Published:Updated:

"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா

"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா
பிரீமியம் ஸ்டோரி
"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா

த.கதிரவன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா

த.கதிரவன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா
பிரீமியம் ஸ்டோரி
"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா

காவிரிப் பிரச்னை, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக இருக்கும் திருமாவளவனைச் சந்தித்தேன்.

“கடந்த காலத்தில், காவிரி நீர் தராமல் தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்துகொண்டு இப்போது மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சரிதானா?’’

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்ட இந்தச் சூழலில், நாளையே காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டால், அதனை நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. இப்போது மத்திய பி.ஜே.பி அரசுக்கும்கூட கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல்தான் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் பெரும் தடையாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அவர்களது நிலைப்பாடுகள் மாறலாம்.

இப்போது, கர்நாடக சட்டசபைத் தேர்தல் ஆதாயத்துக்காக பி.ஜே.பி தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதனைப் போராட்டங்கள் வாயிலாக நாங்கள் மக்களுக்கு அம்பலப்படுத்துகிறோம், அவ்வளவுதான். இதுவும்கூட பி.ஜே.பி மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல,  அவர்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்ற எண்ணத்தில் இருக்கும் பி.ஜே.பி-யினருக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்வது இடைஞ்சலாக இருக்கிறது. அதனால்தான் காவிரி விவகாரத்தில், காங்கிரஸ் மீதும் தி.மு.க மீதும் தேவையற்ற பழிகளைச் சுமத்திவருகிறார்கள்!’’

"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா

“சென்னையில், காவிரிப் போராட்டத்தின் போது போலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“நியாயமா... நியாயமில்லையா என்பதல்ல கேள்வி. மக்கள் திரள் போராடிக்கொண்டிருக்கும் ஓர் இடத்தில், காவல்துறையினரின் அணுகுமுறைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைப் பொறுத்துதான், மக்களின் எதிர்வினையும் இருக்கும்.

பொதுவாக மனித உரிமை ஆர்வலர்கள், ‘மக்களுடைய போராட்டங்களைக் காவல்துறை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகத்தான் பார்க்கிறதே தவிர, மக்களுடைய தேவைகளைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் காவல்துறையினர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை’ என்பார்கள். அரசு நினைப்பதை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தும்போது சில நேரங்களில் மக்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். எனவே, ‘காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமில்லை’ என்று அந்த ஒரு சம்பவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு வாதிடுவது சரியல்ல.’’

‘’திருமாவளவன் மீதும் கொலை முயற்சி வழக்கு பதியப்பட வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறாரே...?’’

‘’ஆண்டாள் விவகாரம், பெரியார் சிலை உடைப்பு என தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ஹெச்.ராஜா செயல்பட்டுவந்ததால், அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யவேண்டும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். அதற்குப் பதிலாக இப்படிப் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன்.

கடந்த 9 ஆம் தேதி அரியலூரில் ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ தொடங்கிய நான், 12 ஆம் தேதி கடலூர் வந்தடைந்தேன். எனவே, சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நான் பங்குபெறவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களும்கூட கிரிக்கெட் வீரர்களுக்கோ அல்லது பார்வையாளர் களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. அப்படியிருக்கும்போது எந்த அடிப்படையில், என் மீது கொலை முயற்சி வழக்குப் போடவேண்டும் என்று ஹெச்.ராஜா குறிப்பிடுகிறார்?’’

“ ‘சோடாபாட்டில் வீசுவது குறித்துக் கேள்விப்பட்டவர்களுக்கே இவ்வளவு வீரம் வருகிறதென்றால், அதையே தொழிலாகக்  கொண்ட எங்களுக்கு எவ்வளவு வீரம் இருக்கும்?’ என்ற தொனியில் மேடைகளில் நீங்கள் பேசி வருவது வன்முறையைத் தூண்டுவதாகாதா..?’’

