Published:Updated:

தினகரன் பங்காளியா... பகையாளியா?! - ஜெயக்குமார் பதில்

தினகரன் பங்காளியா... பகையாளியா?! - ஜெயக்குமார் பதில்
தினகரன் பங்காளியா... பகையாளியா?! - ஜெயக்குமார் பதில்

அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனுக்கும், தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்குள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.  

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டதால் விலக்கி வைக்கப்பட்ட டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். அதன்பிறகுதான் தினகரனுக்கும், ஒன்றிணைந்த அ.தி.மு.க-வுக்குமான மோதல் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக தினகரனுக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தைப் போர் அவ்வப்போது உச்சகட்டத்தை எட்டும். அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தினகரன் ``உங்களுக்குத்தான் சட்டசபை ஃபுளோர் டெஸ்ட் என்றாலே பயம் ஏற்படுகிறதே... நான் சொல்கிறேன்..சின்னம்மாவால் முதலமைச்சராக, அமைச்சராக உட்கார்ந்திருக்கிறீர்கள். அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சராகவோ அல்லது அமைச்சராகவோ பதவி ஏற்றுப் பாருங்கள். நாங்கள் தடுக்கவில்லை" என்றார். தினகரனின் இந்தப் பேச்சு இரு தரப்புக்கும் இடையே இருந்துவரும் அனலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

தினகரனின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்த டி.ஜெயக்குமார், ``இது அம்மா கொடுத்த பதவி. இதைப் பற்றிப் பேச தினகரனுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. எந்தவொரு மூட்டைப்பூச்சியாலும், கரப்பான் பூச்சியாலும் எங்களை அழிக்கமுடியாது" என்றார். பதிலுக்குத் தினகரனோ, ``ஜெயக்குமார் ஒருடெங்குக் கொசு" எனப் பேசியிருந்தார். தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஒரு விமர்சனத்தை வைத்திருந்தார். ``ஆமைக்குக் கை, கால் முளைத்த மாதிரி ஊடகத்தின் முன்பு புலம்பி விட்டுப் போகவேண்டாம். நீ புகுந்த வீடு உருப்படாது" என்று ஜெயக்குமார் பற்றிக் குறிப்பிட்டார். இப்படியான வார்த்தைப் போர் உச்சத்தை அடைந்த நிலையில், சற்றே ஓய்ந்தது போல் தோன்றியது. ஆனால், தற்போது மீண்டும் இரு தரப்புக்குமான தனிப்பட்ட வசைபாடல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 

அக்டோபர் 17 -ம் தேதி பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``ஊர் நெல தெரிஞ்சே உடும்பத் தோளில் போட்டுக் கொண்டானாம் ஒருத்தன். அது என்ன பழமொழி என்றால், `மதிலேறி திருட வந்த ஒருவன், மக்களைப் பார்த்தவுடன் அந்த உடும்பைக்காட்டி, தான் திருடன் இல்லை' என வித்தைக் காட்டினானாம்" என்றார். 

ஜெயக்குமாரின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தினகரனும் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ``ஏற்கெனவே ஊடகத்தின் முன்பு கூறியிருக்கிறேன். திரும்பவும் கூறுகிறேன். அண்ணன் ஜெயக்குமார் `பஃபூன்' மாதிரிப் பேசுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர் ஒரு அமைச்சர் மாதிரியாப் பேசுகிறார்?" எனக் கேள்வியெழுப்பிய தினகரன், ``அவர் ஒரு மைக் குமார்" எனக் கிண்டலடித்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜெயக்குமார், ``நான் மைக் குமார் அல்ல...மைக் டைசன்" என்றார். 

இதற்குத் தினகரன் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்புடன், `சபாஷ், சரியான போட்டி' என 'வஞ்சிக் கோட்டை வாலிபன்' பட பாணியில் போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியலில் இவர்கள் இருவருக்குமான வார்த்தைப் போர்.

``நான் மைக் முன்பு நிற்கவில்லை என்றால், நாட்டுக்குச் செய்தியே இருக்காது. அந்த வகையில்தான், என்னை மைக் குமார் என்று விமர்சனம் செய்து பேசியுள்ளார் தினகரன். ஒரு பக்கம் மைக் குமாராக இருந்தாலும், மறுபக்கம் மைக் டைசன் நான் என்று பதில் கூறியிருக்கிறேன். நானும் தனிப்பட்ட முறையில் தினகரன் மீது விமர்சனங்களை வைக்க முடியும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் ரீதியான  கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவன் நான். ஆரம்பத்திலிருந்தே தனிப்பட்ட விமர்சனத்தை தினகரன் தரப்பினர் கையிலெடுத்துப் பேசி வருகின்றனர். அதற்கு நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை"  என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் வெற்றிவேல் பற்றிக் கேட்டோம். 

``தினகரன், வெற்றிவேல் ஆகிய இருவரும் குறிப்பாக உங்களை மட்டுமே தாக்கிப் பேசக் காரணம் என்ன? "

``இது எங்களுடைய இருவருக்குமான தனிப்பட்ட பிரச்னை இல்லை. தினகரன் பங்காளியும் இல்லை. பகையாளியும் இல்லை. மேலும்   வெற்றிவேலைப் பற்றிப் பேசத் தேவையில்லை. அரசியல் ரீதியான கொள்கைகள் எங்களுக்குள் மாறுபட்டுள்ளது. சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை எப்போதும் ஏற்க மாட்டோம். என்றாலும், எங்கள் மீது தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஆனால், நான் அதுபோன்ற தனிப்பட்ட தாக்குதலை நான் புறந்தள்ளி விடுகிறேன். இதுவரை தினகரனை தனிப்பட்ட முறையில் நான் ஒருபோதும் தாக்கிப்பேசியதில்லை" என்றார்.