Published:Updated:

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5
அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5

- கரு.முத்து

ஏழாயிரம் கோடியில் எம்.ஏ.எம்.முக்கு வந்தது எவ்வளவு என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். ஆனால் அவரோ ‘‘என்னிடம் யாரும் எந்த பணமும் தரவில்லை’’ என்று முன்பு ஒருமுறை நம்மிடம் ஒரே போடாக போட்டு எல்லாவற்றையும் மறுத்து விட்டார். ஆனால் புரோக்கர்கள் அவரிடம் கொண்டுபோய் பணம் கொட்டிய தகவல்கள் லாரி லாரியாய் ஏற்றலாம் போல அவ்வளவு கதை சொல்வார்கள்.
 

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5

வேலைக்கு பணம் வாங்கிய அவர், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையெல்லாம் படவில்லை. சம்பளம் கொடுப்பது பல்கலையின் கடமை நமக்கென்ன வந்தது என்று கல்லாவை இருக மூடிக்கொண்டார். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மூலமும் மற்ற வகைகள் மூலமும்  எவ்வளவு  வருமானம் வருகிறதோ அதற்கும் செலவு வைக்க ஆரம்பித்தார்.

தேவையே இல்லாமல் புதிய புதிய கட்டிடங்களை கட்ட உத்தரவிட்டார். கட்டிடம் கட்டுவதற்கு என்ன அவசியம்? கட்டுமான நிறுவனம் அவருடையை செட்டிநாடு பில்டர்ஸ்  நிறுவனம். ஆவுடையார்கோவில் திருப்பணி போல எந்த நாளிலும் அவரது நிறுவனம் அங்கே கட்டிடம் கட்டி பல்கலைக்கழகத்தின் நிதியை அபேஸ் செய்து கொண்டது. பல்கலைக்கழகத்தின் நிதியை இன்னும் எப்படி லாவகமாக தங்கள் நிறுவனத்துக்கு திருப்பலாம் என்று யோசித்துப் பார்த்தார் எம்.ஏ.எம். அவராக யோசிப்பாரா இல்லை அவரது அடிவருடிகள் யோசனை சொல்வார்களா என்று தெரியவில்லை.

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை வைத்து ஒரு திட்டம் போட்டார்கள். அது சுயநிதி மருத்துவக் கல்லூரி. மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து அதிலிருந்துதான் கல்லூரியை நடத்த வேண்டும். அப்படி கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அதுதவிர ஒரு சீட்டுக்கு நாற்பது லட்ச ரூபாய் அளவுக்கு நன்கொடையும் வாங்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் வைத்து மருத்துவக் கல்லூரியை நடத்தாமல் அதை அப்படியே கல்லாவுக்குள் கொண்டு போய் பூட்டியவர் தனது மதுராகோட்ஸ் ஆலைக்கும், செட்டிநாடு சிமெண்ட்ஸ் ஆலைக்கும் அதனை முதலீடு செய்தார். நஷ்டத்தில் இயங்கிய அந்த ஆலைகள் இந்த முதலீட்டால் மெல்ல மெல்ல லாபத்திற்கு திரும்பியது. மருத்துவக்கல்லூரியின் ஒட்டுமொத்த செலவுகளையும் பல்கலைக்கழகத்தின் தலையில் கட்டினார்.
 

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5

மருத்துவக் கல்லூரியின் மருத்துவர், செவிலியர் ஊதியங்கள், மாணவர்களின் படிப்பிற்காக அங்கு இயங்கும் மருத்துவமனையின் அத்தனை செலவினங்களும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து எடுத்து செலவிடப்பட்டது. அதனால் தேவையே இல்லாமல் பல கோடி ரூபாய்கள் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் செலவு பிடித்தது . இப்படி செலவுகளை செய்ததோடு மட்டும் விட்டு விடவில்லை. பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து இரண்டாயிரம் கோடி ரூபாயை மருத்துவக் கல்லூரிக்காக ஒதுக்கி எடுத்துக் கொண்டார்களாம். அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக நிதி தேய்ந்து வந்த பல்கலைக்கழகம் அதற்குபிறகு ஒட்டுமொத்தமாக திண்டாட ஆரம்பித்தது.