“காவி உடை உடுத்தி சாமியாராக இருக்கிற ஒருவரே சராசரி மனிதரைப் போல பேசியிருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த விஷயத்துக்குப் பதிலளிக்கும் விதமாகவே, ‘விவசாயக் கருவிகளைத் தொட்டுக்கூடப் பார்த்திராத அவர்களுக்கே கல் எடுத்து வீச வேண்டும்; சோடா பாட்டில் வீச வேண்டும் என்றெல்லாம் பேசத் தோன்றுகிறது. அப்படியென்றால், ஆயுதங்களைக் கையாள்வது அல்லது கருவிகளைக் கையாள்வதையே வாழ்க்கை முறையாகக் கொண்ட எங்களுக்கு ஏன் அந்த உணர்ச்சி எழாது...’ என்ற ரீதியில் வினைக்கு எதிர்வினையாகப் பேசியிருந்தேனே தவிர... வன்முறையைத் தூண்டும் நோக்கில் எதையும் பேசவில்லை.’’

“சந்தையூர் தீண்டாமைச் சுவர் விவகாரத்தில், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அருந்ததியின  மக்களை நீங்கள் இதுவரையிலும் நேரில் சந்தித்துப் பேசவில்லையே... ஏன்?’’

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தொடக்கத்திலிருந்தே, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரோடு இணைந்து பணியாற்றினார்கள். அந்தப் பிரச்னை முடிகிற வரையிலும்கூட இந்த இரு அமைப்பினரும் இணைந்தேதான் செயல்பட்டனர். மற்றபடி நாங்கள் யாருக்கும் எதிரான நிலைப்பாட்டை  எடுக்கவில்லை.

நான் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் இருந்தேன். அதனால் எந்தத் தரப்பையுமே நான் நேரில் சந்திக்கவில்லை. அதேசமயம், எங்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களும் இவ்விஷயத்தை மிகக் கவனமுடன் கையாண்டு கொண்டிருந்தார்கள். அதனால், நான் நேரில் சந்திக்கவேண்டிய தேவை எழவில்லை’’

“வைகோ, சீமான் இடையே தற்போது எழுந்திருக்கும் மோதல் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. மிகத் தீவிரமான மொழி உணர்வு, இன உணர்வு இந்தக் களத்தில் தேவைப்படுகிறது. தமிழ், தமிழீழம் என்ற களத்தில் மிக நீண்ட காலமாகவே போராடிக் கொண்டிருப்பவர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ. ஆனால், அவரைக் கேலி செய்யும்விதமாக சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. அண்ணன் வைகோவின் வயதுக்கும், அனுபவத்துக்கும் உரிய மதிப்பை அளிக்க வேண்டியது, வளரக்கூடிய இயக்கங்களின், இயக்கப் பொறுப்பாளர்களின் கடமை என்றே நான் கருதுகிறேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா

“திராவிடம் - தமிழ் தேசியம் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே?’’

“ஒவ்வொருவரும் அவரவர் காலத்துக்கு ஏற்பதான் அரசியல் செய்யமுடியும். 1956-க்கு முன்பு நாம் பிறந்திருந்தால், தமிழ்நாடு என்ற மாநிலம் இருந்திருக்காது; சென்னை மாகாணம் என்றுதான் இருந்திருக்கும். ஆக, அந்த சென்னை மாகாணத்துக்கான திராவிட அரசியலைத்தான் நாம் உயர்த்திப் பிடித்திருப்போம். அதேபோல், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் பிறந்திருந்தால், நானும்கூட சுதந்திரப் போராட்டப் போராளியாகத்தான் இருந்திருப்பேன்.

