Published:Updated:

அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது, ரஜினி மனதில் என்ன இருக்கிறது?

அரசியல் களத்தில் ரஜினி தன் நிலைப்பாட்டை டிசம்பர் மாதத்தில் வெளிப்படையாக அறிவிப்பாரா என அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது, ரஜினி மனதில் என்ன இருக்கிறது?
அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது, ரஜினி மனதில் என்ன இருக்கிறது?

டிகர் ரஜினிகாந்த், கடந்த 1996 ம் ஆண்டு `பாட்ஷா' பட விழாவில், அரசியல் பேசியதிலிருந்தே `ரஜினிகாந்த், முழுநேர அரசியலுக்கு எப்போது வருவார்... எப்படி வருவார்...' என்ற எதிர்பார்ப்புமிக்க கேள்வி கேட்கப்பட்டு வந்தது. ஆனால், நெடுநாள்களாக நீண்ட இந்தக் கேள்விக்கு ரஜினி, நேரடியான பதிலைத் தராமல், இழுத்தடித்துக்கொண்டே வந்தார். இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் இருபெரும் துருவங்களாகத் திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்; மற்றொரு முன்னாள் முதல்வரான கருணாநிதியும் தீவிர அரசியலில் பங்கெடுக்க முடியாத அளவுக்கு உடல் நலிவுற்றார். தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தை உணர்ந்துகொண்ட பின்னரே ரஜினிகாந்த், தான் அரசியலுக்குள் வருவதை உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், அரசியலுக்கு வருவதை உறுதிசெய்த அவர், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தான் நிரப்பப்போவதாகவும், எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் அமைக்கப்போவதாகவும் சூளுரைத்தார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்த தன்னுடைய ரசிகர் நற்பணி மன்றங்களை, `ரஜினி மக்கள் மன்றம்' என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தார். அவற்றுக்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இந்த நிர்வாகிகள் நியமனங்களிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்தது தனிக்கதை. அதோடு நிற்காமல், சென்னைக் கோடம்பாக்கத்துக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை மாவட்டவாரியாக வரவழைத்து, ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னர், `வரும் டிசம்பர் மாதத்தில் என்னுடைய கட்சியின் பெயரை அறிவிப்பேன். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், என்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்' என்றார் ரஜினி. இதனால் உற்சாகமடைந்த ரஜினி ரசிகர்கள், மாநிலம் முழுவதும் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டினர். ஆனால், ரஜினிகாந்தோ இடைப்பட்ட இந்த இடைவெளிக்குள் இரண்டு திரைப்படங்களில் `கமிட்'டாகி அவரின் வருவாய் தடைபடாமல் பார்த்துக்கொண்டார். அதில் ஒரு படம் (காலா) வெளியாகிவிட்டது. மற்றொரு படம் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

டிசம்பர் மாதத்துக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தன் பிறந்தநாளான டிசம்பர் 12 ம் தேதி `புதிய அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவாரா ரஜினி' என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளிடையேயும் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக எந்தவோர் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், சினிமா ஷுட்டிங்கில் தீவிரம் காட்டிய ரஜினி, இப்போது மீண்டும் அரசியலில் சூட்டைக் கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்நிலையில், ``நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி" எனும் அவரின் திரைப்பட வசனத்தை நம்பிக்கொண்டு ஆயிரக்கணக்கான ரசிகர்களும், மன்ற நிர்வாகிகளும் காத்திருக்கையில், ``டிசம்பர் 12 ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற செய்தி உண்மையல்ல'' என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்.

``அட என்னப்பா, நம்ம தலைவர் திடீர் திடீர்னு இப்படிப் பேசிக்கிட்டு இருக்காரு... அரசியல் களத்துக்கு வருகிறேன் என்று அறிவித்த கையோடு, கட்சிப் பெயரையும், கொடியையும் அறிவித்து, நிர்வாகிகளையும் நியமித்துவிட்டார் கமல். தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணமும் செய்து, மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனா, நம்ம தலைவர் என்னடான்னா, கட்சிப் பெயரை அறிவிப்பதற்கே இவ்வளவு தாமதப்படுத்திக்கிட்டு இருக்காரே?" என ரஜினி மன்ற நிர்வாகிகள் அங்கலாய்க்கத் தொடங்கினர்.

இந்தச் சூழ்நிலையில்தான், சென்னைக் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த், தன் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. `கட்சி தொடங்குவதற்கான 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்' என்றும் ரஜினி இரு தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். 

இதற்கிடையே ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``அரசியல் கட்சி குறித்து டிசம்பரில் ரஜினி கண்டிப்பாக அறிவிப்பார்'' என்றார். 

ரஜினியின் சகோதரர் பேட்டி, நிர்வாகிகள் சந்திப்பு.... உள்ளிட்ட பரபரப்புகளுக்கு இடையே `தமிழக அரசியல் களத்தில், தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை ரஜினி இப்போதாவது வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

``எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்" என்று ஏற்கெனவே திரைப்படங்களில் `பஞ்ச்' வசனம் பேசிக்கொண்டிருந்த ரஜினி, `இதுதான் அரசியலுக்கு வரவேண்டிய தருணம்' என்பதை உணர்ந்து, ரசிகர்களை மேலும் சோர்வடைய வைக்காமல், `உண்டு, இல்லை' என்பதை உறுதியாக அறிவித்தால் ரசிகர்களோடு சேர்ந்து, தமிழக மக்களும் நிம்மதியடைவார்கள்... 

இதற்கிடையே நடிகர் ரஜினி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரின் புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற அனைத்தும் என்னுடைய ஒப்புதலின்பேரிலேயே நடக்கிறது. தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை உருவாக்கி, அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்கவே அரசியலுக்கு வருகிறோம். அந்தவகையில், நாம் எதற்காக, எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிகவும் முக்கியம். 

30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தது மட்டுமே, மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுமையான தகுதியாகி விட முடியாது. சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொது மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாமும் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. ரசிகர் மன்றத்தை விடுத்து மக்கள் மன்றத்தை நான் உருவாக்கியதன் நோக்கத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதைத் தான் இது காட்டுகிறது.

ஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்திகளில் நமது நேரத்தை வீணடிக்கக் கூடாது. மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நமக்கும், நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று ரஜினி வெளியிட்டுள்ள கூறியுள்ளார்.

டிசம்பரில் என்ன செய்யப் போகிறார் ரஜினி....?