அலசல்
Published:Updated:

ராஜாக்களுக்கும் சேகர்களுக்கும் இது பொருந்துமா மோடி அவர்களே?

ராஜாக்களுக்கும் சேகர்களுக்கும் இது பொருந்துமா மோடி அவர்களே?
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜாக்களுக்கும் சேகர்களுக்கும் இது பொருந்துமா மோடி அவர்களே?

ராஜாக்களுக்கும் சேகர்களுக்கும் இது பொருந்துமா மோடி அவர்களே?

பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதிலும் சிலருக்கு சுகம் உண்டு. இத்தகைய நோயாளிகள் அரசியலில் அதிகமாகிவிட்டார்கள். முன்பு இப்படிப் பேசுவது ரகசியமாய் இருந்தது. காதும் காதும் வைத்ததுபோலப் பேசிக்கொள்வார்கள். ரகசியமாய் சொல்லிச் சிரித்துக்கொள்வார்கள். இப்போது, பகிரங்கமாகச் செய்கிறார்கள். அதைப்பற்றிய கூச்சமோ வெட்கமோ அவர்களுக்கு இல்லை. இப்படிப் பேசுபவர்கள் தங்களைக் கலாசாரக் காவலர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். இவர்களும் பெண் வயிற்றில் பிறந்தவர்கள்தான்; பெண்களுடன் பிறந்தவர்கள்தான்; பெண்ணைப் பெற்றவர்களாகவும் இருப்பதுதான் அதிர்ச்சியாய் இருக்கிறது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றின் உதவிப் பேராசிரியையான நிர்மலாதேவி, தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளைப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி, தனக்கு ஆதாயமான பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்துள்ளார். அதற்கு ஆதாரமாக ஆடியோ வெளியானது. ‘இதில் பேசியிருப்பது நான்தான்’ என்று அந்த நிர்மலாதேவி ஒப்புக்கொண்டார். தனது உரையாடலில் தமிழக கவர்னர் பற்றி அவர் பேசுகிறார். திடீரென, ‘‘கவர்னர்.... தாத்தா அல்ல’’ என்றும் நிர்மலா சொல்கிறார். இதனால் இது அருப்புக்கோட்டை கல்லூரி விவகாரம், மதுரை காமராசர் பல்கலைக்கழக விவகாரம் என்ற எல்லைகளையெல்லாம் தாண்டி கவர்னர் விவகாரமாக ஆகிப்போனது. இதில் நான் சம்பந்தப்படவில்லை என்று கவர்னர் விளக்கம் அளித்துள்ளார். அந்த நிருபர்கள் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்பிரமணியனின் கன்னத்தை கவர்னர் தொட்டார். பிறகு, அதற்காக வெளிப்படையாக அவர் மன்னிப்பும் கேட்டார். அது இன்னொரு பக்க சர்ச்சையாகப் போய்க்கொண்டிருக்கிறது. நிர்மலாதேவி விவகாரம் பற்றி சந்தானம் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளார் கவர்னர். சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மை வரட்டும், காத்திருப்போம்.

ராஜாக்களுக்கும் சேகர்களுக்கும் இது பொருந்துமா மோடி அவர்களே?

கவர்னர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தமில்லாமல் தமிழக பி.ஜே.பி பிரமுகர்களுக்கு ஏன் வியர்க்கிறது என்று தெரியவில்லை. பன்வாரிலால் புரோஹித் - நிர்மலாதேவி விவகாரம் பற்றியெறிந்த நேரத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பிறப்பு பற்றி வன்மமான கேள்வியைப் பதிவு செய்தார் பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. கவர்னரை விமர்சித்து லக்ஷ்மி சுப்பிரமணியன் ட்விட்டரில் பதிவிட்டபோது, அதற்கு எதிராக பி.ஜே.பி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் வெளியிட்ட பதிவு, அவர் மனதுக்குள் இருந்த குரூரத்தை வெளிப்படுத்தியது. யாரோ ஒருவரின் பதிவைப் பகிர்ந்தார் சேகர். ‘பெண் பத்திரிகையாளர்கள் மோசம்’ என்றும், ‘அவர்கள் உடலை வைத்துத்தான் வளர்கிறார்கள்’ என்றும் கழிசடைத்தனமாகக் குற்றம்சாட்டும் பதிவு இது.

எழுத்தின் அறம் கருதி அவற்றை முழுதாக இங்கே எழுத முடியாது. பெண்களை இழிவாகப் பேசுவது - அதுவும் ஒரு பெண்ணைத் தலைவராகக் கொண்டிருக்கும் தமிழக பி.ஜே.பி-யில் இருப்பவர்கள் தொடர்ந்து இதைச் செய்வது, அவர்கள் பெண்கள்மீது எந்த அளவுக்கு மதிப்பு கொண்டுள்ளார்கள் என்பதையும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. ராஜா சொன்னது தமிழிசை, வானதி சீனிவாசன் ஆகியோராலேயே சகிக்க முடியவில்லை. அந்தளவுக்கு அசிங்கமாக இருந்தது. தமிழக பி.ஜே.பி-யின் தரத்தை, தரை டிக்கெட்டுக்கு இறக்கிய ராஜா, இதுபற்றி மன்னிப்புக் கேட்கவில்லை. கர்நாடக பி.ஜே.பி-யைக் காப்பாற்றுவதற்குக் கிளம்பிவிட்டார்.

சேகரின் பதிவுக்கு வலுவான கண்டனங்கள் எழுந்ததால், அவர் தான் பகிர்ந்த அந்தப் பதிவை நீக்கினார். பதிவுசெய்த திருமலை ராஜன் என்பவரது முகநூல் கணக்கும் நீக்கப்பட்டது. தமிழக ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து தமிழக பி.ஜே.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினார்கள். எஸ்.வி.சேகர்மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே காணொளி வழியாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘ஊடகத்தினருக்கு நீங்களே மசாலா கொடுக்காதீர்கள். எதைப் பேசுகிறோம் என யோசித்துப் பேசுங்கள். ஊடகவியலாளர்கள் அவர்களது வேலையைத்தான் செய்கிறார்கள்’’ என்று  கடிந்துகொண்டுள்ளார். இருப்பினும் கட்சி அளவிலும் இதுவரையில்  எஸ்.வி.சேகர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ராஜாக்களுக்கும் சேகர்களுக்கும் இது பொருந்துமா மோடி அவர்களே?

எஸ்.வி.சேகரின் சிந்தனை ஒரு வகையில் அந்தக் கட்சியினர் பலரின் சிந்தனையைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பி.ஜே.பி-யின்     எம்.எல்.ஏ ஒருவர்மீது, 17 வயதுப் பெண்ணை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய புகார் வந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் எட்டு வயதுச் சிறுமி பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பி.ஜே.பி அமைச்சர்கள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுமியிடம் பி.ஜே.பி பிரமுகர் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். இப்படி இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கத்துவா குற்றம் தொடர்பாக லண்டனில் கருத்து கூறிய மோடி, ‘‘பாலியல் வன்முறைகளை அரசியலாக்க வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் மகன்களை நல்ல சிந்தனையுடன் வளர்க்கப் பழகுங்கள்’’ என்று கூறியிருந்தார். பெண்களை இழிவான வார்த்தைகளால் குதறும் ராஜாக்களும் சேகர்களுக்கும்கூட இது பொருந்தும்தானே பிரதமர் மோடி அவர்களே? ‘தங்க மகள் திட்ட’த்தை அறிவித்த பிரதமர் மோடி, தங்கள் கட்சி உறுப்பினர்களைத் தரம்பார்க்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்.

- ஐஷ்வர்யா