அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

தமிழக அமைச்சர்களில் புத்திசாலியானவர் யார்? ஏன்?


அமைச்சர் ஜெயக்குமார்தான். சில நேரங்களில் கோபமாக, சில நேரங்களில் லாஜிக்காக, சில நேரங்களில் ஜாலியாக, சில நேரங்களில் லாகவமாக எனப் புகுந்து விளையாடுகிறார். அவர் மத்திய அரசை எதிர்த்தும், மாநில கவர்னரை எதிர்த்தும் பேட்டி அளித்துள்ளார். ஆனால், அது அவர்களுக்கு வலிக்காத மாதிரியும் இருக்கிறது; ஆனால், தமிழக மக்களின் கோபத்தை அவர்களுக்கு உணர்த்துவது மாதிரியும் உள்ளது. இவ்வளவு புத்திசாலித்தனத்தை இத்தனைக் காலம் (அதாவது ஜெயலலிதா இருக்கும்வரை!) எங்கே வைத்திருந்தார் ஜெயக்குமார்?!

கழுகார் பதில்கள்!

ஓ.ஏ.கே.ஆர்.சரவணன், சென்னை-2.

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையாவா? எடியூரப்பாவா?


அது குமாரசாமி எடுக்கும் முடிவைப் பொறுத்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை நடத்திவரும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவும் அவரின் மகன் குமாரசுவாமியும் எத்தனை இடங்களைக் கைப்பற்றுவார்கள், யாரை ஆதரிப்பார்கள் என்பதைப் பொறுத்துத்தான் யார் அங்கு முதலமைச்சர் என்பதைச் சொல்ல முடியும். 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டசபையில், 90 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இப்போது பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைக்காத குமாரசுவாமி, ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி-யை ஆதரித்தால், அது எடியூரப்பாவுக்கு லாபம்.

இந்தமுறை தொகுதி மாறி சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடும் சித்தராமையாவுக்கு ஒரு பெருமை உண்டு. கடந்த 40 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சிபுரிந்த ஒரே முதல்வர் அவர்தான். எடியூரப்பாவுக்கும் ஒரு பெருமை உண்டு. 1983-ம் ஆண்டிலிருந்து அவர் தனது ஷிகாரிபூர் தொகுதியில் ஒரே ஒரு முறை மட்டுமே தோற்றிருக்கிறார். இதுவரை நடந்த தேர்தல்களில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் பலரும் இம்முறை அவருக்காகத் தேர்தல் பணியாற்றுகிறார்கள்.

கழுகார் பதில்கள்!

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

இன்றைய பதற்றமான சூழ்நிலைக்கு ஊடகங்கள்தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா?


நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாட்டில் நடக்கும் அத்தனை காரியங்களையும் ஊடகங்கள்தான் உருவாக்குகின்றன என்பது போல இருக்கிறதே? ஒருசிலவற்றைத் தவிர, ஊடகங்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்வதால்தான் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

பி.ஜே.பி எம்.பி-க்களின் உண்ணாவிரதம்?


இந்தியச் சரித்திரத்தில் எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளும்கட்சி உண்ணாவிரதம் இருந்த பெருமைக்குரிய போராட்டம் இது.

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

 ‘‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளா வீர்கள்’’ என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாரே ரஜினி?


தமிழ்நாட்டு மக்களின் உணர்வைத்தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ‘காவிரி என்பது ஏதோ தஞ்சை மாவட்டத்து விவசாயிகளின் பிரச்னை அல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை’ என்பதை ரஜினி உணர்ந்து சொல்லியிருக்கிறார். கர்நாடகாவைப் பொறுத்தவரை, காவிரிப் பிரச்னையில் காங்கிரஸ், பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் என முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் ஒலிக்கின்றன. ‘அதேபோன்ற நிலை தமிழ்நாட்டிலும் இருக்கவேண்டும்’ என்ற நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து இது.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘‘நான் முதல்வராக ஆசைப்படுவதில் தவறு இல்லை’’ என்று திருநாவுக்கரசர் கூறுகிறாரே?


அவர் முதலில், தமிழ்நாட்டின் மொத்த காங்கிரஸ்காரர்களும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக ஆகட்டும்!

கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்த அரசு, சின்ன தாராபுரம்.

