Published:Updated:

`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது!' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்

`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது!' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்
`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது!' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்பில் பா.ஜ.க-வின் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது என்றும் இதன் மூலமாகக் கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேடிய அவர், ``பாரதிய ஜனதா பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு , மதச்சார்பின்மைக்கு, சமூகநீதிக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களும்  ஐயப்பனைத் தரிசிக்கலாம் என்று தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கின்ற கேரள அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.

பெண்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கான உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்தபோது, இந்திய நாட்டை ஆளுகின்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினரும் அதனுடைய துணைப் பிரிவுகளும், இந்து மதத்தின் உரிமைகளுக்காக எனச் சொல்லி போராடுகின்ற ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி இந்து அமைப்பினர் வேண்டுமென்றே திட்டமிட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கின்ற வகையில் ஐயப்பன் கோயிலுக்கு வருகின்ற பெண்களைத் தடுப்பதும், பத்திரிகைகள், வண்டி வாகனங்களை அடித்து நொறுக்குவதும், எங்களை மீறி இங்கு சட்டத்தின் ஆட்சி நடத்த முடியாது என்று கொக்கரிப்பு செய்வதும் ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல.

இந்திய நாட்டின் உச்சபட்ச அதிகாரம் உச்ச நீதிமன்றம்தான். அந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. நாம் அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வாழ்கிறோம். சாதாரண இந்திய நாட்டின் குடிமகன், நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்காமல் இந்த மண்ணில் வாழ முடியுமா. ஆனால், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, இந்து அமைப்புகள், நாங்கள் மதிக்க மாட்டோம்' என்று பெருமளவில் பெண்களைத் திரட்டி போராடுவது ஏற்புடைய செயலா என்ற கேள்வியைப் பாரதிய ஜனதாவின் தலைமையிடம் முன்வைக்கிறேன். மக்களின் வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டும். மரபுகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை உச்ச நீதிமன்றத்தில் முறையாகத் தெரிவித்திருக்கலாம். இதனால் ஏற்படும் பின் விளைவுகள் அல்லது மரபு சார்ந்த வழிபாட்டு உரிமையை நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பாக, 'எங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்' என்று கோரிக்கையை முன்வைத்திருக்கலாம்.

இந்திய கலாசாரம், பண்பாடு ஆகியவை சிறப்பானவை. உலகமே இதை வியந்து பார்க்கிறது. தற்போது கேரளாவில் மதச்சார்பின்மை அரசு நடந்து வருகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பி.ஜே.பி-யினர் சபரிமலை விவகாரத்தைக் கையிலெடுத்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் பாபர் மசூதி இடிப்பு, அயோத்தி பிரச்னையில் பா.ஜ.க-வின் தலையீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. அதே போன்று கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்பில் பா.ஜ.க-வின் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது. இதன் மூலமாகக் கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது" என்றார்.

மேலும், ``எடப்பாடி பழனிசாமி அரசைப் பாதுகாக்கும் பா.ஜ.க-வின் தூண்டுதலால்தான் 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாகிறது. தமிழக மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்திருக்கின்ற நன்மதிப்பை நீதியரசர்கள் வருங்காலத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதிகாரிகளை வைத்து மாவட்டம்தோறும் ஆய்வு நடத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் டம்மியாக உள்ளனர்’’ என வேல்முருகன் குற்றச்சாட்டினார்.