Published:Updated:

`கர்ப்பம்... க்ளீனிங்... சிக்கல்!’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன?

`கர்ப்பம்... க்ளீனிங்... சிக்கல்!’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன?
`கர்ப்பம்... க்ளீனிங்... சிக்கல்!’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன?

தமிழகத்தை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது ஓர் ஆடியோ பதிவு. தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை மையமாக வைத்து சுழலும் அந்த ஆடியோ பதிவு, அ.தி.மு.க-வுக்குள் பெரும்பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. மைக் பிடித்தால் மணிக்கணக்கில் உறுமித் தீர்ப்பவர் ஜெயக்குமார். தற்போது, இந்த ஆடியோ பதிவு அவரைக் கிட்டத்தட்ட ஊமையாக்கிப் போட்டுள்ளது. மனிதரை ஒட்டுமொத்த தமிழக மீடியாக்களும் தேடிக்கொண்டே இருக்கின்றன!

தினகரனுடைய அ.ம.மு.க கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ- க்களில் ஒருவருமான வெற்றிவேல்தான் முதன்முதலில் இந்த அம்பை ஏவியவர். தொடர்ந்து அ.ம.மு.க கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனையும் அந்தக் கட்சியினரையும் கடுமையான வார்த்தைகளால் நக்கல் நடையில் விமர்சித்துக்கொண்டிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார். ஒருகட்டத்தில், ''இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அசிங்கப்படுத்திவிடுவேன்'' என்று கோபமாகக் கூறினார் வெற்றிவேல். இதைத் தொடர்ந்து, பாஸ்பரஸ் ரேஞ்சுக்கு ஒரு துகளை முதலில் வீசினார் வெற்றிவேல். ''அ.தி.மு.க எம்.பி ஒருவருக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறது'' என்பதுதான் அந்தப் பாஸ்பரஸ். அவரிடம் பத்திரிகையாளர்கள் துருவித் துருவி கேட்டபோது, ''பாதிக்கப்பட்ட அபலை பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால், ரகசியங்களை வெளியிடுவேன். வெயிட் பண்ணுங்கள்'' என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார். 

யார் அந்த எம்.பி... யார் அவருடைய அப்பா? என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். அதிலிருந்து, யார் அவர்? என்கிற விவாதங்கள் கிளம்பிவிட்டன. சமூக வளைதளங்களில் இவரா... அவரா... என்று பெயர்கள் வெளியாகின.

ஆனால், அந்த எம்.பி தரப்பிலிருந்தோ... அவருடைய அப்பா தரப்பிலிருந்தோ எந்தப் பதிலும் இல்லை.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியிலிருந்து பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அக்டோபர் 21-ம் தேதியன்று வெளியானது. அதில், ஆகஸ்ட் 9-ம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. அதன் அம்மா பெயர் - ஜே.சிந்து. அப்பா பெயர் - டி.ஜெயக்குமார். குழந்தை பிறந்த மருத்துவமனை பெயர் ஜெயம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 21. குழந்தையின் பெற்றோர் முகவரி: ராயபுரம், பிராட்வேயில் உள்ள ஒரு ஃபிளாட். இந்தச் சான்றிதழ் அக்டோபர் 18-ம் தேதியன்று தரப்பட்டிருக்கிறது. 

அடுத்து 21-ம் தேதி இரவே ஓர் ஆடியோ பதிவும் வெளியானது. டி.வி-யில் நாம் கேட்டுப் பழக்கப்பட்ட அதே 'கரகர'ப்பான ஆண் குரல். எதிர்முனையில் பேசியவர் - பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார். 10 நிமிடங்கள் ஒடும் அந்த ஆடியோ முழுவதையும் முதல்வர் எடப்பாடி கேட்டு அதிர்ந்துபோனாராம். பிறப்புச் சான்றிதழில் அப்பா இடத்தில் டி.ஜெயக்குமார் என்பதை பார்த்தவுடனே, ராயபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்தான் என்று அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு கிளம்பியது. கிட்டத்தட்ட அந்தக் குரலும் ஜெயக்குமாரின் குரலும் ஒன்றாகவே இருப்பதால், அதை வைத்து அமைச்சரை மையம் கொண்டது சர்ச்சை புயல். அவரைப் பற்றி இணையதளங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் றெக்கைக் கட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த ஆடியோவும் வைரலாகப் போய்க்கொண்டிருக்கிறது. 

இதைப் பற்றி கருத்துக் கேட்பதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புகொள்ள முயன்றோம். எத்தனையோ முறை அழைத்தும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வீடு தேடிச் சென்றபோதும் சந்திக்க முடியவில்லை. ஜெயக்குமாரின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, ``தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த வெற்றிவேல், அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக அபாண்டமாகப் பேசித் திரிகிறார். அது அண்ணன் ஜெயக்குமார் பேசியதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் பெண் இதுவரை புகாரும் கொடுக்கவில்லை. எனவே மொத்தமும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே'' என்றனர்.

அதேசமயம், ''இதற்குப் பிறகும் அடங்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக இன்னும் சில ஆடியோ பதிவுகள், வீடியோ பதிவுகள் எல்லாம் இருக்கின்றன. அடுத்தடுத்த அம்புகள் பாயும்'' என்றபடி தெம்பாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர் தினகரனின் அ.ம.மு.க-வினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சியில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, பதில் ஏதும் சொல்லாமல் நகர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு