Published:Updated:

`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்!’ - அமைச்சர் ஜெயக்குமார்

மலையரசு
`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்!’ - அமைச்சர் ஜெயக்குமார்
`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்!’ - அமைச்சர் ஜெயக்குமார்

`சர்ச்சைக்குரிய ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேல் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ''அ.தி.மு.க. எம்.பி ஒருவருக்குத் தம்பி பாப்பா பிறந்திருக்கிறது'' என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். தொடர்ந்து நேற்று ஓர் ஆடியோவும் வெளியானது. அந்த ஆடியோவில் உள்ள குரல் அமைச்சர் ஜெயக்குமாருடையது எனத் தகவல் பரவ, விவகாரம் விஸ்வரூபம் ஆனது. இந்நிலையில் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், ``ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். 

என்னை நேரடியாக எதிர்க்கத் திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள். டி.டி.வி.தினகரனைச் சார்ந்தவர்களே ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள். ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பிறப்புச் சான்றிதழில் என் பெயர் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த உலகத்தில் டி.ஜெயக்குமார் என நான் ஒருவன்தான் இருக்கிறேனா என்ன? இந்த ஆடியோ ஒரு மாத காலமாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டது. இது ஒரு சதி செயல். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை" என்றார்.