Published:Updated:

தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்: என்ன நடக்கிறது காஷ்மீரில்?

காஷ்மீர் என்றவுடன் பலருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், வெடிகுண்டு தாக்குதல்களுமே நினைவுக்கு வருவதாக மாறிப்போயுள்ளது. அதுபோன்றதொரு சம்பவம்தான் ஜம்மு காஷ்மீரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேறியுள்ளது. 

தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்: என்ன நடக்கிறது காஷ்மீரில்?
தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்: என்ன நடக்கிறது காஷ்மீரில்?

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர், அங்குசென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில், பயங்கரவாதிகள் வைத்திருந்த குண்டுகள் வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களில் வெற்றிபெற்றது. பி.ஜே.பி. 25 இடங்களைக் கைப்பற்றியது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை பி.ஜே.பி. அமைத்து, ஆட்சிக்கு ஆதரவு அளித்தது.

ஜம்மு அருகே கதுவா என்ற இடத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமி வெளிக்கொண்டு வந்தார். அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கதுவாவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்குப் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்ததுடன், அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் பத்திரிகையாளர் ஷூஜாத் புகாரி கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் மெஹபூபா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை பி.ஜே.பி. விலக்கிக் கொண்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க இயலாத சூழ்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள், மாநிலத்தில் உள்ள பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே அம்மாநிலத்தில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகள், திங்கள்கிழமை ஒருநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன. ஒன்றுக்கொன்று கொள்கை முரண்பாடுகளைக்கொண்ட இரண்டு கட்சிகள் அமைத்த கூட்டணி, தீவிரவாதச் செயல்களைக் காரணம்காட்டி, 26 மாதங்களில் முடிவுக்கு வந்தது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி நடைபெற்ற நிலையிலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவங்களும், குண்டுவெடிப்புச் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே உள்ளன. 

காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுக்கு இல்லாதவகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது விதியின்கீழ், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காஷ்மீர் எல்லைக்குள் இடங்களை வாங்க முடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் அம்மாநில அரசின் அனுமதியைப் பெற்றே, காஷ்மீரில் கொண்டுவர முடியும். மத்தியில் ஆளும் பி.ஜே.பி., `பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்' என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. மெஹபூபா அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டதற்கும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையையே பி.ஜே.பி. காரணம்காட்டியது. அப்படி இருக்கும்போது, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம்.

``காஷ்மீர் மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்பட வேண்டுமானால், அம்மாநிலத்தின் அடிப்படைப் பிரச்னையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். `அங்கு நடைபெறும் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் பாகிஸ்தான்' என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் இந்தியாவை ஆக்கிரமிக்கும் நோக்கம் இருக்கலாம். ஆனால், காஷ்மீர் மாநில மக்கள் ஒருபோதும் பாகிஸ்தானுக்குச் செல்ல எண்ணியதில்லை. அப்படி அவர்கள் நினைத்திருந்தால், பாகிஸ்தான் உருவானபோதே அங்குச் சென்றிருப்பார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜம்மு-காஷ்மீர் மண்ணின் பூர்வகுடிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்த மக்கள் எப்போதும் சமய சார்பற்றவர்களாகத்தான் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது எப்போதுமே மதச்சாயம் பூசப்படுகிறது. அந்த மக்கள், இந்தியாவோடு இணையும்போது மன்னராக இருந்தவர் ஹரிசிங் என்ற இந்து மன்னர்தான்.

நீண்ட நெடுங்காலமாக பி.ஜே.பி. அரசு, `காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்தே தீருவோம்' எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. `தீவிரவாதத்தை ஒழிக்கவில்லை' என்று தெரிவித்து, மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை பி.ஜே.பி. வாபஸ் பெற்றது. தற்போது, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியும், மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியும் உள்ள நிலையில், ஏன் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன? அங்கு நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டுமானால், ஜனநாயக முறையில் மாநிலத்தில் வாக்கெடுப்பு நடத்தி, அங்குள்ள மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார்.

காஷ்மீர் மக்களின் பிரச்னைகளுக்கு எப்போதுதான் தீர்வு ஏற்படுமோ?