Published:Updated:

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு?

ஜூ.வி EXCLUSIVE

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு?
எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு?
எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு?

மிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒற்றை வழக்காக இருக்கிறது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு. ‘‘இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும்’’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் மறக்காமல் சொல்லிக்கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். தங்கள் ஆட்சியையே தீர்மானிக்க இருக்கும் அந்த வழக்குக்குத் தமிழக அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து எவ்வளவு செலவழித்துக் கொண்டிருக்கிறது? விசாரித்தோம்.

தங்கள் முதுகில் குத்திய முதல்வரைப் பழிவாங்க, ஆளும்தரப்பிலிருந்த 18 எம்.எல்.ஏ-க்களை எடப்பாடிக்கு எதிராக ஏவினார் தினகரன். ‘எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என ராஜ்பவன் படியேறினார்கள் அவர்கள். அதன்மீது அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, தினகரன் ஆதரவாளர்களாக மாறிய இந்த 18 பேரின் எம்.எல்.ஏ பதவியையே பறித்தார் சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து அந்த 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்கள். அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இந்தியாவின் முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள். வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் எடப்பாடி அரசு, வக்கீல்களுக்குச் செலுத்திய ஃபீஸ் பற்றி விசாரித்தோம்.

‘சட்டசபை சார்பாக 2017-2018-ம் நிதியாண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட கட்டணம் எவ்வளவு?’ என, சட்டமன்றச் செயலகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு போட்டோம். இதற்கு, சட்டசபையின் பொதுத் தகவல் அலுவலரான கே.ரமேஷ், ‘இவை சட்டசபை செயலகத்துக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே உள்ள சிறப்புரிமை கொண்ட தகவல்கள் என்பதால், அவற்றைத் தர இயலாது’ எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தின் நிதித் துறை வட்டாரத்தில் அலசியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர், துணை சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களுக்குக் கட்டணமாக மட்டும் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் தரப்பட்டிருக்கிறது. இதற்கான ஆவணம் நமக்குக் கிடைத்ததும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல்முறையீடு செய்தோம்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு?

‘சிறப்புரிமை கொண்ட தகவல் என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8(1)(உ)-ன் கீழ் தகவல்களைத் தர இயலாது’ என முன்பு தெரிவித்திருந்தார் பொதுத் தகவல் அலுவலர் ரமேஷ். ‘மக்களின் நலனுக்குத் தேவையானது எனத் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு கொண்டாலன்றி நம்பகத் தன்மையுடைய தகவலைத் தரத் தேவையில்லை’ என்கிறது அந்தச் சட்டப் பிரிவு. இதைச் சுட்டிக்காட்டி, ‘சட்டமன்றம் மக்களுக்கானது. அந்த சட்டமன்றத்துக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு. மக்கள் அளித்த வரிப்பணம்தான் வழக்கறிஞர்களுக்குக் கட்டணமாகத் தரப்பட்டுள்ளது. அந்தத் தகவலைக் கேட்பதில் பொதுமக்கள் நலன் சார்ந்திருக்கிறது’ என மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தோம்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் கட்டணமாக 1.76 கோடி ரூபாய் தரப்பட்டிருப்பது பற்றி மேல்முறையீட்டு மனுவிலும் குறிப்பிட்டோம். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு சட்டசபையின் மேல்முறையீட்டு அலுவலர் வசந்தி மலர் நமக்குப் பதில் அனுப்பினார். அதில், ‘சபாநாயகர் எடுத்த முடிவுக்கு இணங்க, தகவல்களைத் தர முடியாது’ எனத் தெரிவித்தார். ரமேஷ் நமக்கு அளித்த பதில் இந்த விஷயத்தைக் குறிப்பிடவில்லை. நாம் சட்ட விவரங்களைக் குறிப்பிட்டு மேல்முறையீடு செய்த நிலையில், ‘சபாநாயகர் முடிவு’ என்கிறார் வசந்தி மலர்.

