அலசல்
Published:Updated:

மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!

மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!

மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!

வம்பர் முதல் வாரத்தில் ஒரு திருமணத்துக் காகவும், கருணாநிதியைப் பார்க்கவும் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, சாந்தோம் நெடுஞ்சாலையிலும் கோபாலபுரத்தி லும் ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். கார் கதவைத் திறந்து, எழுந்து நின்று உற்சாகமாக அவர்களைப் பார்த்துக் கையசைத்தார் மோடி. ஐந்தே மாதங்களில் நிலைமை மாறிவிட்டது. #GoBackModi என்ற ஹேஷ்டேக், உலக அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க, சாலைகளைத் தவிர்த்து வானத்திலேயே வந்துபோயிருக்கிறார் மோடி. காவிரிப் போராட்டம் அந்த அளவுக்குக் கொதிநிலையைக் கூட்டிவிட்டது.

டிரோன் தேடல்!


பிரதமர் வருவதற்கு முந்தைய நாள் மத்திய உளவுத்துறையான ஐ.பி அதிகாரிகள் பதற்றத்துடன் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டனர். ‘சென்னைக்குள் பிரதமர் எங்கும் சாலையில் வரவில்லை என்பதால், வானத்தில் கறுப்புக்கொடி காட்டப் போகிறார்கள். ஆளில்லாமல் ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன் விமானங்களில் கறுப்புக்கொடி கட்டிச் சில அமைப்புகள் பறக்கவிடத் திட்டமிட்டுள்ளன. மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பிறகு மதியம் அடையாறிலும் பிரதமர் இறங்கும் நேரத்தில் இதைச் செய்யப் போகிறார்கள்’ என்ற தகவலை அவர்கள் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே சென்னை வந்திருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்புப்படை அதிகாரிகள் 32 பேர், விமான நிலையத்திலும் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி வளாகங்க ளிலும் கண்காணிப்பைத் தீவிரமாக்கினர்.

இன்னொரு பக்கம் சென்னை போலீஸாரும் உஷார் செய்யப்பட்டனர். ‘டிரோன் மூலம் வானத்தில் கறுப்புக்கொடி காட்டும் திட்டம் உள்ளதா?’ எனப் பல அமைப்புகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். சென்னையில் டிரோன் பறக்க விடுவதற்கு அனுமதி இல்லை. ‘இதைமீறி யாராவது பறக்கவிட்டால் கண்டுபிடிக்க முடியுமா?’ என்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் தாம்பரம் விமானப்படை விமானத் தளத்திலும் வான்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகளிடம் கேட்டனர். ‘டிரோன்கள் ரேடாரில் தெரியாது. அதனால் கண்டுபிடிப்பது சிரமம்’ என அவர்கள் கைவிரித்துவிட்டனர். அதனால் டென்ஷனுடன் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். ஆனால், பலூன் வடிவில் வந்தது போராட்டம்.    

மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!

கறுப்பு பலூன்... எச்சரித்த ஐ.பி!

மோடி வரும்போது கறுப்புக்கொடி ஆர்ப் பாட்டம் நடைபெறும் என முதலில் தி.மு.க அறிவித்தது. பிறகு, பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் இப்படியே அறிவித்தன. ஆனால், தரைமார்க்கமாக பிரதமர் வரவில்லை என்று தெரிந்த பிறகு, போராட்டத் திட்டமும் மாறியது. தி.மு.க தரப்பில் கறுப்பு பலூன்கள் பறக்கவிட முடிவு செய்யப்பட்டது. இந்தத் தகவலை முன்கூட்டியே மோப்பம் பிடித்த மத்திய உளவுத் துறையான ஐ.பி, அந்தத் தகவலை டெல்லிக்கு பாஸ் செய்ததது. ‘கறுப்புக்கொடி காட்டுபவர் களைக் கைது செய்யலாம். கறுப்பு பலூன்களைப் பறக்கவிடுபவர்களை என்ன செய்வது’ எனப் புரியாமல் உளவு அமைப்புகள் தவித்துள்ளன.

நாம் தமிழர் கட்சி சார்பில், மோடி வரும் நேரத்தில் விமான நிலையம் எதிரே கறுப்பு பலூன்களைப் பறக்கவிட முடிவு செய்து, ஒரு மினி வேனில் நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்களை ஏற்றிக்கொண்டு வந்தனர். கத்திபாரா மேம் பாலத்தில் அந்த வேனை போலீஸ் மறித்தது. அங்கிருந்தே பலூன்களைப் பறக்கவிட்டு போலீஸாருக்குத் தண்ணி காட்டினார்கள் நாம் தமிழர் கட்சியினர். போலீஸார் வேகமாக பலூன்களை உடைக்க ஆரம்பித்தனர். அதற்குள் நிறைய பலூன்களை வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தனர் நாம் தமிழர் கட்சியினர்.

தென் சென்னை மாவட்ட தி.மு.க சார்பில் ராட்சத பலூன் ஒன்றை, ‘மோடி திரும்பிப் போ’ என்ற வாசகத்துடன் பறக்கவிடத் தயாரானார்கள். ஆனால், போலீஸ் தடுத்ததால், அடுக்குமாடியின் மேல் பகுதியில் பலூனைக் கட்டி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிறய அளவிலான ஆயிரக்கணக்கான கறுப்பு பலூன்கள் தென் சென்னை மாவட்ட தி.மு.க சார்பில் பறக்கவிடப்பட்டன. மோடி, அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வந்த நேரத்தில், தி.மு.க-வினர் திடீரென பலூன்களைப் பறக்கவிட்டனர்.

மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!

தடுத்து நிறுத்தப்பட்ட தலைவர்கள்!

சீமான், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் விமான நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தபோது, திரிசூலம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் வந்திருந்த தொண்டர்கள், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர்கள்மீது ஏறி நின்று கறுப்புக்கொடிகளைக் காட்டினர். அந்தப் பகுதியில் இருந்த உயரமான கட்டடங்கள்மீது ஏறிநின்றும் அவர்கள் கறுப்புக்கொடி காட்டினர். வேல்முருகன், மணியரசன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மோடி வந்த விமானம் தரையிறங்கிய நேரத்தில், போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்தன. 

காலை 8.30 மணிக்கே பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், கௌதமன் உள்பட 20-க்கும் மேற்பட்ட திரையுலகத்தினர் விமான நிலையம் வந்தனர். உள்நாட்டு விமான நிலையம், பழைய விமான நிலையம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், சர்வதேச விமான நிலையத்துக்குள் புகுந்து இவர்கள் எதிர்ப்பு காட்டினர்.

கறுப்புச்சட்டை கருணாநிதி!

கோபாலபுரம் இல்லத்தில் இருந்துகொண்டே மோடியின் வருகைக்குத் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்,  தி.மு.க தலைவர் கருணாநிதி. வெள்ளைச் சட்டையும் மஞ்சள் துண்டுமாகவே காட்சியளிக்கும் கருணாநிதியை, கறுப்புச் சட்டை அணிவித்து போட்டோ எடுத்து வெளியிட்டனர். கறுப்புச் சட்டைமீது, தான் வழக்கமாக அணியும் மஞ்சள் துண்டை மறக்காமல் அணிந்திருந்தார் கருணாநிதி. அவரின் கோபாலபுரம் வீட்டிலும் அண்ணா அறிவாலயத்திலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன.

‘விமானத்தில் மேலே பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய்க் கறுப்புக்கொடிகள் அசைவதைப் பாருங்கள். கறுப்பு என்கிற நெருப்பு அணையாது’ என்று கடுமையாக ட்விட்டரில் பதிவுசெய்து தனது காவிரி உரிமை மீட்புப் பயணத்தைக் கறுப்பு டிரஸ்ஸில் கடலுார் மாவட்டத்தில் ஸ்டாலின் துவக்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கிண்டி கவர்னர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்திக் கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டார். பலூன்கள் பறக்காமல் முரண்டு பிடிக்க, கம்பை வைத்து அடித்து மேலே தள்ளினார் வைகோ. 

மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!

கறுப்புச்சட்டையைக் கழற்றிய காவலர்கள்!

சென்னை விமான நிலையம் வழியாகக் கறுப்புச் சட்டையுடன் சென்றவர்களை நிறுத்தி, சட்டையைக் கழற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர் போலீஸார். கத்திபாராவைத் தாண்டிச் சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, கறுப்புச்சட்டை பயணிகளைக் கீழே இறக்கியது காவல்துறை. கறுப்பைக் கண்டாலே காவல்துறையினர் கதிகலங்கினர்.

பலூன்களால் மாறிய பாதை!


சென்னை முழுக்க பல இடங்களில் கறுப்பு பலூன்கள் பறந்ததால், மோடியின் வான் பயணத்தில் கடைசி நிமிடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சென்னையிலிருந்து மாமல்லபுரத்துக்கு அவர் சென்ற ஹெலிகாப்டர், வழக்கமான பாதையைத் தவிர்த்து தாம்பரத்தையொட்டிப் பறந்து சென்றது. அதனால், 10 நிமிடங்கள் தாமதம். இந்த மாற்றம் காரணமாக, சென்னையில் இறங்கவேண்டிய இரு விமானங்கள் தாமதமாகத் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன. ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து மீனம்பாக்கம் திரும்பியபோதும், பாதை மாறியே பறந்தது ஹெலிகாப்டர். இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும், ஐ.ஐ.டி வளாகத்தில் மெக்கானிக்கல் சயின்ஸ் பிளாக் வாசலை பிரதமரின் கார் கடந்தபோது, மோடியின் முகத்துக்கு நேரே மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டிவிட்டனர்.  

 - எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, க.பாலாஜி, வி.ஸ்ரீனிவாசுலு, கே.ஜெரோம், வி.நரேஷ்குமார்