Published:Updated:

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நடந்தது என்ன? #VikatanInfographics

எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி, ஆளுநரிடம் புகார் அளித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று 3-வது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நடந்தது என்ன? #VikatanInfographics
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நடந்தது என்ன? #VikatanInfographics

மிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைச் சட்டமன்ற உறுப்பினர்களோடு, அ.தி.மு.க. புனித ஜார்ஜ் கோட்டையை மீண்டும் கைப்பற்றி சாதனை படைத்தது. முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 2016 செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 5-ம் தேதி காலமானார். பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதற்கிடையே அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக 2017 பிப்ரவரியில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக `தர்மயுத்தம்' நடத்தி, தனி அணியாகப் பிரிந்தார்.   

பின்னர் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் அடைத்துவைக்கப்பட்டது, சசிகலாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றது என்று அடுத்தடுத்து அரசியல் களேபரங்கள் நடந்தேறின. ஓ.பி.எஸ். மற்றும் அவரின் ஆதரவாளார்கள், எடப்பாடி அணியுடன் இணைய சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வலியுறுத்தி மீண்டும் ஒன்றிணைந்தனர். 

எடப்பாடி பழனிசாமி அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானக் கூட்டத்தில் திமுக அமளி செய்ததால் வெளியேற்றப்பட்டது. எதிர்க்கட்சி இல்லாத அவையில், எடப்பாடி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியில் தொடர்ந்தார். ஜெயலலிதா இறந்ததால், காலியாக விடப்பட்டிருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

கட்சி இரண்டாக உடைந்திருந்ததால், `இரட்டை இலை' சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் அணிக்கு `தொப்பி' சின்னம் ஒதுக்கப்பட்டு, `அஇஅதிமுக (அம்மா)' என்ற பெயரும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு `இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டு `அஇஅதிமுக (புரட்சித்தலைவி அம்மா)' எனவும் பெயரிடப்பட்டது. 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக மூத்த அமைச்சர்கள் மீது புகார் தரப்பட்டது. அதனையடுத்து, அப்போது இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்திற்காக லஞ்சம் அளிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, டெல்லி காவல்துறையினரால் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு, சிறை சென்றார்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அன்றைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஆகஸ்ட் 21, 2017 அன்று இணைந்தன. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். கட்சி ஒன்றானது. இருவரும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆனார்கள்.

டிடிவி தினகரன் ஆதரவுபெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்கள் இதை எதிர்த்து போர்க்கொடி தூக்கினர். ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று அவர்கள் கடிதம் அளித்தனர். அவர்கள் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென தி.மு.க வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க செப்டம்பர் 20, 2017 வரை தடை விதித்துத் தீர்ப்பளித்தார். 

அரசு மீது புகார் அளித்த 19 சட்டமன்ற உறுப்பினர்களில், ஜக்கையன் தன் புகாரைத் திரும்பப் பெற்றதால், எஞ்சிய 18 எம்.எல்.ஏ-க்களையும், கொறடா உத்தரவின் பேரில் தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார் சபாநாயகர். தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அன்றைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். அதனால் வழக்கை உச்சநீதிமன்றம், மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமித்தது. இந்நிலையில் நீதிபதி சத்தியநாராயணன், வழக்கின் விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, 18 எம்.எல்.ஏ-க்களைச் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளார். 

தகுதிநீக்கம் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தால், எடப்பாடி பழனிசாமி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாமல்போய், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சூழல் உருவாகியிருக்கும். தற்போது, 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் தவிர்த்து, திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளில் உறுப்பினர்கள் மறைவால், அவை காலியாக உள்ளன. தற்போதைய நிலையில், 20 பேர் தவிர்த்து எஞ்சிய 214 சட்டமன்ற உறுப்பினர்களில் 108 பேர் ஆதரவு இருந்தாலே எடப்பாடி அரசு தப்பிவிடும். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, 109 இடங்களோடு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.