ஏன் இப்படி ரகசியம் காக்கிறார்கள் என சட்டசபை வளாகத்தில் விசாரித்தோம். ‘‘சீனியர் வழக்கறிஞர்களை நியமிப்பதில் சட்டசபைச் செயலகத்துக்குள் அதிகாரப் போட்டியே நடக்கும். இதில் சட்டமன்றச் செயலாளரின் கைதான் ஓங்கியிருக்கும். எடப்பாடி ஆட்சிக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதால் ஆட்சிக்கு ஆபத்து வந்தது. எனவே அவர்களைத் தகுதிநீக்கம் செய்தார்கள். நீதிமன்றத்துக்கு வழக்கு போனதும், அதிலும் ஜெயிப்பதற்காக டெல்லியிலிருந்து சீனியர் வழக்கறிஞர்களை நியமித்தார்கள். அவர்களுக்குத் தரப்பட்ட ஃபீஸ் அத்தனையும் மக்களின் வரிப்பணம். அரசின் பணம் எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை என வழக்கு நடத்துகிறார்கள். 1.76 கோடி ரூபாய் என்பது கடந்த டிசம்பர் மாதம் வரையிலான செலவுதான். 2018 ஜனவரி வரையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அதற்கு ஆன செலவையும் சேர்த்தால் இரண்டு கோடி ரூபாயைத் தாண்டும். அரசைக் காப்பாற்றுவதற்காகக் கோடிகளில் வழக்கறிஞர் கட்டணம் செலுத்தப்பட்ட விஷயம் வெளியே தெரியக் கூடாது என்பதில் சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் உஷாராக இருக்கிறார். அதனால்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கும் பதில் தரவில்லை’’ என்றார்கள்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு?

தகுதிநீக்க வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புத் தேதி குறிப்பிடப்படாமல் ஜனவரி 23-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. விசாரணை முடிந்து 90 நாள்களைக் கடந்துவிட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில்தான் வழக்கு விசாரணை நடைபெற்றது. ‘இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாகச் சொல்லுங்கள். அல்லது அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுங்கள்’ என தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ‘வழக்கை விசாரித்துள்ளோம். தீர்ப்பை விரைவில் வழங்குவோம்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள். இன்னும் சில நாள்களில் நீதிமன்றத்துக்குக் கோடை விடுமுறை வந்துவிடும். விடுமுறை முடிந்து ஜூன் அல்லது ஜூலையில் தீர்ப்பு வெளியாகலாம். அதன்பின் மேல்முறையீடு சென்றால், அங்கும் இதைவிடப் பெரிய செலவும் காத்திருக்கிறது.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ரூ.1.76 கோடிக்கு என்ன செலவு?

‘இ
ந்த வழக்குக்கு 1.76 கோடி ரூபாய் செலவாகுமா?’ என வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘டெல்லியிலிருந்து வந்து வாதாடும் சீனியர் வழக்கறிஞர்கள் தனிக் கட்டண விகிதம் வைத்துள்ளனர்’’ என அதை விளக்கினார்கள்.

Study Fees: சீனியர் வழக்கறிஞர்கள், எடுத்தவுடன் வழக்குகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கேஸை ஸ்டடி செய்வதற்காக கேஸ் கட்டுகளைப் புரட்டிப் பார்ப்பார்கள். இப்படிப் படிப்பதற்காக இந்த ஃபீஸ் பெறப்படுகிறது. பத்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை Study Fees வாங்குகிறார்கள்.

Conference Fees: ‘கான்ஃபரன்ஸ்’ என்றால் பெரிய மாநாடு என நினைக்க வேண்டாம். வழக்கறிஞர்களும் வழக்கு போடுகிறவர்களும் எனக் குறைந்தது ஐந்து பேர்தான் மீட்டிங்கில் இருப்பார்கள். வழக்கை எடுத்து நடத்துவது தொடர்பாக இந்த கான்ஃபரன்ஸ் மீட்டிங் பெரும்பாலும் ஸ்டார் ஹோட்டல்களில் நடத்தப்படும். ஒரு மணி நேரத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் வரையில் இந்த ஃபீஸ் பெறப்படும்.

Argument Fees: நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்குத் தரப்படும் ஃபீஸ் இது. ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் வாங்கும் சீனியர் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஜூனியர்களுக்கு தனியாக ஃபீஸ் தரப்படும். அது சீனியர் வழக்கறிஞர்களுக்குத் தரப்படும் தொகையில் 10 சதவிகிதம்.

Assurance Appearance: கட்டாயமாக வழக்கில் ஆஜராவதற்காக இந்த ஃபீஸ் தரப்படுகிறதாம். இதற்கு ஐந்து லட்ச ரூபாய் வரையில் கட்டணம் தரப்படுமாம்.

மற்ற செலவுகள்: டெல்லியிலிருந்து வந்து செல்வதற்காக விமானத்தில் எக்ஸிக்யூட்டிவ் வகுப்பில் டிக்கெட், தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல் சூட் தேவைப்படும். ஜூனியர்களுக்குத் தனியாகச் செலவுகள் உண்டு. சென்னையில் பயணிக்க நல்ல கார்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவையெல்லாம் தனிச் செலவுகள்.