அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!

‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது. அந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 22-வது அகில இந்திய மாநாடு’’ என்றபடி வந்தார் கழுகார்.

‘‘அந்த மாநாட்டில் என்ன முக்கியத்துவம்?’’ என்றோம்.

‘‘கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதான், மிகப்பெரிய முக்கியத்துவம். ஏனென்றால், அவருக்கும், அந்தக் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கும் கடும் பனிப்போர். கட்சியின் பொதுச்செயலாளராக யெச்சூரி இருந்தாலும், பிரகாஷ் காரத் கட்டுப்பாட்டில்தான் கட்சியே இருந்தது. அந்த அளவுக்கு பிரகாஷ் காரத் ஆதரவாளர்கள் கட்சியின் பொலிட் பீரோவில் ஆதிக்கம் செலுத்தினர். அதில் வெறுத்துப்போன யெச்சூரி, மாநாட்டுக்கு முன் கூடிய மத்தியக் குழு கூட்டத்தில் ராஜினாமா செய்ய முன்வந்தார் என்றுகூட செய்தி வெளியானது.’’

‘‘எந்த விஷயத்தில் காரத்துக்கும் யெச்சூரிக்கும் முரண்பாடாம்?’’

‘‘அகில இந்திய அளவில், பி.ஜே.பி-காங்கிரஸ் என்ற இரு கட்சிகளுடனும் கூட்டணி கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க-தி.மு.க என்ற இரு கட்சிகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது, அவை ஊழல் கட்சிகள் என்ற அடிப்படையில் அவர்களுடனும் கூட்டணி வைக்கக்கூடாது என்பது காரத் வாதம். காங்கிரஸ் கட்சியை பி.ஜே.பி-யுடன் ஒப்பிடக்கூடாது; தி.மு.க-வை அ.தி.மு.க-வுடன் ஒன்றாக நிறுத்துப் பார்க்கக்கூடாது என்பது யெச்சூரியின் வாதம். அதாவது, ‘பி.ஜே.பி முதன்மையான எதிரி; அதை வீழ்த்துவதற்குத் தேவைப் பட்டால் காங்கிரஸ் கட்சியுடன் சில உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளலாம். அதுபோல்தான், தமிழகத்தில் அ.தி.மு.க-வை முதன்மையாக எதிர்க்க வேண்டும். அதற்கு தி.மு.க-வுடன் சில உடன்பாடுகளைச் செய்து தேர்தலைச் சந்திக்கலாம்’ என்பது அவர் சொன்னது. ஆனால், யெச்சூரியின் இந்த வாதத்துக்குக் கட்சிக்குள் ஆதரவு இல்லாமல் இருந்தது.”

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!

‘‘இப்போது அந்த நிலை மாறிவிட்டதா?”

‘‘முற்றிலும் மாறிவிடவில்லை. ஆனால், யெச்சூரியின் வாதத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு கொஞ்சம் நிலைமை தளர்ந்திருக்கிறது. ‘பி.ஜே.பி-யை வீழ்த்துவதே முதன்மையான நோக்கம், காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் நேரடியான கூட்டணி இல்லை’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தேவைப்படும் இடங்களில் ‘அண்டர்ஸ்டேண்டிங்’ வைத்துக்கொள்ளலாம். எனவே, தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் அணியில் மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்குத் தடை எதுவும் இருக்காது.’’

‘‘இந்த முடிவை காங்கிரஸ் தலைமை எப்படிப் பார்க்கிறது?”

‘‘காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடன் தமிழகத்தில் இணக்கமாக இருக்கிறது. அதே நேரம் தினகரனையும் முழுமையாக எதிர்த்துவிடவில்லை. தினகரன், காங்கிரஸ் கட்சியுடன் உறவு கொண்டாடவில்லை; அதே நேரம்,  பி.ஜே.பி-யை முழுமையாக எதிர்த்து விடவும் இல்லை. பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, எதிர்க்கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். அப்போது, ‘மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை’ என்றார் தினகரன். அதற்கு மறுநாள் முதல் பி.ஜே.பி-யைப் பட்டும் படாமலும் தினகரன் விமர்சனம் செய்துவருகிறார்.தி.மு.க நடத்தும் எல்லாப் போராட்டங்களிலும் காங்கிரஸ் கலந்துகொண்டாலும், தினகரனையும் தங்கள் பட்டியலில் வைத்துள்ளது. அதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அதிகம் மெனக்கெடுகிறார். தி.மு.க-வுடன் உடன்பாடு ஏற்படவில்லையென்றால், தினகரனைச் சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்பது அவரது நினைப்பு. இதேநிலைதான், கம்யூனிஸ்ட்களுக்கும்.’’

‘‘பி.ஜே.பி-அ.தி.மு.க உறவு எப்படி இருக்கிறது?”

‘‘எல்லா அரசியல் கணக்குகளையும்விட பி.ஜே.பி-அ.தி.மு.க உறவுதான் புரியாத புதிராக உள்ளது. ஒருபக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள், கவர்னர் விவகாரம் என அனைத்திலும் பி.ஜே.பி-க்கு எதிராக சைலன்ட்டாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செக் வைக்கிறார். அவரது ஆட்டத்துக்கு ஏற்பவே டெல்லி பி.ஜே.பி-யும் ஆட்டம் காட்டுகிறது. மூன்று மாதங்களுக்குமுன் முடிக்கப்பட வேண்டிய தினகரனுக்கு எதிரான ஃபெரா வழக்கு, இப்போது உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவால் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது. தினகரனை  இதனால் பி.ஜே.பி கொஞ்சம் சுதந்திரமாக உலவ விட்டுள்ளது. இதனால், பி.ஜே.பி-அ.தி.மு.க மோதல் என்று செய்திகள் பரவின. ஆளும்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது புரட்சித் தலைவி அம்மா’வில் பி.ஜே.பி-யைக் காய்ச்சி எடுத்து கடந்த வாரத்தில் கவிதை வெளியானது. அடுத்த இரண்டே நாள்களில், அதே பத்திரிகையில், ‘இந்திய அரசியலில் அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன’ என்று கட்டுரை வருகிறது.’’

‘‘ஆனால், இதை இரண்டு தரப்பும் மறுக்கிறதே?’’

‘‘அதுதான் குழப்பமே! ‘தமிழகத்தில் ஒரு குழல் துப்பாக்கிதான் உள்ளது’ என அ.தி.மு.க-வை மனதில் வைத்து தம்பிதுரை சொல்கிறார். ‘வெறும் ஆசை வார்த்தைகளால் கூட்டணி முடிவாகாது’ என வானதி சீனிவாசன் சொல்கிறார். புதிர்கள் நிறைந்ததாக அ.தி.மு.க-பி.ஜே.பி உறவு இருக்கிறது.’’

‘‘தினகரன் என்ன நினைக்கிறார்?’’

‘‘தினகரனைப் பொறுத்தவரை இப்போதைக்கு பி.ஜே.பி-யைக் கடுமையாக எதிர்த்து, தேடிப்போய் ஆப்பில் உட்கார விரும்பவில்லை. அதேநேரத்தில், பி.ஜே.பி-யுடன் நெருங்கினால், தமிழகத்தில் தன் செல்வாக்கு ஜீரோவாகிவிடும் என்பதையும் அவர் உணர்ந்துள்ளார். அதனால், காங்கிரஸுடன் ஒரு சாஃப்ட் கார்னரைக் கடைப்பிடிக்கிறார். அதை பி.ஜே.பி-க்குத் தெரியாத வகையில் செய்துகொண்டிருக்கிறார்.’’

‘‘இது டெல்லிக்குப் புரியாதா என்ன?’’

‘‘அமித் ஷாவுக்கும் மோடிக்கும் இந்த வித்தைகள் புரியாமல் இருக்குமா? அவர்களின் நோக்கமே வேறு. அவர்கள் எல்லாக் கட்சிகளிடமும், ‘எங்களுடன் யாரும் கூட்டணிக்கு வர வேண்டாம்; அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியோடும் போக வேண்டாம். காங்கிரஸைத் தனிமைப்படுத்துங்கள்; மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்கிறார்கள். தமிழகத்தில் இப்போதுகூட தினகரனை அவர்கள் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கும் அதுதான் காரணம்’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகாரிடம், ‘‘ரஜினியின் அமெரிக்கப் பயணம் பற்றி எதுவும் சொல்லவில்லையே?” என்றோம்.

‘‘இமயமலைக்குச் சென்றுவந்த சில நாள்களி லேயே அமெரிக்காவுக்குச் செல்வதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், காவிரி, ஸ்டெர்லைட், சினிமா ஸ்ட்ரைக் என வரிசையாகப் பிரச்னைகள் வந்ததால் பயணம் தள்ளிப்போனது. மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்கிறார். ‘ஒரு வார காலம் இருப்பார்’ என்கிறார்கள். அமெரிக்கா புறப்படும் முன், ‘துக்ளக்’ குருமூர்த்தியை அழைத்துப் பேசினார் ரஜினி. இவரைச் சந்திக்க பல நாள்களுக்குமுன் குருமூர்த்தி நேரம் கேட்டிருந்தாராம். அதனால்தான் ரஜினி அழைத்தாராம். ‘விரைவில் கட்சி தொடங்க வேண்டும், உங்களுக்காகத் தமிழக அரசியல் எதிர்பார்ப்புடன் இருக்கிறது’ என்றெல்லாம் குருமூர்த்தி சொல்ல, பி.ஜே.பி மீதான வருத்தங்களைப் பதிவுசெய்தாராம் ரஜினி. காவிரி விவகாரம் முதல் கவர்னர் விவகாரம் வரை பி.ஜே.பி நெகட்டிவ் மார்க் வாங்கிவருகிறது என்பதுதான் ரஜினியின் வருத்தமாம்’’ என்றபடி பறந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!

‘‘இது மன்றம் இல்லை. அரசியல் கட்சி. இப்படித்தான் நடக்கும்’’ என்று சவுண்டு விடுகிறார்களாம் ரஜினி மக்கள் மன்றத் தலைமை அலுவலகத்தில் இருக்கும் இருவர். மன்றத்தில் உள்ள ‘பசை’யான பார்ட்டிகளை இவர்கள் தங்களின் கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள். அவர்கள்மீது தலைமைக்கு ஏதாவது புகார் வந்தால், அந்தப் புகாரின் சாரம்சம் சம்பந்தப்பட்ட பார்ட்டிக்கே போய்விடுகிறது. புகார் கொடுத்த நபரை லோக்கலில் கேலி செய்கிறார்களாம். 

  தலைமைச் செயலகத்தில் சார்பு செயலாளர்கள் முதல் கூடுதல் செயலாளர்கள் வரை சுமார் 345 பேர் இருக்கிறார்கள். இவர்களின் ‘தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர் சங்க’ நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க கடந்த வாரம் தேர்தல் நடந்தது. சுமார் 300 பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணியபோது அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் 15 வாக்குகள் செல்லாத வாக்குகள்.

  பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இப்போது கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாம். அதனால் மன உளைச்சல் அதிகமாகி, பார்க்கப்போகும் விசிட்டர்களிடம் எரிந்து விழுகிறாராம்.

  ‘‘பத்து அமைச்சர்களும் முதல்வரும் என் பாக்கெட்டில்’’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் ‘மலைக்கோட்டை’ அடைமொழி கொண்ட திருச்சி நபர் ஒருவர். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் எம்.பி-யுமான குமாருக்கும் இவருக்கும் ஆகாது. இதனால், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை குமாருக்கு எதிராகத் தூண்டிவிட்டார் இவர். இப்போது, எம்.பி குமாரும் அமைச்சரும் ராசியாகிவிட, இருவரும் ஒன்றாக வலம் வருவதைப்பார்த்து மிரண்டு கிடக்கிறார் அந்த நபர்.