அலசல்
Published:Updated:

ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?

ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?

ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?

ந்தியா எனும் பரந்த தேசத்தில் எப்போதும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலை மனதில்கொண்டு, அரசாங்கம் சில கடினமான முடிவுகளைத் தவிர்க்கிறது; பல நலத்திட்டங்களைத் தள்ளிப்போடுகிறது. நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை முடித்துவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த நிர்பந்தங்களும் இல்லாமல் ஆட்சி செய்ய முடியும். இதைப் பற்றிய பேச்சு எழுந்து, இந்தியா முழுக்க விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. 

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற பி.ஜே.பி-யின் முழக்கத்தையும் முயற்சிகளையும் சிலர் ஆதரித்தாலும், பலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ‘ஒரே தேசம், ஒரே சபை, ஒரே நிர்வாகம்’ என்பது ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான, மறைந்த எம்.எஸ்.கோல்வாக்கரின் விருப்பம். வாஜ்பாய் ஆட்சியில் துணைப் பிரதமராக இருந்த எல்.கே.அத்வானி, ‘மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவை களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறி வந்தார். ‘மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து விட்டு, மத்தியில் ஒரே ஆட்சி என்று கொண்டுவர வேண்டும்’ என்பது பி.ஜே.பி-யின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலும் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ இடம்பெற்றது.

ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் நரேந்திர மோடி தலைமையில் சந்திக்க பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது. அதோடு, மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களையும் இணைத்து நடத்தினால், மாநில அளவில் இருக்கும் எதிர்ப்புகளைச் சமாளித்து ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களையும் வசப்படுத்தி விடலாம் என பி.ஜே.பி நினைக்கிறது. மோடி அரசின் இந்தத் திட்டத்துக்கு சட்ட கமிஷன் சம்மதம் தெரிவித்துள்ளது. வரைவு அறிக்கை ஒன்றை அது தயாரித்து, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளது. சில மாநில அரசுகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து மாநில அரசுகளைக் கவிழ்ப்பதைத் தவிர்ப்பது, கட்சி தாவல் தடைச் சட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்வது என பல சர்ச்சைக்குரிய பரிந்துரைகள் அதில் உள்ளன.

இதற்குத் தேர்தல் ஆணையமும் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக போதுமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு, 2016 டிசம்பரில் 1,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு கழித்து, 2015-ல் காங்கிரஸ் எம்.பி-யான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய நாடு முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்த விஷயம் குறித்து சுதர்சன நாச்சியப்பனிடம் பேசினோம். “மக்களவைக்குத் தேர்தல் நடத்தும் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்போ, ஆறு மாதங்களுக்கு பின்போ வருகிற சட்டப்பேரவைத் தேர்தல்களை, மக்களவைத் தேர்தலுடன் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படிச் செய்தால், 13 மாநில சட்டப்பேரவைகளின் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் நடத்த முடியும். ஜம்மு காஷ்மீரில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. பீகார் மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிக காலம் உள்ளது. எனவே, இந்த இரு மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களில் இரண்டரை ஆண்டுகள் கழித்து இடைக்காலத் தேர்தல் போல நடத்தலாம் என்று சொல்லியிருந்தோம். அதை, நிதி ஆயோக் அமைப்பும் ஏற்றுக்கொண்டது. ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த வேண்டும். அதே காலகட்டத்தில் மக்களவைத் தேர்தலையும் நடத்தினால், 18 மாநிலங்களுக்கு ஒன்றாகத் தேர்தல் நடத்தி விடலாம் என்று பி.ஜே.பி அரசு நினைக்கிறது. எந்த ஒரு தேர்தலையும் ஆறு மாதங்களுக்கு முன்பே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஆண்டுதோறும் தேர்தல் நடத்துவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். அதனால், முக்கியக் கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியாமல் போய்விடுகிறது; பொருளாதாரத் தேக்கம் ஏற்படுகிறது; அரசு இயந்திரம் செயல்படமுடியாத நிலை ஏற்படுகிறது; நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை; அரசுக்கு அதிக செலவாகிறது; எல்லையில் பாதுகாப்பில் ஈடுபடுபவர்களையும், போலீஸாரையும் தேர்தல் பணிக்காக நியமிப்பதால், வழக்கமான பாதுகாப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன. எங்கள் ஆலோசனையின்போது, பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை ஒரு நல்ல திட்டம் என்றே சொன்னார்கள்’’ என்கிறார் அவர்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமியிடம் பேசினோம். ‘‘ஒரே நேரத்தில் எல்லா தேர்தல்களையும் நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. 2019-ல் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதாக வைத்துக் கொள்வோம். தேர்தல் முடிந்த பிறகு, உ.பி அல்லது வேறு சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்? திரும்பவும் தேர்தல் நடத்த முடியுமா? அப்போது, மீண்டும் இதே போன்ற நிலைதானே ஏற்படும். ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் உள்ளது போல, தேர்தல் முடிவடைந்த பின்னர் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அரசியல் கட்சிகள் இணைந்து தங்களுக்குள் முட்டி மோதி ஆட்சி அமைக்கும் வகையிலான நடைமுறையை அமல்படுத்த வேண்டும். 

ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?

மத்திய அரசு ஒரு கட்சியின் தலைமையிலும், மாநிலங்களில் வேறு கட்சிகளின் ஆட்சியும் நடக்கிறது. பிடிக்காத மாநில அரசை மத்திய அரசு கலைக்கிறது. அப்போது இடைத்தேர்தல் வரத்தானே செய்யும். எனவே, மாநில அரசைக் கலைக்கும் சட்டப்பிரிவை நீக்க முதலில் வழி செய்ய வேண்டும். ஆட்சியில் இருப்பவர், சட்டப்பேரவையைக் கலைக்க பரிந்துரைத்தால், மீண்டும் ஒரு தேர்தல்தானே வரும். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு மாநில அரசைக் கலைக்கக் கூடாது. ஒரு மாநிலத்தில் மிகவும், கவலைப்படத்தக்க வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அந்த சட்டசபையை முடக்கி வைக்கலாம். நிலைமை சீரானவுடன், மீண்டும் அந்த சபையைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம். இதையெல்லாம் செய்தால்தான், மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரான சி.மகேந்திரன், ‘‘தேர்தல் செலவு குறையுமா, கூடுமா என்பதையெல்லாம்விட தேர்தலை ஒழுங்கமைக்க வேண்டிய இன்னொரு முக்கிய வேலை இருக்கிறது. இன்றைய தேர்தல் முறை என்பது பணத்தை மையப்படுத்தியதாக இருக்கிறது. பணம் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மற்றவர்கள் வெற்றிபெற முடியாது என்ற நிலை வந்துள்ளது. இதுகுறித்து மத்திய ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. தேர்தல் என்பது கறுப்புப் பணம் சம்பந்தப்பட்டதாக இருப்பதுதான் ஜனநாயகத்தில் மொத்த சீரழிவுக்கும் காரணம். இந்தப் பிரச்னையை மாற்றுவதற்கு முயற்சி எடுக்காமல், ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் முதல்வரைத் தேர்வு செய்வதற்கும், இந்தியாவில் பிரதமரைத் தேர்வு செய்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. எனவே, ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதை ஏற்கவே முடியாது” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி

வியூகம் வகுக்கும் மோடி!

ஒரே தேசம்... ஒரே தேர்தல்... ஜனநாயகத்துக்கு நல்லதா?

க்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தல்களையும் இணைத்து நடத்துவது குறித்து தானேவில் உள்ள வலதுசாரி ஆய்வு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2018 ஜனவரியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதையடுத்து, பிரதமர் மோடியிடம் 36 பக்க அறிக்கை ஒன்றை அந்த நிறுவனம் அளித்தது. அதில், ‘மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரலாம்’ என்று ஒரு யோசனை சொல்லப்பட்டது. ஆனால், சட்டத்திருத்தம் செய்வதை மோடி விரும்பவில்லை. ‘இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசென்றால், அதற்கு பல கட்சிகள் முட்டுக்கட்டை போடும்’ என்று அவர் நினைக்கிறார். எனவே, சட்டசபைக் காலம் முடிவுக்கு வந்த மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விட்டு, பின்னர் மக்களவைத் தேர்தலுடன் அந்த மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்று மோடி நினைப்பதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.