அலசல்
Published:Updated:

உங்கள் தேர்தல் விளையாட்டுக்குத் தமிழர்கள்தான் கிடைத்தார்களா?

உங்கள் தேர்தல் விளையாட்டுக்குத் தமிழர்கள்தான் கிடைத்தார்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் தேர்தல் விளையாட்டுக்குத் தமிழர்கள்தான் கிடைத்தார்களா?

கனிமொழியின் கனல்மொழி

போராட்டக் களங்களிலும், தி.மு.க-வினர் இல்ல நிகழ்வுகளிலும் இப்போது கனிமொழியை அதிகம் பார்க்க முடிகிறது. ‘தி.மு.க-வில் முக்கிய பதவியை எதிர்பார்த்து இப்படிப் பரபரப்பாக இயங்குகிறீர்களா’ என்று கேட்டால், ‘‘நான் எம்.பி-யாக இருக்கிறேன். கட்சியில் மகளிர் அணி மாநிலச் செயலாளராக இருக்கிறேன். இதைவிட உயர்ந்த பதவிகள் வேண்டுமா என்ன?’’ என்று சிரிக்கிறார். சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்...

‘‘காவிரி மேலாண்மை வாரியம் கோரி தி.மு.க நடத்திய போராட்டங்களில் வீரியம் இருப்பதாகத் தெரியவில்லையே?’’

‘‘அப்படியல்ல. அனைத்துத் தோழமை கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தொடர் போராட்டங்களை தி.மு.க முன்னெடுத்து வருகிறது. தளபதியின் எழுச்சிகரமான பயணத்துக்கு இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், விவசாயிகள் என மக்கள் சாரை சாரையாக வந்து ஆதரவு தெரிவித்தார்களே... அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘உங்களால் மட்டுமே மேலாண்மை வாரியத்தைக் கொண்டுவர முடியும்’ என்று மக்கள் நம்பிக்கையோடு தெரிவித்தார்களே... கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நம்பிக்கை தரக்கூடிய பயணமாக அது அமைந்தது."

உங்கள் தேர்தல் விளையாட்டுக்குத் தமிழர்கள்தான் கிடைத்தார்களா?

"ஆனால் ‘இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்த நீங்கள், காவிரிக்கான ஸ்கீம் அமைக்க இன்னும் 40 நாள்கள் பொறுத்துக்கொள்ளுங்களேன்’ என்று பி.ஜே.பி தலைவர்கள் கூறுகிறார்களே!’’

‘‘எதற்காக 40 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்? அதற்குள் கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்பதாலா? தமிழ்நாட்டு விவசாயிகளைப் பகடைக் காயாக வைத்து, தேர்தல் விளையாட்டு ஆடுகிறீர்களா? நீங்கள் தேர்தல் விளையாட்டு ஆட தமிழர்கள்தான் கிடைத்தார்களா? பி.ஜே.பி-யின் விளையாட்டுகள் இங்கே எடுபடாது. அவர்களின் செயல்பாடுகள், நம் அடையாளங்களையும், தலைவர்களையும் கொச்சைப்படுத்துவதாக இருக்கின்றன. இந்தித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு என நமது பண்பாட்டு விழுமியங்களில் கைவைக்கிறார்கள். முக்கியமாக, இங்கே இருக்கிற அரசாங்கம் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றுவதாக இல்லை. அதனால், எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லாவற்றையுமே பி.ஜே.பி ஆட்சியாளர்கள் அரங்கேற்றி வருகிறார்கள். நியூட்ரினோ, மீத்தேன், நீட் என மக்களின் எதிர்ப்பு உணர்விலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, எதை எதையோ பேசுகிறார்கள். பெரியாரை அவதூறாகப் பேசினால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டே இவ்வாறு திசைதிருப்புகிறார்கள். இதை நாம் புரிந்துகொண்டாலும், கண்டுகொள்ளாமல் விட முடியாது. நம் கண்டனத்தைத் தெரிவித்தே ஆகவேண்டும். தமிழர்களின் உரிமைகளைக் கைவிட்டுவிட்டு, உங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்போம் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம்.’’

