Published:Updated:

``அந்த ஊர் பெயரை `ஷியாமளா' என மாற்றுங்கள்!'' - குபீர் கோரிக்கை எந்த ஊருக்கு?

“பா.ஜ.க அரசு இப்படி நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மாநிலங்களிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் நல்லது.”

``அந்த ஊர் பெயரை `ஷியாமளா' என மாற்றுங்கள்!'' - குபீர் கோரிக்கை எந்த ஊருக்கு?
``அந்த ஊர் பெயரை `ஷியாமளா' என மாற்றுங்கள்!'' - குபீர் கோரிக்கை எந்த ஊருக்கு?

ரலாற்றில் தொடர்ந்து பல்வேறு நகரங்களின் பெயர்கள், ஆளும் அரசால் மாற்றம் செய்யப்பட்டே வந்துள்ளன. அந்தப் பெயர்கள், பெரும்பாலும் ஆளும் அரசின் சித்தாந்தங்களை முன்வைத்தே இருந்துள்ளன. இப்போதும் பா.ஜ.க அரசு இந்திய ஆளும் மாநிலங்களில் உள்ள மிக முக்கியமான நகரங்களின் பெயர்களை வரலாற்றையும் புராணங்களையும் காரணம்காட்டி பெயர்மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சில நாள்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் நகரின் பெயரை `பிரயாக்ராஜ்’ என மாற்ற வேண்டும் என்று கருத்துகள் வந்ததைத் தொடர்ந்து, தற்போது ``பிரிட்டிஷ் ஆட்சியின் தடயங்களை ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து நீக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக, இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவின் பெயரை `ஷியாமளா’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்” என்று வலதுசாரி அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை வைத்துள்ளது.

``நம்மை ஒருவர் அடிமையாக்குவது என்பது, உடலளவில் மட்டும் நிகழ்வதல்ல; மனதளவிலும் பண்பாட்டு அளவிலும்கூட அடிமைப்படுத்த முடியும். நம்மை அடக்கிவைத்திருந்தவர்கள் கொடுத்த அடையாளத்திலேயே இருக்க வேண்டும் என்பது ஒருவகையில் மனதளவில் அடிமையாக இருப்பதே. அதிலிருந்து விடுபடத்தான் பிரிட்டிஷார் கொடுத்த `சிம்லா' என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறோம். ஒரு நகரின் பெயரை மாற்றுவது என்பது, மிகவும் சிறிய விஷயம். அதேவேளையில் மரபு நோக்கிச் செல்வதற்கான மிக முக்கியமான செயல்பாடு. சுதந்திரத்துக்குப் பிறகு பிரிட்டிஷார் விட்டுச் சென்ற பல்வேறு பண்பாட்டு அடையாளங்களிலிருந்து இந்தியா விடுபட்டுவிட்டது. ஆனால், இமாச்சலப்பிரதேசத்தில் இன்றும் பல விஷயங்கள் காலனிய ஆதிக்கக் காலத்தில் நாம் அடிமைப்பட்டுக் கிடந்ததையே நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன. பிரிட்டிஷ்காரர்களால் `ஷியாமளா' என்ற பெயரை உச்சரிக்க முடியவில்லை என்பதாலேயே அவர்கள் `சிம்லா' என்று அவர்கள் வசதிக்குப் பெயர் மாற்றிப் பயன்படுத்தினார்கள். எனவே, அதற்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து, விஸ்வ இந்து பரிஷத்தின் மாநிலத் தலைவர் அமன் பூரி தெரிவித்துள்ளார்.

``இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசு வருவதற்கு முன் `சிம்லா' என்பது `ஷியாமளா' என்றே அழைக்கப்பட்டிருந்தது. மரபை மீட்கும் விதமாகவே சிம்லாவுக்கு அதன் பழைய பெயரான `ஷியாமளா' என்ற பெயரை வைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்டு எனது தலைமையிலான அரசு முடிவை எடுக்கும்” என்று இமாச்சலப்பிரதேசத்தின் முதலமைச்சர்  ஜெய் ராம் தாக்கூர் சிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில் நடைபெற்ற தசரா விழாவின்போது கூறினார்.

இந்தப் பெயர் மாற்றம் குறித்துக் கருத்து தெரிவித்த அந்த மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர் விபின் பார்மர், ``பெயர் மாற்றுவதால் எந்தப் பாதிப்பும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை. அதேநேரத்தில், மக்களுக்கு நமது பாரம்பர்யத்தின் தொன்மையை உணரச் செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல, இமாச்சலப்பிரதேச சுற்றுலாத் துறையின்மூலம் நடத்தப்பட்டுவரும் `பீட்டர் ஹோப்' என்ற ஹோட்டலுக்கு, ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று இவர்கள் கூறிவருகின்றனர். பீட்டர் ஹோப் என்பது, கவர்னர் ஜெனரல்கள் மற்றும் வைஸ்ராய்கள் கோடைக்காலத்தைக் கழிக்கும் இடமாக இருந்தது. பிறகு, பஞ்சாப் உயர் நீதிமன்றமாக மாற்றப்பட்டது. இங்கேதான் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே வழக்கு நடைபெற்றது. இமாச்சல் மாநிலத்தின் ஆளுநர் மாளிகையாகவும் இருந்துள்ளது.

டல்ஹௌசி நகருக்கு, சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ்சந்திர போஸின் நினைவாக அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளனர். ஆனால், 2016-ம் ஆண்டில் இதே கோரிக்கையை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வைத்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த வீர்பத்ர சிங் ``உலக அளவில் `சிம்லா' என்ற பெயரே பரவலாக்கப்பட்டு நிலைத்துவிட்டது. இப்போது இதன் பெயரை மாற்றும்போது உலகின் பிற பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே பெரிய குழப்பத்தை உண்டாக்கும். இதனால் சிம்லாவின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்” என்று கூறி நிராகரித்துவிட்டார்.

தற்போது இதைப் பற்றிக் கருத்து கூறியுள்ள காங்கிரஸின் மூத்த தலைவர் ஆனந்த சர்மா ``சிம்லாவின் பெயரை `ஷியாமளா' என்று மாற்றம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அபத்தமானவை; ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. சிம்லா, இந்தியாவின் கோடைக்காலத் தலைநகரம் மட்டுமல்ல; பல்வேறு சுதந்திரப் போராட்டங்களின் வரலாற்றுச் சாட்சியம். அதன் பெயரை மாற்றுவது என்பது நியாயமே இல்லாதது” என்கிறார்.

காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் நரேஷ் சௌஹான், ``பா.ஜ.க அரசு இப்படி நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் நல்லது. பெயரை மாற்றுவது என்பது மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது” என்று கூறியுள்ளார்.

இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள சூழலில், இந்தப் பெயர் மாற்றமெல்லாம் எந்த அளவுக்கு அவர்களுக்குக் கைகொடுக்கும் எனத் தெரியவில்லை.