Published:Updated:

சிபிஐ-யில் அதிகார மோதல்! நள்ளிரவில் அதிரடிகாட்டிய பிரதமர் மோடி

சிபிஐ-யில் அதிகார மோதல்! நள்ளிரவில் அதிரடிகாட்டிய பிரதமர் மோடி
சிபிஐ-யில் அதிகார மோதல்! நள்ளிரவில் அதிரடிகாட்டிய பிரதமர் மோடி

சிபிஐ அதிகாரிகள் மீது புகார் சுமத்தப்பட்டுள்ள விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக்கொண்டே செல்கிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஷ்தானா

சிபிஐ சிறப்பு இயக்குநர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கு இடையே, கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது. அலோக் வர்மா குறித்து ராகேஷ் புகார் தெரிவிப்பதும், பதிலுக்கு ராகேஷ் செய்த தவறுகளை அலோக் வர்மா தெரிவிப்பதுமாக இருந்துவந்துள்ளது. இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஷ்தானா மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதான் இவர்கள் சண்டையின் உச்சமாக இருந்தது. 

இந்த விவகாரம் வெளியில் தெரியவர, பல ஊடகங்கள் இவர்கள் தொடர்பான செய்தியை வெளியிடத்தொடங்கின. இதை அறிந்த பிரதமர், உடனடியாக இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, இரு அதிகாரிகளும் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து, நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் இருந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

சிபிஐ புதிய இயக்குநர் நாகேஷ்வர் ராவ்

தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 12:45 மணிக்கு டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ அலுவலகம், காவல் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அடுத்த சில விநாடிகளில், இயக்குநர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா இருவருக்கும் விடுப்பு ஆணை வழங்கினார் பிரதமர். மேலும், சரியாக 1:45 மணிக்கு இணை இயக்குநரான நாகேஷ்வர் ராவ் இடைக்கால சிபிஐ இயக்குநராகப் பதவியேற்றார். நாகேஷ்வர் ராவ் பதவியேற்ற பிறகு சிபிஐ அலுவலகத்தில் உள்ள வர்மா, ராகேஷ் அஷ்தானா பயன்படுத்திய அறைகளைப் பூட்டி சீலிடும் வேலைதான் அவருக்கு முதல் பணியாக வழங்கப்பட்டது. பிறகு, தனது பொறுப்பை ஏற்ற நாகேஷ்வர் ராவ் அலோக் வர்மாவின் குழுவில் இருந்தவர்களுக்கு விடுப்பு அறிவித்து கடிதம் அனுப்பினார். 

இறுதியாக, அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஷ்தானாவுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்ட விஷயம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை இரு அதிகாரிகளும் சிபிஐ அலுவலகத்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கார் ஓட்டுநர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். 

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதையடுத்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா ஆகியோர் இன்று காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மேலும், இந்த இரு அதிகாரிகளின் மோதலால் சிபிஐ அதிகாரிகள் மனிஷ் குமார் சின்ஹா, தருண் கௌபா, ஜாபிர் சிங், அனிஷ் ப்ரசாத், ராம் கோபால், சதிஷ் தாகர் உள்ளிட்ட 14  அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  ராகேஷ், அஷ்தானாவுக்கு எதிராகக் கூறப்பட்ட வழக்கை இவர்கள்தான் ஆய்வுசெய்துவந்துள்ளனர். இந்தியாவின் முதன்மை விசாரணை அமைப்பான சிபிஐ-யில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்த விவகாரம் இந்திய அளவில் புயலைக் கிளப்பியுள்ளது.