Published:Updated:

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

எம்.கணேஷ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

எம்.கணேஷ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

``நல்லா இருக்கீங்களா  தாத்தா?’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார் வைகோ. அவள் கையில் வைத்திருந்த தண்ணீர்ச் செம்பை வாங்கிக் குடித்துவிட்டு, ‘`நல்லா இருக்கேன். நல்லா படிக்கணும்… சரியா?’’ என்று சொல்லிவிட்டுக் கீழிறக்கி விடுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் ஒரு நாள் நடந்துகொண்டே  பேச ஆரம்பித்தேன்.

``இந்த நடைப்பயணம் உங்களின் பத்தாவது நடைப்பயணம். தேனி மாவட்ட மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’

“போராட்டக்குணம் கொண்ட இந்த மக்களுக்கு நான் பழக்கப்பட்டவன்தானே. ஒவ்வொரு வீட்டின் வெளியேயும் குடும்பத்தோடு நின்று என்னை வரவேற்று வாழ்த்துகிறார்கள். போராட்டம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள். நியூட்ரினோவை எதிர்த்து நான்காவது முறை இந்த மக்களைச் சந்திக்கிறேன். இரண்டு முறை வாகனப் பிரசாரம், ஒரு முறை மேதா பட்கருடன் இணைந்து போராட்டம். இப்போது நடைப்பயணம்.”

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

`` ‘மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தால், நியூட்ரினோ திட்டத்தைத் செயல்படுத்தமாட்டோம்’ என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறாரே?’’

“ஓ.பன்னீர்செல்வத்திடம் நான் போனில் பேசினேன். ‘நியூட்ரினோ திட்டத்தை A பிரிவில் இருந்து B பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். மோசடி வேலைகளைச் செய்து நியூட்ரினோ திட்டத்தைத் தேனிக்கு, அதுவும் உங்கள் தொகுதிக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதற்குத் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கக் கூடாது’ என்று சொன்னேன். ‘சரிங்கண்ணே… உங்களிடம் இருக்கும் தகவலை எல்லாம் எனக்குக் கொடுத்து அனுப்புங்க… நான் படித்துப் பார்த்துவிட்டு ஒரு முடிவு எடுக்கிறேன்…’ என்றார். உடனே, ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜனை அழைத்து, பன்னீர்செல்வத்தைச் சந்திக்கச் சொன்னேன். அவர், எவ்வளவோ முயற்சி செய்தும், இன்றுவரை சந்திக்க அனுமதி கொடுக்காமல் இருக்கிறார் பன்னீர்செல்வம். மத்திய அரசு சொல்வதை அப்படியே செய்யக்கூடிய தலையாட்டி பொம்மைகள் இவர்கள். ஒருவேளை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுத்தால், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் எந்த அளவுக்குப் போராடி வெற்றிபெற முடியும் என்று தெரியவில்லை. இது பற்றி ஒவ்வொரு நாளும் கவலையோடு சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

``ரவியின் தீக்குளிப்புச் சம்பவம்..?’’

“என்னை மிகவும் பாதித்து விட்டது. மிகப்பெரிய இழப்பு எனக்கு. கட்சியில் 25 வருடம் என்னுடன் இருந்தான். வருடம் தோறும் என் படம் போட்ட காலண்டரை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வருவான். ரொம்ப உணர்வுள்ள, அறிவானவன். நான் எழுதிய நான்கு புத்தகங்களைத் தனது சொந்தச் செலவில் வெளியிட்டான். என்மீது அவ்வளவு பாசம் அவனுக்கு. அன்று 12.13மணிக்குத் தனது முகநூலில், `நான் தீக்குளிக்க இருக்கிறேன்’ என்று பதிவிட்டுவிட்டு, 1.15மணிக்குத் தீக்குளித்துவிட்டான். ‘ஏண்டா இப்படிப் பண்ணினே’னு அழுதுகிட்டே அவனிடம் கேட்டேன். ‘நீங்க அழாதீங்க… நியூட்ரினோவால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். அதைத் தடுக்கத்தான் நீங்க இவ்வளவு தூரம் நடைப்பயணம் செய்ய இருக்கீங்க. இதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கணும்னுதான் தீக்குளித்தேன்’ என்று சொன்னான். அதைக் கேட்டு உடைந்துபோய்விட்டேன்.”

