Published:Updated:

` ஜக்கையனோடு அப்போதே சென்றிருக்கலாம்!'  - தீர்ப்பால் களையிழந்த தினகரன் ஆதரவாளர்கள்

ஆ.விஜயானந்த்

இப்படியொரு தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. சொல்லப் போனால், தீர்ப்பைச் சொன்னதற்கு மிக்க நன்றி. இந்த வழக்கை முடித்து வைத்ததற்காக நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்

` ஜக்கையனோடு அப்போதே சென்றிருக்கலாம்!'  - தீர்ப்பால் களையிழந்த தினகரன் ஆதரவாளர்கள்
` ஜக்கையனோடு அப்போதே சென்றிருக்கலாம்!'  - தீர்ப்பால் களையிழந்த தினகரன் ஆதரவாளர்கள்

தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகிவிட்டது. இப்படியொரு தீர்ப்பை தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. ` இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு தொகுதிக்குள் செல்ல முடியும்' என வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர் தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். எனவே, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியின் கருத்தை அறிவதற்காக நீதியசரர் விமலா நியமிக்கப்பட்டார். அவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக சென்றுவிட்டதால், சத்திய நாராயணனை மூன்றாவது நீதிபதியாக நியமித்தனர். கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி விசாரணையைத் தொடங்கினார் சத்திய நாராயணன். அரசுத் தரப்பு, தினகரன் தரப்பு, தேர்தல் ஆணையம் தரப்பு, சபாநாயகர் தரப்பு என அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இன்று காலை தீர்ப்பை வாசித்தவர், ` இதற்கு முன்பு வழக்கை விசாரித்த நீதிபதிகளின் தீர்ப்பை பரிசீலிக்கவில்லை. தனியாக நான் வழங்கும் தீர்ப்பு' என விவரித்த நீதியரசர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காக, அவர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் எனத் தீர்ப்பளித்தார். இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்தார். 

இன்று காலை முதலே தீர்ப்புக்காகக் காத்திருந்த தினகரன் தரப்பினருக்கு, இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ` அடுத்து என்ன செய்யலாம்?' எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். தினகரன் வந்தவுடன் அவருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். கடந்த சில நாள்களாகவே, தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும் என குடியாத்தம் தொகுதியில் வென்ற ஜெயந்தி பத்மநாபன், சோளிங்கர் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் உற்சாகமாகப் பேசி வந்தனர். மொத்த எதிர்பார்ப்பும் கரைந்து போனதில், மிகுந்த வேதனையில் உள்ளனர். ` ஆளும்கட்சி தரப்பில் அழைத்தபோதே சென்றிருக்கலாம். அப்போதே சொன்னோம். ஜக்கையன் கூப்பிடறார். மறுப்புக் கடிதம் கொடுத்துவிட்டால், மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் என்று. இப்போது அனைத்தும் போய்விட்டது' என சிலர் ஆதங்கப்பட்டுள்ளனர். 

உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். `` இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேசி முடிவெடுக்க இருக்கிறோம். இப்படியொரு தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. சொல்லப் போனால், தீர்ப்பைச் சொன்னதற்கு மிக்க நன்றி. இந்த வழக்கை முடித்து வைத்ததற்காக நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசுக்குத் துணிச்சல் இருந்தால் இடைத்தேர்தலை நடத்தட்டும். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார் கொதிப்புடன்.