Published:Updated:

கை குலுக்கும் டிராகன்!

கை குலுக்கும் டிராகன்!
பிரீமியம் ஸ்டோரி
கை குலுக்கும் டிராகன்!

ச.ஸ்ரீராம்

கை குலுக்கும் டிராகன்!

ச.ஸ்ரீராம்

Published:Updated:
கை குலுக்கும் டிராகன்!
பிரீமியம் ஸ்டோரி
கை குலுக்கும் டிராகன்!

சீனாவுக்கு எதிரான வர்த்தக யுத்தத்தை ட்ரம்ப் அறிவித்திருக்கும் அதே சமயம் சீனாவின் அண்டை நாடுகளான தென் கொரியாவும், வட கொரியாவும் பகையை மறந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. இந்தச் சூழலில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசியிருப்பது கூடுதல் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

மோடி வெளிநாட்டுப் பயணம் செல்வது வழக்கம்தான். இதில் என்ன `கூடுதல்’ இருக்கிறது? என்ற கேள்வி எழலாம். இருக்கின்றன. முதன்முறையாக இரு நாடுகளுக்குமிடையே நடந்த informal summit இது. அதாவது முன்பே ஒப்புக்கொண்ட பட்டியலில் இருக்கும் விஷயங்களைத்தான் பேசவேண்டும் என்ற கட்டாயமில்லை. முக்கியம் என்று நினைக்கும் எதையும், இரு தலைவர்களும் பேசிக்கொண்ட உச்சிமாநாடு இது. மோடி அங்கு இருந்த இரண்டு நாட்களில் ஆறு முறை இருவரும் சந்தித்துக்கொண்டனர். பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதாக இருந்தால் சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைநகர் பீஜிங்கில்தான் சந்திப்பார். தலைநகருக்கு வெளியே ஒரு வெளிநாட்டுத் தலைவரை ஷி ஜின்பிங் சந்தித்தார் என்றால் அது மோடியைத்தான்.

கை குலுக்கும் டிராகன்!

இந்த உச்சிமாநாட்டுக்கு சீனா அளிக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள சர்வதேச அரசியல் நோக்கர்கள் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். பிரதமர் மோடியும் ஷி ஜின்பிங்கும் சந்தித்த ஊரான வூஹான், சீனாவைக் கட்டமைத்த மா சேதுங்குடன் நெருக்கமான தொடர்பு கொண்ட  ஊர். அடர்ந்த செடி கொடிகள், பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த வனங்கள், நீர் நிலைகள் என்று இயற்கை வளத்துக்குப் பஞ்சமே இல்லாத பகுதி அது. இருநாட்டுத் தலைவர்களும் தங்களின் ராணுவத் தலைமைக்கு, `எல்லையில் அமைதியை நிலைநாட்டுங்கள்' என்று ஒரே மாதிரியான வார்த்தைகளைக் கொண்ட உத்தரவுகள்  பிறப்பித்திருப்பதும் உலகம் உற்று நோக்க வேண்டிய ஒன்று.

சர்வதேச நோக்கர்கள் இதில் குறிப்பிடும் இன்னொரு முக்கிய விஷயம் - இந்தச் சந்திப்புக்கு பிறகு இருநாடுகளில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை.

நிகழ்ச்சி நிரல்படி நடைபெற்ற கூட்டம் இல்லை என்பதால் கூட்டு அறிக்கையை இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வெளியிடவில்லை. ஆனால் இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இருநாட்டு உறவு குறித்து இரு நாடுகளுமே ஒரே மாதிரிதான் சிந்திக்கின்றன என்பது முக்கியமான அம்சம்.

இருநாடுகளின் அறிக்கை துவங்கி, மோடியும் ஷி ஜின்பிங்கும் கைகுலுக்கிக் கொண்ட விதம்வரை வார்த்தைக்கு வார்த்தை, காட்சிக்குக் காட்சி அரசியல் நோக்கர்கள் முக்கியத்தும் கொடுத்து அர்த்தம் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன வந்தது என்று கேட்கலாம்.

1962 சீன ஆக்கிரமிப்பு துவங்கி, ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்ப்பது, அருணாச்சலபிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடுவது, பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு உதவி செய்வது, சென்ற ஆண்டு மத்தியில் இந்திய-பூடான் எல்லைப் பகுதியான டோக்லாமில் தன் படைகளைத் திரட்டி அச்சுறுத்தல் ஏற்படுத்தியது என்று சீனாவுடன் நமக்குக் கசப்பான அனுபவங்களே ஏராளம். அதிலும் டோக்லாம் பிரச்சனையின் போது,  “1962 யுத்தத்தில் கற்ற பாடங்களை இந்தியா மறக்ககூடாது” என்று சீனா மிரட்டியதும். “1962-ல் நிலவிய சூழல் வேறு, 2017-ன் சூழல் வேறு. எனவே, இந்தியாவைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று இந்தியா பதிலடி கொடுத்ததும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் சிக்கலாக்கியது.

இந்தச் சூழலில் மோடியும் ஷி ஜின்பிங்கும் சந்தித்ததும், சந்தித்த இடமும், விதமும், பரிமாறிக்கொண்ட விஷயங்களும் உலக நாடுகளின் பார்வையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு இப்போது வலிமை அடைந்திருக்கிறது என்பதை ஒற்றை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. காரணம்  STRENGTH  என்ற வார்த்தைக்கு, Spirituality, Trade (Technology), Relationship, Entertainment (Movies, Dance, Music and Art), Nature , Games , Tourism and Health  என்று புது அர்த்தம் கொடுத்திருக்கிறார் மோடி. இதை வெறும் வார்த்தை விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.  மெள்ள மெள்ள... சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இந்த துறைகளில் எல்லாம் உறவுகள் மலரும் என்பதற்கான சமிக்ஞைகள்.

`சீனாவரை போய்விட்டு டோக்லாம் பகுதியில் சீனா செய்த அட்டூழியங்கள் பற்றி பேசாமல் வருகின்றார் என்றால் இவர் என்ன மாதிரியான பிரதமர்?' என்று ராகுல்காந்தி இந்தச் சந்திப்பு குறித்து கருத்துவெளியிட்டிருக்கிறார். சிவசேனாவும் `மோடி நேருவைப் பின்பற்றுகிறார். போரில்லாக் கொள்கையை ஆதரிக்கிறார். இது சரியல்ல' என்று எச்சரித்திருக்கிறது.

உண்மையில் இப்போது இந்தியாவுக்கு சீனாவும், சீனாவுக்கு இந்தியாவும் பரஸ்பரம் தேவை. கொசு பேட்டில் துவங்கி விலை உயர்ந்த கைபேசிகள்வரை சீனா உற்பத்தி செய்யும் பல பொருட்களுக்கு இந்தியாதான் முக்கியமான சந்தை. இருநாடுகளுக்கும் இடையேயான உறவை அரசியல் பலப்படுத்துகிறதோ இல்லையோ, நிச்சயம் வர்த்தகம் பலப்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கை குலுக்கும் டிராகன்!

அமைதியோ அமைதி!

கடந்த வாரம் நடைபெற்ற இன்னொரு முக்கியமான சந்திப்பு தென்கொரியாவின் ஜனாதிபதி மூன் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு. இரண்டாம் உலகப் போர் காலம் தொட்டே இந்த இரண்டு நாடுகளுமே பகையாளிகள். வருடங்கள் ஓட, வட கொரியா  ஒரு அடாவடி தேசமாக மாறி அடுத்தடுத்து பல அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. அமெரிக்காவுக்கும், அதனுடன் நட்பு பாராட்டிய தென்கொரியாவுக்கும் வடகொரியா சிம்ம சொப்பனமாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் போர் மூண்டுவிடுமோ என்ற பயம் கொரிய மக்களுக்கு ஏற்பட்டது.  இந்தச் சூழலில்தான் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதிலும் இருநாடுகளை பிரிக்கும் எல்லைப் பிரதேசத்தில் வடகொரிய அதிபர் கிம், தென் கொரியாவின் பகுதியில் காலடி வைக்க,  தென்கொரியாவின் அதிபர் அவரை, கை கொடுத்து தன் நாட்டுக்கு வரவேற்றது நடப்பதெல்லாம் கனவா நனவா என்று தெரியாமல் உலகம் வியப்பில் ஆழ்ந்தது.

``நாங்கள் அணு ஆயுத சோதனை நடத்தும் போதெல்லாம் அதிகாலையில் உங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி இந்த செய்தியை உதவியாளர்கள் கூறியுள்ளார்கள் என்று அறிந்தேன். இனி அப்படி நடக்காது. உங்கள் தூக்கம் இனி கெடாது'' என்று கிம் தென் கொரியாவின்  ஜனாதிபதியிடம் மெல்லிய புன்னகையுடன் கூறியது இருநாட்டு மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. அமைதி நிலைக்கட்டும்.