
``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது!’’ - ஜி.கே.வாசன் பேட்டி
`தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் மலிந்துவிட்டது. நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றமே சி.பி.ஐ விசாரணை நடத்தச் சொல்வது தமிழகத்துக்கு அவமானம். இதற்கு முதல்வர் என்ன செய்யப்போகிறார்' எனக் கேள்வி எழுப்பினார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இலங்கை அரசின் கொடுமையைத் தாங்க முடியாமல் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசு இணைந்து இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்களைப் பாதிக்கக்கூடிய சட்டங்களை இலங்கை கொண்டு வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி, கொள்ளிடம் ஆற்றில் அதிகமாக நடைபெறும் மணல் கொள்ளையால்தான் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஆகையால், இதுபோன்று நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள மணல் குவாரியை நிரந்தரமாகத் தமிழக அரசு மூட வேண்டும். தமிழக அரசு நீர் மேலாண்மையில் தோல்வியடைந்துள்ளது. முதலமைச்சர் மீது நீதிமன்றமே சி.பி.ஐ விசாரணை நடத்தச் சொல்வது தமிழகத்துக்கு அவமானம். நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றம் கருதியதால்தான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சந்தேகம் பொதுமக்களுக்கும் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் சரியாகச் செய்யவில்லை.
சபரிமலை விஷயத்தில் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும் இதைப் பரிசோதனைக் கூடமாக மத்திய அரசும் நீதிமன்றமும் அணுகக் கூடாது. மீ டூ விவகாரத்தைப் பொறுத்தவரையில் குற்றம் சாட்டுபவர்கள், சாட்டப்படுபவர்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.