Published:Updated:

அத்துமீறுகிறாரா ஆளுநர்?

அத்துமீறுகிறாரா ஆளுநர்?
பிரீமியம் ஸ்டோரி
அத்துமீறுகிறாரா ஆளுநர்?

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: ஹாசிப்கான்

அத்துமீறுகிறாரா ஆளுநர்?

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
அத்துமீறுகிறாரா ஆளுநர்?
பிரீமியம் ஸ்டோரி
அத்துமீறுகிறாரா ஆளுநர்?

மிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே, ‘மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார்’ என்ற சர்ச்சை எழுந்தது. இப்போது பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்திருப்பதோடு, “பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் விசாரணை கமிஷன் அமைக்க எனக்கு அதிகாரம் உண்டு. மாநில அரசுக்கு இதற்கு அதிகாரம் கிடையாது” என்றும் தெரிவித்திருப்பது ‘அத்துமீறுகிறாரா ஆளுநர்’ என்று வலுவாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

உண்மையில் கவர்னருக்கான அதிகாரம்தான் என்ன?

ஒவ்வோர் ஆண்டும் சட்டமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும்போது, முதல்நாள் கவர்னர் உரை இடம்பெறும். ஆனால், அந்த  உரையைக்கூட கவர்னர் சொந்தமாக எழுதிக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம். முதல் அமைச்சர் பணிக்கும் அதிகாரிகள்தான் கவர்னர் உரையைத் தயார் செய்வார்கள்; அவர்கள் தயார் செய்து கொடுக்கும் உரையை மாநில முதல்வர் படித்துவிட்டு ஓப்புதல் கொடுப்பார். அதன்பிறகுதான், அதை கவர்னர் சட்டமன்றத்தில் வாசிக்க முடியும்.

ராஜ் பவனை விட்டு கவர்னர் வெளியில் வருகிறார் என்றால், பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள், குடியரசு தின விழாக் கொடியேற்றம், சட்டமன்ற உரை நிகழ்த்துவதற்கு மட்டும்தான்! மற்ற மாநிலங்களில் எப்படியோ... தமிழகத்தில் இதுதான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தற்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அந்த மரபை உடைத்துள்ளார். இதற்கு முன்பு தமிழக ஆளுநர்களாக இருந்தவர்கள் குறித்து ஒரு பருந்துப் பார்வை பார்ப்போம்.

1948-ல் தமிழக கவர்னராக இருந்தவர் மகாராஜா கிருஷ்ணகுமார்சிங்ஜி பாவ்சிங்ஜி.  தற்போது உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தையும் சேர்த்து - தமிழகம் 23 கவர்னர்களைச் சந்தித்து உள்ளது. இவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களின் பெயர்களைக்கூட தமிழக மக்கள் கேள்விப்பட்டு இருக்கமாட்டார்கள். தமிழக வரலாற்றில் கவனம் ஈர்த்த கவனர்கள் சிலரே.

அத்துமீறுகிறாரா ஆளுநர்?

1989-ல்  கருணாநிதி முதல்வரானபோது, சுர்ஜித்சிங் பர்னாலா கவர்னர். 1991 ஜனவரி 30-ம் தேதி அப்போது மத்தியில் கூட்டணி ஆட்சியை நடத்திவந்த பிரதமர் சந்திரசேகருக்கு, தி.மு.க. அரசைக் கலைக்கச் சொல்லி கடுமையான நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது. இதற்காக, தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னரிடம் அறிக்கை கேட்டனர். ஆனால், அப்படி அறிக்கை தர பர்னாலா மறுத்துவிட்டார். ஆனாலும், தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. தன் பக்கம் நின்ற கவர்னரை ‘மாவீரன் பர்னாலா’ என்று அழைத்தார் கருணாநிதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1993-96 ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கவர்னர்  சென்னா ரெட்டிக்கும் நடந்த பனிப்போர் தமிழகமே அறிந்தது.  ‘கவர்னர் என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார்’ என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியது பரபரப்பைக் கிளப்பியது. அவ்வளவு பிரச்னைகள் இருந்தபோதும்கூட, சென்னா ரெட்டி மாநில நிர்வாகத்தில் மூக்கை நுழைத்தது கிடையாது.

2001-ல் ஃபாத்திமா பீவி தமிழக கவர்னராக வந்தார்.  டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால்  ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனால், அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதால், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றும், எந்தத் தொகுதியிலும் தேர்தலில் போட்டி யிடாமல் இருந்தாலும் ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஃபாத்திமா பீவி.

2016- செப்டம்பர், தமிழக கவர்னர் பதவியில் இருந்து ரோசய்யா ஓய்வுபெற்றார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக செப்டம்பர் 2 அன்று பதவியேற்றார், மகாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ். செப்டம்பர் 22 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் தமிழகத்துக்குப் பொறுப்பு கவர்னராக வந்த வித்யாசாகர் ராவ், பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத கவர்னர்.

எம்.எல்.ஏ-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்காமல் இழுத்தடித்தது, எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கைகள் பிணைத்து சேர்த்து வைத்தது ஆகியவை வித்யாசாகர் ராவின் ‘வித்தியாசமான’ சாதனைகள்.

இப்படி சில ஆளுநர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், ‘மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார்’ என்று குற்றம் சாட்டப்படும் முதல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தான்.

ஆளுநர் பதவிக்கான தகுதிகள்-விதிமுறைகள்!

சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி ஆளுநராக நியமிக்கப்படுபவர், 

* அறிவார்ந்த நபராக (Eminent Person) இருக்க வேண்டும்.  
 
*   ஒருவர் எந்த மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படுகிறாரோ, அவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது. 

*   ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன், சில வருடங்களாவது அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்திருக்க வேண்டும்.

 துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில முதல்வருடன் கலந்தாலோசித்து ஆளுநர் நியமனம் நடக்க வேண்டும்; ஆளுநரை அவர் பதவிக்குரிய ஐந்தாண்டு காலத்திற்குள் நீக்கக் கூடாது. அப்படி நீக்கினால், அவருக்கு முன் கூட்டியே விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆளுநர் நீக்கம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சூழ்நிலையை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அத்துமீறுகிறாரா ஆளுநர்?
அத்துமீறுகிறாரா ஆளுநர்?
அத்துமீறுகிறாரா ஆளுநர்?

டைட்டில் ஹெட்(Title Head) அதிகாரம்! 

“கவர்னருக்கு இருப்பதை அதிகாரம் என்று சொல்வதை விடவும் பொறுப்பு என்று சொல்லலாம். அவரை டைட்டில் ஹெட் என்கிறார்கள். உண்மையான அதிகாரம் படைத்த ‘ஹெட்’ முதல் அமைச்சர்தான். காரணம், கவர்னர் என்பவர்   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி.

முதல் அமைச்சர், அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது, மாநிலத் தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது (அதை மறுக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை), நிதி மசோதாக்களை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்குப் பரிந்துரை செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள்தான் ஆளுநருக்கு உண்டு. மாநிலத்தின் நிர்வாகம் சரியில்லை என்றால், ஆர்டினன்ஸ் என்ற உரிமைக் கட்டளைகளைக் கொடுக்க முடியும். மற்றபடி, அவர் நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் விரும்பினால், அதை முதல்வரிடம்தான் சொல்ல வேண்டும். தலைமைச் செயலாளரிடம் ஆலோசனை நடத்தலாம்; வழிகாட்டுதல்களைக் கொடுக்கலாம்; துறைச் செயலாளர்களிடம் கலந்துரையாடலாம். ஆனால், அவர்களுக்கு கட்டளையிட முடியாது. அதுபோல, மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில்... மாவட்ட நிர்வாகத்தில் எல்லாம் தலையிட முடியாது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது” என்று விளக்கம் கொடுக்கிறார் மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமி.

அத்துமீறுகிறாரா ஆளுநர்?

அதுபோல, மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களிலும் (இங்கே மாவட்ட நிர்வாகம் என்ற வார்த்தை முக்கியமானது... அதற்குள் கவர்னர் போய் ஆய்வுசெய்து, உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அதைச் செய்ய முடியும்)அவர் தலையிட முடியாது. காரணம், 163-புரோவிஷன்படி, முதல் அமைச்சரின் ஆலோசனையைக் கேட்டுத்தான், எந்தக் காரியத்தையும் கவர்னர் நடத்த முடியும் என்று வகுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் உள்ள கவர்னர்களைப் பொறுத்தவரைதான் இந்த அதிகார வரம்புகள். ஆனால் யூனியன் பிரதேசங்களான டெல்லி, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகளில் நிலைமை வேறு. அங்கு இருப்பவருக்குப் பெயர் லெப்டினென்ட் கவர்னர். அதாவது துணை நிலை ஆளுநர். அவர்களுக்கு இந்திய அரசியல் சாசனம் 239, 239ஏ, 239 பி ஆகியவை உச்சபட்ச அதிகாரத்தைக் கொடுக்கிறது. அதன்படி யூனியன் பிரதேசங்களில்  லெப்டினென்ட் கவர்னர்தான் போலீஸ், நிலம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் இறுதி முடிவை எடுக்க முடியும். அந்தப் பிரதேசங்களைப் பொறுத்தவரை லெப்டினென்ட் கவர்னர்தான் அங்கு நிர்வாகி. இந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டுதான் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியையும் புதுவையில் காங்கிரஸ் அரசையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

கவர்னர்களுக்கான அதிகார வரம்புகள் ஒருபுறம் இருக்க, மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமான உறவில் இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை. மத்தியில் ஒரு கட்சி, மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுக்குக் குடைச்சல் கொடுப்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆளுநர்களைக் கொண்டு காங்கிரஸ் மாநில அரசுகளுக்குக் கொடுத்த குடைச்சல்களுக்குத் தமிழகத்திலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. பல விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றும் பாரதிய ஜனதா இந்த மோசமான முன்னுதாரணங்களையும் தவறாமல் பின்பற்றுகிறது.

மோடி அரசு பதவியேற்றவுடனே நிர்பந்தப்படுத்தி, பல மாநில ஆளுநர்களைப் பதவி விலகச் செய்தது. எல்லோரும் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள்.

பா.ஜ.க.-வின் ‘திருவிளையாடலுக்கு’ 2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் ஓர் உதாரணம். மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள். ஆட்சி அமைப்பதற்கு 31 எம்.எல்.ஏ-க்கள் தேவை. காங்கிரஸ் 28 இடங்களையும் பி.ஜே.பி 21 இடங்களையுமே பிடித்தன. பெரும்பான்மைக்கு 31 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில், பி.ஜே.பி சாமர்த்தியமாக, தேசிய மக்கள் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ-க்கள், நாகா மக்கள் முன்னணியின் நான்கு எம்.எல்.ஏ-க்கள், எல்.ஜெ.பி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ மற்றும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, பி.ஜே.பி-யை ஆட்சி அமைக்க அழைத்தார். தேர்தலில் இரண்டாவதாக வந்த பி.ஜே.பி, தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தது. பி.ஜே.பி-யின் பைரன் சிங் முதல்வரானார். அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியோ எதிர்கட்சியாக இருக்கிறது.

ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுக்குத் தொல்லை கொடுப்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. அரசுகள் முனைப்பாக இருந்தாலும் தன்மானமுள்ள மாநில முதல்வர்கள் அதற்கு எதிராக உறுதியாகப் போராடியதும் வரலாறு. ஆனால் தமிழகத்தில் இருக்கும் எடப்பாடி அரசோ ஆளுநர் நடத்தும் ஆய்வுகள் குறித்தோ, ‘விசாரணை கமிஷன் அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது’ என்ற கவர்னரின் வார்த்தைகள் குறித்தோ எதுவும் தெரிவிக்காமல், வாய்மூடிக் கிடப்பதுதான் அவமானகரமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism