிமன்றம் உண்மையில் சொன்னது 2018 பிப்ரவரி 16-ல் அல்ல, 2016 செப்டம்பர் 20-ம் தேதி. அதாவது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஊறுகாய்ப் பானையில் ஊறப்போடுவதைப்போல 18 மாத காலம் வைத்திருந்துவிட்டு, மேலும் மூன்று மாத காலம் கேட்பது அவகாசமா? அலட்சியமா?

ஞாபகம் இருக்கா மோடி?

ஓவியம்: பிரேம் டாவின்சி

2016 செப்டம்பரில் கர்நாடகாவில் எந்தத் தேர்தலும் நடக்கவில்லை. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னதும், சரி என்று ஒப்புக்கொண்டு வந்தார் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி. யார் என்ன சொன்னார்களோ? மறுநாளே வந்து, ‘இப்படி உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது’ என்றார். பி.ஜே.பி-யிலிருக்கும் கர்நாடக லாபி அவ்வளவு வேலை செய்தது. தேவகவுடா உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு பி.ஜே.பி மத்திய அமைச்சர்களும் காங்கிரஸின் மாநில அமைச்சர்களும் ஆதரவு தந்தனர். ‘‘மோடி என்னுடன் பேசினார். உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறேன்’’ என்றார். என்ன பேசினார் என்பதை அவர் சொல்லவில்லை. ஆனால், அது ஊரறிந்த ரகசியம்.

விடை எழுதத் தெரியாதவன்தான் கேள்வியில் சந்தேகம் கேட்பான். அதைப்போல ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று 40 நாள்கள் கழித்துக் கேட்டது மத்திய அரசு. ‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் என்ன ஸ்கீம் சொல்லப்பட்டுள்ளதோ, அதை நிறைவேற்றுங்கள்’ என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இதில் வியாக்கியானம் செய்யவோ, விளக்கம் பெறவோ எதுவுமில்லை. விதண்டாவாதம், வீண் பிடிவாதம் மட்டுமே இருக்கின்றன. இந்தச் சொல்லுக்குப் பொருள் கேட்க 40 நாள்களா? ‘அப்போதே கேட்க வேண்டியதுதானே? இது காலம் கடத்தும் உத்தி’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சொல்லியிருக்கிறார்.

‘மே 3-ம் தேதிக்குள் வரைவுத் திட்டம் தாக்கல் செய்யுங்கள்’ என்றும் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மே 3-ம் தேதி வந்து மத்திய அரசு கால அவகாசம் கேட்கும். இன்னும் நாள்கள் இழுபடும். அதுதான் நடக்கப் போகிறது.

இதற்குள் எத்தனைமுறை தமிழகத்திலிருந்து கூக்குரல் எழும்பியது? பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. பிப்ரவரி 22-ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 24-ல் சென்னை வந்தார் பிரதமர். அவர் கலந்துகொண்ட கூட்டத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘தைரியமாக’ பேசினார். ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’’ என்றார். பிரதமர் பதில் சொல்லவில்லை. பிரதமரை அனைத்துக் கட்சிகளும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. நேரம் தரப்படவில்லை. தமிழகத் தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்கு மார்ச் 13-ம் தேதி கடிதம் எழுதினார். அதற்கு இரண்டு நாள்கள் கழித்துத் தமிழகச் சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் அன்றைய இரவே (மார்ச் 15) பிரதமருக்கு அனுப்பப்பட்டது. தமிழகத் தலைமைச் செயலாளர் மார்ச் 21-ம் தேதியும், 23-ம் தேதியும் கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதினார்.

சுமார் 17 நாள்கள் அ.தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தினார்கள். வெளியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தி.மு.க எம்.பி-க்களும் கலந்துகொண்டார்கள். மக்களவை சபாநாயகர் தம்பிதுரை வெளிப்படையாகவே மத்திய அரசை விமர்சித்துப் பேசினார். தமிழக பி.ஜே.பி-யின் ‘காவிரிக் குழு’ உறுப்பினர்களான இல.கணேசன், கருப்பு முருகானந்தம், பொன்.விஜயராகவன் ஆகியோர் மார்ச் 28-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மனு கொடுத்தார்கள். தமிழகம் முழுக்கப் போராட்டங்கள். டெல்லிக்கும் சென்று போராடினார்கள் தமிழக விவசாயிகள். எதற்குமே அசைந்து கொடுக்காமல் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, மார்ச் 29-ம் தேதி நீதிமன்றத்துக்குப் போய்க் கேள்வியில் சந்தேகம் கேட்கும் வேகத்துக்குப் பின்னால் இருக்கும் விஷமம் மக்கள் அறியாததல்ல.