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

``உங்களுக்கும் சீமானுக்கும் இடையே என்னதான் பிரச்னை?’’

“எட்டு ஆண்டுகளாகவே நான் பொறுமையாக இருக்கிறேன்.  தமிழன் இல்லை, தெலுங்கன் என்று என்னைச் சீமான் கீழ்த்தரமாகப் பேசுவதோடு, ‘ஈரோடு ராமசாமி நாயக்கன்’ என்று பெரியாரை எல்லா மேடைகளிலும் பேசினார். `இந்த அண்ணாதுரை என்ற முட்டாள், தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டான்…’ என்று தொடக்க காலத்தில் பேசினார். அண்ணாவையும், பெரியாரையும் இப்படி ஏசுகிறாரே என்று சகித்துக்கொண்டே இருந்தேன். பின்னர் நண்பர்கள் சொன்னார்கள், ‘பெரியாரைத் தாக்குவது உங்களை காலிபண்ணுவதற்காகத்தான்’ என்று. இதைப் பற்றி நான் வெளியில் பேசுவதில்லை. நான் மதுரையிலிருந்து புறப்படும்போது புலி, வில், கயல் கொடி பிடித்து நடந்துவந்ததைப் பார்த்து, மறுநாளே தனது முகநூலில் அதே போல் கலர் மாற்றிப் போட்டுக்கொண்டார் சீமான். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என நினைத்துக்கொண்டு புலிகளின் சின்னத்தைத் தனது கொடியில் வைத்துக்கொண்டுள்ளார். பிரபாகரனுடன் தான் பலநாள்கள் இருந்ததாகவும், வேட்டைக்குச் சென்றதாகவும், ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் பொய் சொன்னார். இவரை வெறும் எட்டு நிமிடம்தான் பார்க்க அனுமதித்தார் பிரபாகரன். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ‘புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?’ என்று சீமான் கேட்டதற்கு மறுத்துவிட்டார் பிரபாகரன். பிரபாகரனுடன் போட்டோ எடுத்ததுபோல கிராஃபிக்ஸ் செய்துகொண்டார். நான் புலிகள் சீருடையில், ஒரு மாதம் அந்தக் காட்டில் பிரபாகரனுடன் இருந்தவன், பிரபாகரனிடம் ராணுவப் பயிற்சி பெற்றவன். நூலிழையில் உயிர்பிழைத்து வந்தவன் நான். இதையெல்லாம் நான் விளம்பரம் செய்யவில்லை.”

``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?’’

“தமிழக டெல்டா பகுதிகளை வறண்ட பூமியாக மாற்றிவிட்டால் அம்பானி, அதானி போன்ற கார்பரேட் குழுமங்கள், குறைந்த விலையில் அந்த நிலங்களை வாங்கி, உள்ளே இருக்கும் இயற்கை எரிவாயுக்களை எடுத்து விற்பனை செய்யலாம் என்பதே திட்டம். உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை ஒரு ஏமாற்றுவேலை. அந்த ஸ்கீமைப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நான் இதைச் சுட்டிக்காட்டினேன். தீர்ப்பை வாசித்துக் காட்டி, ‘இது ஒரு மோசடி வேலை’ என்றேன். எல்லாம் தெரிந்தும் இப்போது ஏன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறார்கள்? எல்லாம் மோடியின் சொல்படி நடக்கும் ஆட்டம். டெல்லியில் இருந்துகொண்டு இங்கே ஓ.பி.எஸ், எடப்பாடி இருவரையும் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் மோடி. சுயமரியாதை இழந்து, முதுகெலும்பு இல்லாமல் இவர்களும் வளைந்துகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பழியிலிருந்து இவர்கள் தப்ப முடியாது. ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல நடந்திருக்காது.”

``மார்க்சிஸ்ட் கட்சியினர் நியூட்ரினோ திட்டத்தை வரவேற்கிறார்களே?’’

“முதலில் மீத்தேனை ஆதரித்தார்கள். மக்கள் கடுமையாக எதிர்த்தபிறகு, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள். கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பின்னர், விரிவாக்கம் வேண்டாம் என்று சொல்லி அமைதியாகி விட்டார்கள். ஈழப்பிரச்னையில் புலிகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இவ்வளவு ஏன், சமீபத்தில், மூலக்கொத்தலம் சுடுகாட்டுப் பிரச்னையில்கூடத் தவறாகத்தான் முடிவெடுத்தார்கள். இப்படித் தமிழக மக்களின் பொதுப்பிரச்னையில் முதலில் ஒரு முடிவும், பின்னர் மக்களின் போராட்டங்களைப் பார்த்துத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுமே அவர்களின் வழக்கமாக உள்ளது. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், இதே நியூட்ரினோ பிரச்னையில் மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி, தன்னெழுச்சியாகப் போராடும்போது நியூட்ரினோவை இவர்கள் எதிர்ப்பார்கள்.

கடும் விமர்சனத்தை ஸ்டாலின் மீது கடந்த காலங்களில் வைத்தவர் வைகோ. தற்போது ஸ்டாலினுடன் கைகோக்க என்ன காரணம்?

“மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமரவிடக்கூடாது என்பதற்காகத்தான்  ஸ்டாலினுடன் கைகோத்தேன். மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மோடியை எதிர்த்தால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும். மதவாதச் சக்திகளுக்கு மீண்டும் நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. ம.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் தாய்க்கழகமாம் தி.மு.க-வுடன் இணைந்து செயல்படுவதை வரவேற்கவே செய்கிறார்கள். கடந்த காலங்களில் சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும், தற்போது தமிழகம் இருக்கும் சூழலில், மத்திய அரசின் வஞ்சகத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்க,  மோடியை மீண்டும் பிரதமர் ஆக விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலினுடன் சேர்ந்திருக்கிறேன். சேர்ந்தே பயணிப்போம்.”

``தி.மு.க கூட்டணியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ போட்டியிடுவாரா?’’

“அது கட்சியின் முடிவு, நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள். இப்போதைக்கு நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.”

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

``சீமான் ஆதரவாளர்கள் வெளியிட்ட மீம்ஸ்களால் ரவி மனம் உடைந்திருந்தார் என்று நீங்கள் கூறியிருந்தீர்களே…’’

“ஆமாம். சீமான் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக என்னைத் தாக்கி முகநூலில் வெளியிட்ட பதிவுகளும் ரவியைக் கடுமையாக பாதித்திருக்கிறது. சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, சீமான் ஆதரவாளர்களால் ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டது. ‘ஸ்டெர்லைட் டீல் முடிந்துவிட்டது. அடுத்ததாக நியூட்ரினோ டீலுக்குக் கிளம்பிவிட்டான் வைகோ’ என்று சொல்லும் அந்த மீம் ரவியை பாதித்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.”

``உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு, `மீம்ஸ்களுக்கெல்லாம் கோபப்படலாமா?’ என்று பதில் கொடுத்திருக்கிறாரே சீமான்?’’

“ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி, சீமான் பல கோடி வசூல் செய்திருக்கிறார். ‘நாம் தமிழர்’ கட்சியின் மாநாடு நடத்த, ஈழத்தமிழர்கள் அமைப்புகளிடம் மூன்று கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். அவர்கள் தர மறுத்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன், புலிகளின் கர்னல் பரிதியைச் சுட்டுக்கொன்ற துரோகக் குழுவைச் சேர்ந்த இருவர் தற்போது சீமானின் மெய்ப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.”

``பிரதமர் மோடி இன்றும் உங்கள் நண்பர்தானா?’’

“பார்த்தவுடன், ‘ஹல்லோ வைகோ’ என்று சொல்லி மோடி கட்டிப்பிடித்துக்கொள்வார். நான் அவரை எவ்வளவு அட்டாக் செய்தாலும் இன்னமும் அந்தத் தனிப்பட்ட உறவை மெயின்டெயின் பண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது அரசியல் செயற்பாடுகளைப் பார்த்தால், இத்தாலியின் முசோலினி மாதிரி இந்தியாவின் முசோலினியாக வந்துகொண்டிருக்கிறார் மோடி என்றுதான் சொல்ல வேண்டும்”

``வரும் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும்?’’

“நிச்சயம் மோடி வெற்றி பெற முடியாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும். அவர் மீண்டும் வருவதைத் தடுக்க வேண்டும்.”