அலசல்
Published:Updated:

திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி

திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி
பிரீமியம் ஸ்டோரி
News
திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி

திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி

‘‘நான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும்? இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். நாம் நமக்கான வழியைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என மன்னார் குடியில் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் மத்தியில் கர்ஜனை செய்திருக்கிறார் திவாகரன். விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் திவாகரன் இருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள். இதன் பின்னணி யில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால், பரபரக்கத் தொடங்கியுள்ளது மன்னார்குடி வட்டாரம்.

ஜெயலலிதா இருந்தபோதே, ‘சென்னையும் மன்னையும் ஒன்றுதான்’ என்கிற அளவுக்கு பவர் சென்டராக வலம் வந்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன். ஜெ. மறைவுக்குப் பிறகு தான் சிறை செல்ல நேர்ந்தபோது, கட்சியின் அதிகாரத்தை தினகரனிடம் கொடுத்தார் சசிகலா. அப்போது தொடங்கியது, தினகரனுக்கும் திவாகரனுக்குமான அதிகார மோதல். இந்த மோதலில், சசிகலா குடும்பத்திடமிருந்து ஆட்சி அதிகாரம் பறிபோனது. ஆதரவாளர்கள் சிலர், ‘‘நீங்கள் மோதிக்கொள்வதால் இழப்பு எல்லோருக்கும்தான்’’ என்று சொல்லி, இருவரையும் இணைக்க முயன்றனர். டாக்டர் வெங்கடேஷின் அம்மா சந்தானலெட்சுமி மறைந்த நேரத்தில், மரண வீட்டில் சமாதானம் பேசி இருவரையும் ஒன்றாக போஸ் கொடுக்க வைத்தனர்.

திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி

அதையடுத்து அமைதியான திவாகரன், தன் மகன் ஜெயானந்துக்குக் கட்சியில் மாநில அளவில் முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் கோரிக்கை வைத்தார். தினகரன் அதை ஏற்காமல், ‘‘கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்குப் பக்கபலமாக பின்னால் இருந்தால் மட்டும் போதும்’’ எனத் தடைபோட்டார். அதிகபட்சமாக திவாகரன் குடும்பத்துக்கு தினகரன் செய்தது, மேலூரில் நடத்திய முதல் கூட்டத்தின்போது மேடையில் ஜெயானந்தை உட்கார வைத்ததுதான்!

கட்சி பொறுப்பு கிடைக்காத கடுப்பில் இருந்த ஜெயானந்த், ‘போஸ் மக்கள் பணியகம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மாவட்டம்தோறும் நிர்வாகிகளை நியமித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தி தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். திவாகரனும் தன் மகனுக்கு மகுடம் சூட்டும் விழாவாக மன்னார் குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை நடத்தினார். இதனால் இருவர்மீதும் தினகரனுக்குக் கோபம் அதிகமானது.

அந்தச் சூழலில் தான், தன் கணவர் நடராசன் இறுதிச் சடங்குக்காக பரோலில் தஞ்சாவூர் வந்தார் சசிகலா. அப்போது சசிகலா முன்னிலையிலேயே இருவருக்கும் மோதல் வெடித்தது. ‘‘நான் இந்த இயக்கத்தின் வெற்றிக்காகவும் உழைத்தவன். ஆனால், என்னிடம் எதையுமே ஆலோசிப்பது இல்லை; மதிப்பதும் இல்லை. ஒதுங்கியே இருந்து எல்லாவற்றையும் செய்தேன். இப்போது ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறேன்’’ என்று திவாகரன் வெடித்தார்.

அத்துடன் ஒரு புகார்ப் பட்டியலையும் வாசித்திருக்கிறார் திவாகரன். ‘‘சேலத்திலிருந்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் தன் ஆதரவாளர்களுடன் நம் கட்சியில் இணைவதற்காக என்னை அணுகினார். நானும் அவரை தினகரனிடம் அனுப்பி வைத்தேன். ஆனால், ‘உங்க பகுதியில மாவட்டச் செயலாளர் இருக்கார். அவரை அணுகாமல் ஏன் திவாகரனைப் போய்ப் பார்த்தீங்க’ என்று தினகரன் அந்தப் பிரமுகரிடம் கேட்டிருக்கிறார். நான் அனுப்பினேன் என்ற ஒரே காரணத்துக்காக பல வகையில் இழுத்த டித்தனர். இப்படிச் செயல்பட்டால், நாம் இழந்ததை எப்படி மீட்பது? மேலும், கட்சி நிகழ்ச்சி, லெட்டர் பேடு போன்றவற்றில் உன் போட்டோவைக்கூட சரியா பயன்படுத்துறது இல்லை. இவற்றுக்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கிறது’’ என்று சசிகலாவிடம் தினகரன் குறித்து சொல்லியிருக்கிறார் திவாகரன். 

தினகரன், ‘‘நான்தான் கட்சியை வழிநடத்துகிறேன். திவாகரன் மீடியாவிடம் எதையாவது பேசிவிடுகிறார். ஜெயானந்த் தனியாக ஓர் அமைப்பைத் தொடங்கி நடத்துகிறார். இவையெல்லாம் நம் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு உதவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் இடையூறு செய்யாமல் இருந்தால் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்வேன்’’ என்று சசிகலாவிடம் சொன்னார்.

சசிகலா கஷ்டப்பட்டு இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடராசன் படத்திறப்பு விழா உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த வாரம் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவைக் காரணம் காட்டி திவாகரன் அதில் கலந்துகொள்ளவில்லை. படத்திறப்பு விழாவில் பேசிய பிரமுகர் ஒருவர், ‘‘சசிகலா குடும்பத்தில் யாரும் எதற்காகவும் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே நடராசன் விரும்பினார். சசிகலாவுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறும் இதுதான்’’ என்றார். ‘தினகரனுக்கும் திவாகரனுக்கும் நடக்கும் மோதலை மனதில்வைத்தே அவர் இப்படிப் பேசினார்’ என்கிறார்கள்.

சசிகலாவின் சமாதானப் பேச்சு சில நாள்கள்கூட நீடிக்காமல், இப்போது மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்தான், மன்னார்குடி மன்னை நாராயணசாமி நகரில் உள்ள தன் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை செய்திருக்கிறார்

அப்போது, ‘‘தினகரனை அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததால்தான், ஆளும்தரப்புக்கு நம்மீது கோபம். இப்போதும் சசிகலாவை அவர்கள் ஏற்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். மனைவி அனுராதா, மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் சொல்வதைத்தான் தினகரன் கேட்கிறார். இதனால், நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நாஞ்சில் சம்பத் வெளியே சென்றதற்கு இவர்களின் செயல்பாடுகள் தான் காரணம். இப்போது, தங்க தமிழ்ச்செல்வனும் தினகரனின் செயல்பாடுகளால் கடுமையான விரக்தியில் இருக்கிறார். ‘நீங்கள் எந்த நிலையிலும் வெளியே சென்று விடக்கூடாது’ என்று சசிகலா சத்தியம் வாங்கியிருப்பதால்தான், தங்க தமிழ்ச்செல்வன் கட்சியில் நீடிக்கிறார். இப்போதே இப்படியென்றால், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு என்னவாகும் என்றே தெரியாது. அதனால், நமக்கு ஆக வேண்டியதை நாம் பார்க்கவேண்டும். ஆளும்தரப்பிலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்’’ என ஆதரவாளர்களிடம் சொல்லியிருக்கிறார் திவாகரன். ‘அவரிடமிருந்து அறிவிப்பு விரைவில் வெளிவரும்’ என்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள்.

தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ‘‘தினகரன் பொறுப்பேற்ற பிறகுதான், குடும்பத்தின்மீது இருந்த அவப்பெயரையெல்லாம் துடைத்து, கட்சியை வளர்த்திருக்கிறார். நிர்வாகிகள் அனைவரும் தினகரன் பக்கம்தான் இருக்கிறார்கள். அவருக்கு அரசியலில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக பல கட்சித் தலைவர்கள் பேசிவருகிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும்தரப்பினர், சசிகலா குடும்பத்திலிருந்து யாரையாவது பிரித்து அவர்கள் பக்கம் இழுக்க நினைத்தனர். அதன்மூலம் தினகரனை முடக்கும் ஆபரேஷனைத் திட்ட மிட்டனர். திவாகரனுக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் மூலம் காய்களை நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் சொல்கிறபடியே திவாகரன் செயல்படுகிறார். யார் என்ன செய்தாலும் தினகரனை யாராலும் வீழ்த்த முடியாது’’ என்றனர் அவர்கள்.

இந்நிலையில், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், திவாகரனையும் அவரின் மகன் ஜெயானந்தையும் வெளிப்படையாகக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ‘‘கடந்த ஆண்டு மறைந்த மகாதேவன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யார் என்பதும் எங்களுக்குத் தெரியும்’ என வெற்றிவேல் அனல் கிளப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. ஏப்ரல் 28-ம் தேதி திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கலந்து கொள்கிறார். ‘‘அப்போது சில பேச்சுகள் உறுதி செய்யப்படும். அதன்பிறகு திவாகரன் களத்தில் இறங்குவார்’’ என்கிறார்கள் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

 - கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்

திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி

‘சீண்டினால் அரசியல்தான்!’

தி
வாகரனின் மகன் ஜெயானந்த் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் இரண்டு பதிவுகள் பரபரப்பைக் கிளப்பின. ஏப்ரல் 22-ம் தேதி, ‘மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால், அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்’ என ஸ்டேட்டஸ் போட்டார் ஜெயானந்த். அடுத்த ஐந்து மணி நேரத்தில், ‘அரசியலில் செயல்படப் போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னைச் சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு’ என மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் போட்டார். ‘அமைப்பு சமைக்கப்படும்’ என ஜெயானந்த் குறிப்பிட்டது, திவாகரனின் தனிக்கட்சி பற்றித்தான் என்கிறார்கள்.