ஏற்கனவே அதிகப்படியான ஊழியர்களால் மாதம் 40 கோடி ரூபாய் அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருந்தது. அதனால் கையிருப்பு எல்லாம் மெல்ல கரைந்து கொண்டே வந்தது. அந்த நேரத்தில் கை கொடுத்தது தொலைதூர கல்வி மையம். அங்கு வந்த வருமானம் முழுவதையும் சம்பளம் போடுவதற்காக எடுத்துக் கொண்டார்கள். அதனால் அங்கு 15000 ரூபாயாக இருந்த பி.எட் படிப்புக்கான கட்டணம்  சென்ற ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அந்த படிப்பிற்கு ஐநூறு பேருக்குத்தான் அனுமதி என்று சொல்லப்பட்ட நிலையில் பல ஆயிரம் பேர்வரை சேர்க்கப்பட்டார்கள். ஆனாலும் நிதி போதவில்லை. ஊழியர்களின் சேமநலநிதி, ஓய்வு ஊதிய நிதி என்று எல்லா நிதியிலிருந்தும் எடுத்து சம்பளம் போட்டார்கள். அப்படியும் போதவில்லை. இந்த நிலைமை எம்.ஏ.எம்.மின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு வந்து ஒருவாரம் தங்கி ஆய்வு நடத்தினார்.

மேற்கண்ட எல்லா விஷயங்களும் அவருக்கு முழுமையாக தெரிய வந்தது. இனிமேல் பல்கலைக்கழகம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் தாங்கள் எடுத்துச் சென்ற பல்லாயிரம் கோடி ரூபாயை திரும்ப பல்கலைபஙகழக நிதியில் சேர்த்தாலே போதும் என்று அவருக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் முன்புபோல் அவர்கள் இப்போது கல்விச்சேவையா செய்கிறார்கள். கல்வி வணிகம்தானே செய்கிறார்கள். அதனால் ஊழியர்கள் தலையில் கை வைக்க முடிவெடுத்தார். இருப்பதில் பாதிப்பேரை வெளியில் அனுப்பினாலோ அல்லது எல்லோருக்கும் இப்போது வாங்குவதில் பாதிச் சம்பளமாக குறைத்தாலோதான் அடுத்தடுத்த மாதத்தில் சம்பளம் போடமுடியும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தை நடத்தவும் முடியும் என்று சொல்லி துணைவேந்தரை அதை செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5

துணைவேந்தர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து இதைப் பேசப்போய்த்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. போராட்டங்களில் இறங்கினார்கள். அரசு இதில் தலையிட வேண்டும் என்று ஊழியர்கள் விரும்பினார்கள். அதனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு தணிக்கைக்குழுவை அனுப்பி விசாரிக்க சொன்னது மாநில அரசு. அவர்கள் கொடுத்த விசாரணை அறிக்கையில் எம்.ஏ.எம்.முக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள் தான் நிதி மோசடிக்களுக்கு காரணம் என்பதை  விளக்கப்பட்டது. அதன் விளைவாக முதலில் சிறப்பு நிர்வாக அதிகாரியாக சிவதாஸ்மீனா நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சிவதாஸ்மீனாவின் வேகமான நடவடிக்கைகளின் விளைவாக பல்கலையை அரசு ஏற்கும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இனி அரசு எடுக்கும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அண்ணாமலை பல்கலைக்கழகம் நிமிரும் என்று அதன் மாணவர்களான லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள்.

குறிப்பு; கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தள்ளாட்டங்களையும், அங்கு நடந்துவரும் குழப்பங்களையும் கோல்மால்களையும் நமது ஜூனியர்விகடன் மட்டுமே தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வந்தது. இப்போது அரசு ஏற்கும் முடிவுக்கு வந்ததற்கு ஜூனியர் விகடனும் ஒரு முக்கிய காரணம் என்று கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக் தனிப்பட்ட முறையில் விகடனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- பாகம் 1 படிக்க இங்கே க்ளிக் செய்க

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- பாகம் 2 படிக்க இங்கே க்ளிக் செய்க

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- பாகம் 3 படிக்க இங்கே க்ளிக் செய்க

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- பாகம் 4 படிக்க இங்கே க்ளிக் செய்க