தங்களைப் பற்றிய மக்களின் அபிப்ராயங்கள், மதிப்பீடுகளை உணர்வதற்கு, ஆட்சியாளர்களுக்கு அடுத்த தேர்தல்தான் உரைகல்லா?


உணர்ச்சியும் மனசாட்சியும் உள்ளவர்களாக இருந்தால், ஒவ்வொரு நிமிடமும் அதை உணர்ந்துவிடமுடியும். ஐந்து ஆண்டுகள் எதற்கு?

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

கழுகார் பதில்கள்!

காஷ்மீரில் பாலியல் வன்முறை புகாரில் சிக்கியுள்ளவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதற்காக இரண்டு பி.ஜே.பி அமைச்சர்கள் ராஜினாமா செய்ய நேர்ந்திருப்பது?

குற்றங்களைக் குற்றங்களாகப் பாருங்கள். கிரிமினல் குற்றங்களை அரசியலாக, சாதியாக, மதமாக எப்போது ஒரு சமூகம் பார்க்க ஆரம்பிக்குமோ, அப்போது அந்தச் சமூகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விட்டது என அர்த்தம். இதுதான் இங்கு நடக்கிறது. காஷ்மீர் சிறுமியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; எந்தக் கட்சியைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள், மிகமிகக் கொடூரமான செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட் டிருப்பவர்கள். குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதற்காக அவர்களைக் காப்பாற்ற நினைப்பதும், குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதற்காக மட்டுமே விமர்சிப்பதும் மிக மோசமானது.

உமரி பொ.கணேசன், மும்பை.

தமிழக பி.ஜே.பி தலைவராக வெளி மாநிலத்தவரை நியமித்தால் ஏற்றுக்கொள்வார்களா?


இப்போதே சிலர் பேசும் பேச்சுக்கள், வெளிமாநிலத்தவர் பேசுவது போலத்தானே இருக்கின்றன?!

சம்பத்குமாரி, பொன்மலை.

இன்றைய தேதியில் சட்டசபைத் தேர்தல் நடந்தால், கமல் எந்தக் கட்சியின் வாக்கைப் பிரிப்பார்? ரஜினி எந்தக் கட்சியின் வாக்கைப் பிரிப்பார்? தினகரன் எந்தக் கட்சியின் வாக்கைப் பிரிப்பார்?

அ.தி.மு.க-வின் வாக்குகளை தினகரன் பிரிப்பார். மற்ற இருவரும் அவர்களுக்கான ரசிகர்களின் வாக்குகளைப் பெறுவார்கள்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

கழுகார் பதில்கள்!

எல்லாக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது நல்லா செயல்படுறாங்க. மக்கள் பிரச்னைகளுக்காக இறங்கிப் போராடுறாங்க; மக்களுடன் நெருக்கமாவும் இருக்காங்க. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, மக்களுடன் ரொம்ப இணக்கமாக இருப்பது எதிர்க்கட்சிகள்தான். ஆளும் கட்சியினர் எப்பவும் ஒரு பிரஷருடன்தான் இருப்பாங்க. அரசியல் சட்டப்படி, எல்லாக் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளாக உட்கார வைக்க வாய்ப்பு உண்டா?

‘‘தெருவில் இரண்டு பெண்கள் கையில் கரண்டியுடன், சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவர் கையில் இருந்தது, வெறும் கரண்டி. இன்னொருவர் கையில் இருந்தது, கடுகு இருந்த கரண்டி. வெறும் கரண்டியை வைத்திருந்தவர் நன்றாக ஆட்டி ஆட்டி சண்டை போட்டார். கடுகு இருந்த கரண்டியைப் பிடித்திருந்தவர் அதேபோல சண்டை போட முடியாது. கையில் கடுகு உள்ள கரண்டி வைத்திருப்பவர்தான் ஆளும்கட்சி. வெறும் கரண்டி வைத்திருப்பவர் எதிர்க்கட்சி. எனவே, எதிர்க்கட்சியைப் போல ஆளும்கட்சி செயல்பட முடியாது. ஆனால், உரிமைகளைப் பெறுவதற்கு இருவருமே சண்டை போடலாம். சண்டை போடத்தான் வேண்டும்’’ என்று முதலமைச்சராக இருந்த அண்ணா சொன்னார். இப்படி, ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் செயல்பட்டால் உங்களுக்கு இந்த சந்தேகமே வந்திருக்காது.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!