‘‘நியூட்ரினோ திட்டம் மோடி கொண்டு வந்தது இல்லை... எதற்கெடுத்தாலும் மோடியையே எதிர்ப்பதில் நியாயமில்லை என்கிறார்களே பி.ஜே.பி-யினர்?’’

‘‘நான் இப்போது சேலத்துக்குப் போயிருந்ததால் சொல்கிறேன். முன்பே, அங்குள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, மக்கள் எதிர்ப்பையும் அதிலுள்ள நியாயத்தையும் உணர்ந்து அந்த எண்ணத்தைக் கலைஞர் கைவிட்டார். ஆனால், இப்போது என்ன நடக்கிறது? விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதேதான் எண்ணூர், தேனி என்று தொடர்கிறது. மக்கள் எதிர்ப்பில் நியாயம் இருந்தால், அதை உணர்ந்து திட்டத்தை நிறுத்துவதுதான் ஓர் அரசாங்கத்தின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநரே அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்வதை வேடிக்கைப் பார்க்கும் இந்தத் தலையாட்டி பொம்மை அரசாங்கத்திடம், அதை எதிர்பார்க்க முடியவில்லை.’’

‘‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சர்ச்சைகள் சூழ்ந்துள்ளனவே?’’

‘‘தொடர்ந்து தி.மு.க சொல்வதுதான். ‘ஆட்டுக்கு தாடி தேவையில்லை... மாநிலத்துக்கு கவர்னர் தேவையில்லை.’ ஆளுநர் ஆய்வு செய்யப் போகிற இடங்களில் எல்லாம் தி.மு.க கறுப்புக் கொடி காட்டிக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தும், அவர் அதை நிறுத்துவதாக இல்லை. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்த கல்லூரிப் பிரச்னையில் (நிர்மலாதேவி) ஒரு நபர் கமிஷன் ஒன்றை, அவருக்குக் கீழே அவரே நியமித்துள்ளார். அவரைப் பற்றியும் இந்த விவகாரத்தில் சில சந்தேகக் கருத்துகள் இருக்க, அவரே அவரை எப்படி விசாரித்துக்கொள்ள முடியும்? அரசாங்கம் செய்ய வேண்டிய ஒன்றை ஏன் கவர்னர் செய்ய வேண்டும்? ஆளுநர் இங்கே அரசியல் சட்டத்தை மீறிய ஒரு நபராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.’’

‘‘ஹெச்.ராஜா ட்வீட், எஸ்.வி.சேகர் ட்வீட் குறித்து?’’

“நான் எப்போதும் மனிதர்களுக்குத்தான் பதில் சொல்வேன். அவர்களுக்குப் பதில் சொல்லி என் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. பெண்கள் கருத்து சொன்னாலே தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது தொடர்ந்தபடி உள்ளது. ‘அவர்கள்மீது என்ன நடவடிக்கை’ என்று    பி.ஜே.பி தலைவர்கள்தான் சொல்ல வேண்டும்.’’

‘‘தி.மு.க தனது செல்வாக்கை இழந்துவருகிறது என்று சில கட்சிகள் கூறுகின்றனவே?’’

‘‘அது சில பேருடைய கனவாக இருக்கலாம். ஆனால், அது நிறைவேறாத கனவு என்பதே உண்மை.’’

‘‘2ஜி வழக்கு மேல்முறையீடு?’’

‘‘எதிர்பார்த்த ஒன்றுதான். அதையும் சந்திப்போம்.’’

‘‘கருணாநிதி எப்படி இருக்கிறார்? பழையபடி அவரை எப்போது பார்க்கலாம்?’’

‘‘சிகிச்சைக்காக தொண்டையில் பொருத்தியுள்ள டியூபை இன்னமும் அகற்றாததால், அப்பா வால் பேச முடியவில்லை. மற்றபடி நலமாக இருக்கிறார். முழுமையாகத் தேறி, மீண்டும் தனது கரகரத்த குரலில் தமிழ் மக்களுக்காக அவர் முழங்கும் காலம் தொலைவில் இல்லை.’’

- சே.த.இளங்கோவன்
படம்: கே.ராஜசேகரன்