ஆனால், மொழிவழி மாநிலம் என்று பிரிக்கப்பட்டபிறகு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்டப்பட்ட நிலப்பரப்பில் பிறந்த நான் இன்றைய சூழலுக்கு ஏற்ப பேசிக் கொண்டி ருக்கிறேன். இன்றைக்கு இருக்கிற இந்த அரசியலை அன்றைக்கே பெரியார் பேசியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அல்லது ‘பெரியார் பேசியது தவறு’ என்று விமர்சிப்பதோ புரிதல் குறைவாகவே பார்க்கிறேன்.’’

“50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆண்டு வருகிற, ‘பெரியார் மண்’ என்று பெருமை பேசிக் கொள்கிற தமிழகத்தில் அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது அவரை அவமானப் படுத்துவது ஆகாதா?’’

‘‘ஒட்டுமொத்தமாகத் திராவிடக் கட்சிகளை  மட்டுமே குற்றம் சாட்டிவிட முடியாது. 90-களில் தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதி வெறியாட்டங்களை அடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்துத் தலைவர்களின் சிலைகளுக்கும் கம்பிக் கூண்டுகள் அமைக்கப்பட்டன. இந்தக் கூண்டுகள் தென் மாவட்டங்களில் மட்டும் அமைக்கப் பட்டிருக்கலாம். இப்படி, ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுக்க அம்பேத்கர் சிலைகளுக்கு கூண்டு அமைக்கப்பட்டிருப்பது அவரைக் கொச்சைப் படுத்துகிற, அவமதிக்கிற நடவடிக்கை. கூண்டு அமைத்துவிட்டால், சிலை பாதுகாக்கப்படும் என்ற நினைப்பே தவறானது. அவமதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த வகையிலும் அவமதிப்பார்கள்’’

“ ‘கபாலி’ படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித்தைப் பாராட்டிப் பேசியவர் நீங்கள். இப்போது, ‘காலா’ பட டீஸரில், ரஜினி பேசும் வசனங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணி என்ன?’’

“ ‘கற்பி, போராடு, ஒன்று சேர்’ என்ற அம்பேத்கரின் முழக்கம், சமூக விடுதலை, அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை மற்றும் விளிம்புநிலை மக்களின் விடுதலை எனப் புரட்சிகரமான அரசியலை முன்வைக்கக்கூடிய முழக்கம். இப்படி மகத்துவம் வாய்ந்த முழக்கத்தை ஒரு திரைப்பட விளம்பரத்தில் பயன்படுத்துகிறார்களே என்ற ஆதங்கத்தில்தான் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். மற்றபடி பா.ரஞ்சித் மீது ரவிக்குமாருக்கு எந்தவிதமான எதிர்க்கருத்தும் கிடையாது.

ரஜினிகாந்த் படங்கள் எப்போதுமே இளைஞர்கள் - குழந்தைகளைக் கவரக்கூடிய வணிகப் படமாக இருக்கும் என்ற மதிப்பீடு உண்டு. எனவே, அவர் மூலமாக படத்தில் பேசப்படும் கருத்துகள் வெகுமக்களைப் போய்ச் சேரும். ஆனால், ‘காலா’ படத்தில் என்ன விதமான பாத்திரத்தில் படம் முழுக்க ரஜினி வரப்போகிறார் என்பது தெரியாது. அந்த டீஸரில் அவர் தன்னை ஒரு ரவுடி போலக் காட்டிக்கொள்கிறார். வசனமும் அப்படித்தான் இருக்கிறது. ‘புரட்சிகர கருத்தைச் சொல்லும் ஒரு படமாக இல்லாமல், நாயகனை ரவுடியாகச் சித்திரிக்கும் ஒரு படத்தில், இந்த முழக்கங்களைப் பயன்படுத்தலாமா?- என்ற கேள்வியை மட்டும்தான் நான் வைத்தேன்’ என்று ரவிக்குமார் என்னிடம் விளக்கம் அளித்திருந்தார். ஆகவே இதனை ஒரு விமர்சனமாக மட்டும்தான் பார்க்கவேண்டுமே தவிர.... இதற்குப் பின்னால் வேறு எதுவும் இல்லை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism