அலசல்
Published:Updated:

சோறா... ஸ்கோரா? - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்

சோறா... ஸ்கோரா? - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
சோறா... ஸ்கோரா? - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்

சோறா... ஸ்கோரா? - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்

‘‘நான் ஸ்கூல் படிக்கும்போது, கிரிக்கெட் விளையாடப் போறப் பெல்லாம் ‘கிரிக்கெட்டா உனக்கு சோறு போடப்போவுது’னு எங்கம்மா வெளக்கமாத்தாலயே மொத்தும்.’’ - இது நம் நிருபர் எம்.புண்ணியமூர்த்தியின் ஃபேஸ்புக் பதிவு. விளையாட்டு சிலருக்குச் சோறு போடுகிறது. விளையாட்டைத் தடுப்பதால் சோறு கிடைக்குமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஐ.பி.எல் போட்டிகளைச் சென்னையில் நடத்தக் கூடாது எனப் பல தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில், ‘சோறா... ஸ்கோரா?’ என்பது முக்கியமான முழக்கமாக இருந்தது.

அந்தப் போராட்டங்களின் விளைவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் இங்கு விளையாடவிருந்த ஆறு ஐ.பி.எல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டன.  ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் முதல் போட்டி நடைபெற்றபோது, ‘‘சென்னை யில் எல்லாப் போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறும்’’ என அமர்த்தலாகச் சொன்னார் ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா. அடுத்த நாளே முடிவு மாறிவிட்டது. ‘சென்னையில் பாதுகாப்பு தர முடியாது’ என மாநில போலீஸார் மறுத்து விட்டதே அதற்குக் காரணம்.

சோறா... ஸ்கோரா? - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்

காவிரிக்காக உணர்வுடன் போராடிய சிலர் மனதில்கூட, ‘ஐ.பி.எல்-லைத் தடுத்தால் காவிரி வந்துவிடுமா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படிக் காவிரிக்காக இதுவரை நடந்த எல்லாப் போராட்டங்களையும்கூட இதுபோலக் கேள்வி கேட்கலாம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவையும் ஆளும்கட்சியும் உண்ணாவிரதம் இருந்ததால் காவிரி வந்துவிட்டதா? மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான போராட்டங்கள் நடத்தியதால் காவிரி வந்துவிட்டதா? போராட்டம் என்பது ஓர் அடையாளம். ‘நான் எதிர்க்கிறேன்’ என்பதை உணர்த்தும் வெளிப்பாடு. எங்கோ, விருதுநகர் பக்கம் ஒரு கிராமத்தில் கடை வைத்திருப்பவர் ஒருநாள் கடையடைப்பு செய்கிறார். காவிரி நீர் வந்தால் அவருக்கு நேரடிப் பலன்கள் எதுவுமில்லை. ஆனால், அவர் போராடுகிறார் என்றால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் உரிமையை மீட்கும் மக்கள் உணர்வில் கலக்கிறார் என்பதே அர்த்தம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துத் தூத்துக்குடி யில் போராட்டம் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் லண்டன் அலுவலகம் எதிரே, பிரிட்டன் தமிழர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் நேரடிப் பாதிப்பு எதுவுமில்லை. ஆனாலும் ஏன் போராடுகிறார்கள்? தங்கள் உணர்வால் தெரிவிக்கும் ஆதரவு அது. ஐ.பி.எல் எதிர்ப்புப் போராட்டமும் அப்படிப்பட்டதுதான்.

அமைதியான சூழல் இருக்கும்போதுதான் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்பது உலக நியதி. உலகப்போர்கள் நடைபெற்றபோது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. இங்கேகூட, தேர்தல் காலத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நாட்டைவிட்டே வெளியேறி வேறு நாடுகளில் நடைபெற்றன. ஒரு மாநிலமே கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது அங்கு அமைதியான முறையில் விளையாட்டுப் போட்டி எப்படி நடக்கும்?

சோறா... ஸ்கோரா? - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்

‘ஐ.பி.எல் போட்டிகள் சென்னையைவிட்டு வேறு இடங்களுக்குப் போவதால், தமிழ்நாட்டுக்கு வருமானம் போய்விட்டது’ என்பது இன்னொரு குற்றச்சாட்டு. போட்டிகளால் கிடைக்கும் வரி வருமானம் உள்பட எல்லா வகைகளிலும் தமிழகத்துக்குக் கிடைத்திருக்க வேண்டியது, சுமார் 10 கோடி ரூபாய் மட்டுமே! காவிரி ஓராண்டு பொய்த்தால் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு சுமார் ரூ. 2,500 கோடி. இது லட்சக்கணக்கான விவசாயிகளின் தனிப்பட்ட இழப்பு. இது எத்தனை விவசாயிகளைக் கடனில் தள்ளியிருக்கும், எத்தனை விவசாயிகளை வீதியில் நிறுத்தியிருக்கும், எத்தனை பேரைத் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளியிருக்கும் என்ற கணக்கு யாரிடமும் இல்லை.

‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சென்னை அணி ஐ.பி.எல் போட்டியில் இடம் பிடித்தது. போட்டிகளைத் தமிழ்நாட்டு ரசிகர்கள் சொந்த மண்ணில் ரசிக்கவிடாமல் செய்து விட்டார்கள்’ என்பதும் ஒரு குறையாகச் சொல்லப் படுகிறது. இரண்டு ஆண்டுகளில் சி.எஸ்.கே அணி வந்துவிட்டது. ஆனால், காவிரி சுமார் 50 ஆண்டுகளாக வரவில்லையே! சென்னையில் இருக்கும் MIDS நிறுவனம், இஸ்‌ரோ செயற்கைக்கோள் உதவியுடன் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. ‘1971-ல் இருந்ததைவிட இப்போது அங்கு தரிசு நிலங்கள் பல மடங்கு அதிகரித்துவிட்டன’ என்கிறது அந்த ஆய்வு. தஞ்சை மாவட்டத்தில் 71-ல் தரிசு நிலங்கள் 44 சதுர கி.மீ 2014-ம் ஆண்டில் 186 சதுர கி.மீ அளவுக்கு அதிகரித்திருந்தது. நாகையில் இது 12 சதுர கி.மீ என்பதிலிருந்து 297 சதுர கி.மீ அளவுக்கு அபாயகரமாக அதிகரித்திருந்தது. திருவாரூரில் 5.58 சதுர கி.மீ என்பதிலிருந்து 52.7 சதுர கி.மீ அளவுக்கு அதிகமாகியிருந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியத்துக்கு இதைவிடப் பெரிய இழப்பாக எதைச் சொல்வது?

இப்போதுகூட மத்திய அரசின் கருத்து என்னவாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் ‘ஒரு வரைவுத் திட்டம் கொடுங்கள்’ என உத்தர விட்டதற்கு மறுநாள் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், ‘‘பெயர் முக்கியம் இல்லை’’ என்று சொல்லி, ‘காவிரி மேலாண்மை வாரியம் வராது’ என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். ‘‘காவிரித் தீர்ப்பை மத்திய அரசு விரும்பியபடி எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்த லாம் என்பதற்கான வழியையே உச்ச நீதிமன்றம் அமைத்துக் கொடுத்துள்ளது’’ என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள். ‘1956 நதிநீர் தாவா சட்டம் பிரிவு 6A படி ஒரு வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வகுத்துவர வேண்டும்’ என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. சட்டத்தின் அந்தப் பிரிவு, மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், அவர்கள் விரும்பியபடி மேலாண்மை வாரியமோ, மேற்பார்வைக் குழுவோ, வேறு ஏதோ ஒன்றையோ அமைக்கலாம்.

அநேகமாக, ஐ.பி.எல் ஃபைனலுக்கு முன்பாகவே மத்திய அரசின் முடிவு தெரிந்துவிடும்.

- அகஸ்டஸ்
படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு

டி-ஷர்ட்டைக் கொளுத்து... விற்பனையை நிறுத்து!

‘வ
ன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே ஆபத்து’ என ரஜினிகாந்த் போட்ட ட்வீட், ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டத்தைவிடப் பரபரப்பாகப் பேசப்பட்டது.’’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடந்து வரும்போது கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முதலில் அறிவித்தார். அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட அனைத்து இயக்கங்களும் வழிமொழிந்தன. கிரிக்கெட் போட்டி நடந்த சேப்பாக்கம் ஸ்டேடியத்தைச் சுற்றிலும் திரண்ட கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தங்கர்பச்சான், கவுதமன், மணியரசன் ஆகியோரைக் கைதுசெய்த போலீஸார் அதன்பிறகு கூட்டத்தைக் கலைக்கத்  தடியடி நடத்தினார்கள். தடுப்புகளைத் தாண்டி உள்ளே நுழைய முயன்ற கருணாஸையும் கைது செய்தார்கள். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீஸுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் தனியாகச் சிக்கிய போலீஸ்காரர் ஒருவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இதை வைத்துத்தான் ரஜினி கொந்தளித்தார்.

‘‘அமைதி வழியில் பலர் போராடினாலும் சிலர் வன்முறையைக் கையில் எடுத்தார்கள்.  மைதானத்தை நோக்கி வந்த ரசிகர்களை இவர்கள் தாக்கினார்கள். அதிர்ச்சியில் ரசிகர்கள் ஓடினர். மஞ்சள் டி-ஷர்ட் அணிந்து வந்தவர்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். அதன்பிறகும் நாங்கள் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?” என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

‘‘இந்தப் போராட்டமே மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிரான போராட்டம். இதுகூட போலீஸாருக்குப் புரியவில்லை. நாங்கள் கூட்டமாகக் கூடியதிலிருந்தே எங்களைக் கோபப் படுத்துவது மாதிரி போலீஸில் சிலர் சீண்டினார்கள். நாங்கள் அமைதியாகக் கலைந்தாலும் அடித்திருப்பார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போதும் நடந்தது” என்கிறார்கள் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். 

- அ.சையது அபுதாஹிர்

‘‘ஐ.பி.எல்-லைத் தடுத்தா காவிரி வந்துடுமா?’’

எஸ்.வி.சேகர்:
இது அராஜகமான போராட்டம். ஜெயலலிதா இருந்திருந்தா ஒருத்தர்கூட ரோட்டுக்கு வந்திருக்கமாட்டாங்க. ஐ.பி.எல்-லைத் தடுத்தா காவிரி வந்துடுமா? மோசமான முன்னுதாரணத்தை இந்த லெட்டர்பேடு கட்சிகள் செஞ்சிருக்கு. கடமையைச் செய்யறவங்களைத் தாக்குவது, மஞ்சள் சட்டை போட்டுவந்த ரசிகர்களைத் தாக்குவது. நான் கேட்கிறேன். சினிமாக்காரர்களுக்கு என்ன புதுசா பற்று வந்திருக்கு? அப்படியே பொங்கிட்டிருக்காங்க. காவிரிக்காக 50 ஆண்டுகள் பொறுத்த நாம, இன்னும் 40 நாள்கள் பொறுக்கமாட்டோமா? காவிரியில் நமக்காக நிச்சயம் நல்ல வழியை மோடி கொடுப்பார். போராட்டம் செஞ்சவங்களை ஒரு மணி வரை உக்கார வெச்சு, விட்டதே தப்பு. அவங்களையெல்லாம் 15 நாள் ரிமாண்டு செஞ்சிருக்கணும். அப்போதான் சரிப்படுவாங்க. உன்னுடைய உணர்வை இன்னொருவர் தலைக்குள் திணிக்க நினைப்பதே தீவிரவாதம். இந்தத் தீவிரவாதம்தான், போராட்டங்கிற பேர்ல நடந்திருக்கு.

சோறா... ஸ்கோரா? - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்

சீமான்: வாகனத்தில் தம்பதியாகப் போனவர்களை எட்டி உதைத்துக் காவல்துறை தாக்கியதில் அந்தத் தங்கை இறந்துபோனாள். அதுகுறித்து கருத்து கேட்டபோது பதில் சொல்லாமல் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போனார் ரசினிகாந்த். இப்போ மட்டும் ஏன் ட்வீட்டு போடுறாரு ட்வீட்டு? காவல்துறை எங்களைத் தாக்கியது. அதை எல்லாத் தொலைக்காட்சிகளும் காட்டின. அதுபற்றி எந்த ட்வீட்டும் போடல. நான் விலக்கிவிடத்தான் அங்கே போனேன். களத்துல நீங்க இருந்தீங்களா? ஒண்ணுமே தெரியாத நீங்க எதுக்குப் பேசுறீங்க? கர்நாடகாவில் தாக்கப்படும் தமிழர்களைக் காக்கக் கடும் சட்டம் வேண்டும்னு நீங்க ஏன் துடிக்கல? ஏன்னா, நீங்கள் அதிகாரத்தின் குரல். அடித்தட்டு மக்களின் உணர்வும் நியாயமும் உங்களுக்குப் புரியாது. இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடக் கூடாதுன்னு ஜெயலலிதா தடை போட்டாங்களே. அப்போ எங்கே போயிருந்தாரு எஸ்.வி.சேகர்?    

இயக்குநர் வ.கவுதமன்: தமிழ்நாடே ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும்போது இந்தக் கேளிக்கை ஒரு கேடா என்றுதான் கேட்கிறோம். அறவழியில்தான் எங்கள் போராட்டத்தை முன்னெடுத்தோம். வன்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இனத்தில் நாங்கள் பிறக்கவில்லை. ஆனால், எங்களை அடிக்கும்போது நாங்கள் என்ன செய்வது? சொல்லுங்கள். முதலில் தாக்கியது யார்? காவல்துறையே எங்கள்மீது கல்லெறிந்து, இதை ஒடுக்க நினைத்தார்கள். தேசிய விருது பெற்ற, தமிழ் மண்ணின் அடையாளமான இயக்குநர் வெற்றிமாறனைத் தாக்குவதுதான் நீங்கள் கட்டிக்காக்கும் தேச அறமா? இனத்துக்காகப் போராடும் நாங்கள் போராளிகள்.

- சே.த.இளங்கோவன்