இவ்வளவுக்குப் பிறகும், ஏப்ரல் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கர்நாடகா தேர்தலைப் பற்றித்தான் பேசினார். சட்டம் ஒழுங்கு கெடும் என்றார். என்ன அபத்தம் இது? கர்நாடகாவில் தேர்தல் முடியும்வரைக்கும் மத்திய அரசு செயல்படவே செயல்படாதா? மத்திய கேபினட் மந்திரிகள் சாப்பிடுவதே இல்லையா?

‘‘மத்திய அரசு அமைக்க இருக்கும் செயல்திட்டத்தை நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு அமைக்க வேண்டுமா, அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய குழுவாக அமைக்க வேண்டுமா என்று ஆலோசித்து வருகிறோம்’’ என்கிறார் அட்டர்னி ஜெனரல். இதுகூடத் தெரியாதவர்களா மத்திய சட்டத்துறையில் இருக்கிறார்கள். நீர்ப் பிரச்னையைத் தீர்க்க நதிநீர் விவகாரங்களை அறிந்தவர்கள்தான் இருக்க வேண்டும். டாக்டர் களா இருப்பார்கள்? இசைக் கலைஞர்களா இருப்பார்கள்? இதையெல்லாம் படிக்கும் நமக்கே கூசுகிறதென்றால், சொல்வதற்குச் கூச்சம் இல்லையா?

காவிரித் தண்ணீர் கேட்டால், ‘தண்ணி வேணும்னா தருவேன். காவிரித் தண்ணிதான் வேணும்னா கிடையாது போ’ என்று வாட்டர் கேன் பாய் மாதிரி பேசுகிறார் சுப்பிரமணியன் சுவாமி. காவிரியில் தமிழகத்துக்கு உரிமை உண்டு. அதைக் கேட்கக் கூடாது என்று சொல்ல இவர் யார்? சுப்ரீம் கோர்ட்டைத் தாண்டிய சூப்பர் மேனா? ‘ரொட்டி கேட்டால், கேக் சாப்பிடுங்கள்’ என்றதைப்போல, காவிரியைக் கேட்டால், ‘கோதாவரி நதிநீரை இணைக்கப்போகிறோம், தண்ணீர் வரும்’ என்கிறார் நிதின் கட்கரி. தரைச்சாலை போடுவது வேறு, நீர்ச்சாலை போடுவது வேறு. காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது. அதையே கர்நாடகம் தர மறுக்கிறது. அதை வாங்கித் தரவே மத்திய அரசுக்குத் துணிச்சல் இல்லை. மகாராஷ்டிரா தாண்டி, தெலங்கானா வழியாக, ஆந்திரா வந்து, கர்நாடகா கடந்து, தமிழ்நாட்டுக்குக் கோதாவரி வரும் என்பதும் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவோம் என்பதும் ஒன்றுதான்.

ஞாபகம் இருக்கா மோடி? ‘விவேகானந்தர் தவம் செய்த மண்ணில் நின்று சூளுரைக்கிறேன்’ என்று நீங்கள் சொன்னது! ‘‘பிஜே.பி பொறுப்பேற்றால் கங்கை - காவிரி நதிநீர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும். தமிழக விவசாயிகளின் பாசன நீர்ப் பிரச்னையைத் தீர்த்து வைப்போம். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 60 மாதத்தில் செய்து முடிப்போம்’’ என்றீர்கள். 45 மாதங்கள் முடிந்துவிட்டன. பாசன நீர்ப்பிரச்னை மேலும் சிக்கலுக்குள்ளானதுதான் மிச்சம்.

பேசும் இடம் கன்னியாகுமரியா? ‘இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலமாக மாறி கன்னியாகுமரி மக்களின் வாழ்க்கைத் தரமே இன்னும் சில மாதங்களில் உயரப் போகிறது’ என்பது. பேசும் இடம் ஈரோடா? ‘ஜவுளி உற்பத்தி மையமாக ஈரோடு மாறப்போகிறது’ என்பது. பேசும் இடம் ராமநாதபுரமா? ‘மீன் வளம் எங்குள்ளது என்பதை சாட்டிலைட்மூலம் அறியலாம்’ என்பது. இவையெல்லாம் செய்து முடிக்கப்பட்டுவிட்டனவா? மக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருந்தால், பி.ஜே.பி-யை மக்களே காப்பாற்றுவார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்ததால்தான், ரஜினிகாந்துகளின் கால்ஷீட்களுக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது.

‘இந்தியாவைக் காப்பாற்ற வந்த ரட்சகர்’, தமிழ்நாட்டுக்குப் புது ரட்சகரைத் தேட வேண்டிய நிலைமைக்கு ஆளானதற்கு யார் காரணம் என்று நீங்களே யோசியுங்கள் மோடி!