
கழுகார் பதில்கள்!
சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
சரித்திரம் படைக்க என்ன செய்ய வேண்டும்?
சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட அத்தனை பேருமே உத்தமர்கள், நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. கொடுங்கோலர்களும், பஞ்சமாபாதகர்களும்கூடத்தான் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளனர். ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்களும் சரித்திரத்தில்தான் இடம் பிடித்துள்ளனர். இப்போதுகூட, சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளியான ஜெயலலிதா, தமிழக சட்டமன்ற சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார். அவருடைய படத்தை அங்கே திறந்து வைத்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம், தானும் சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது உயர் நீதிமன்றம். எனவே, சரித்திரம் படைக்கவேண்டும் என்பது முக்கியமல்ல, வாழும்காலத்தில் நான்கு பேருக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்தோமா என்பதுதான் முக்கியம்.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
எந்தப் பிரச்னை என்றாலும், ‘இதற்கு முந்தைய அரசுதான் காரணம்’ என ஆட்சியாளர்கள் எல்லோரும் சப்பைக்கட்டு கட்டுகிறார்களே?
காரணம் சொல்பவன் காரியம் செய்ய மாட்டான்!
ஏ.பி.செ. (எ) ஏ.பி.செல்வம், திருச்சி-2.
‘வாக்களிக்கும் உரிமையைக் கட்டாயப்படுத்தினால் அதன்மூலம் மிகப்பெருமளவில் லஞ்சம் தவிர்க்கப்படும்’ எனத் தெரிந்தும், அதை இரண்டு தேசியக் கட்சிகளும் கொண்டுவரத் தயங்குவது ஏன்?
‘வாக்களிக்கும் உரிமையைக் கட்டாயப்படுத்தினால் அதன்மூலம் மிகப்பெருமளவில் லஞ்சம் தவிர்க்கப்படும்’ என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அரசியல் மாற்றங்களுக்கு அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்க முடியும் என்பது உண்மை. ‘வாக்களிப்பைக் கட்டாயம் ஆக்க வேண்டும்’ என்ற குரல் அவ்வப்போது எழுகிறது. ‘கட்டாயமாக ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்வது இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சாத்தியமா’ என்ற எதிர்க் கேள்வியும் அதனுடன் சேர்ந்தே எழுகிறது. ஓட்டுப் போடவில்லையென்றால் மிகப்பெரிய தண்டனை தருவது என்றெல்லாம் இல்லாமல், குறிப்பிட்ட சில சலுகைகள் ரத்து என்பது மாதிரியான திட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால், அனைவரும் வாக்களிப்பதை ஆள்பவர்கள் விரும்பினால்தானே இது சாத்தியம். மக்களும் இலவசங்களை மறந்து, உள்ளவர்களில் நல்லவர் களுக்கு வாக்களிக்கும் காலத்துக்குக் காத்திருப்போம்.
மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.
‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வரலாற்றுப் பிழை’’ என்கிறாரே துணை முதல்வர் பன்னீர்செல்வம்?
பிழை இல்லாத கூட்டணி எது? ஆதாயம்தானே முக்கியம்!
தமிழினியன், மதுரை.
சமீபத்தில் உங்களை அதிர்ச்சியடைய வைத்த செய்தி எது?
‘இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்குவதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்’ என ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு டெல்லியில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்போது எம்.பி மற்றும் எம்.எல்.ஏ பதவிகளில் இருப்பவர்கள்மீது என்னென்ன வழக்குகள் இருக்கின்றன என்று அந்த அமைப்பு ஆய்வு செய்துள்ளது. வெறுப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி சமூகத்தில் அமைதியைக் கெடுத்த வழக்குகள் பலர்மீது உள்ளது. நல்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கும் இவர்கள், நம்மிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மை.

எஸ்.தேவராஜன், திருநெல்வேலி.
கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறதே?
இந்தத் தேர்தலால் மொத்த இந்தியாவுக்கு ஒரு நன்மை விளைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றிக்கொண்டிருந்த எண்ணெய் நிறுவனங்கள், ஏப்ரல் 24-ம் தேதியிலிருந்து இதை ஏற்றாமல் நிறுத்தி வைத்துள்ளன. இத்தனைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. ‘‘கர்நாடகா தேர்தல் முடியும்வரை விலை உயர்வு பெரிய அளவில் இருக்காது’’ என டெல்லி வட்டாரத்தில் பேச்சு. தேர்தல்களுக்கும் விலைவாசிக்கும் சம்பந்தம் இருக்கிறது போல!
காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.
2019-ம் ஆண்டு தமிழ்நாடும் அரசியலும் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும். அதனால் கொதிநிலை அதிகமாகவே இருக்கும்.
அனந்த சுப்ரமணியன், சென்னை.
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் சேதமாவது குறித்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதே?
ஆக்ராவைச் சுற்றியுள்ள மோசமான தொழிற்சாலைகளாலும், யமுனை நதியில் கலந்திருக்கும் மாசுக்களில் உருவாகும் பூச்சிகளாலும் தாஜ்மகாலின் பளிங்கு நிறம் பறிபோகிறது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருவது இன்னொரு துயரம். ‘‘முன்பு தாஜ்மகால் மஞ்சள் நிறமாக மாறியது. இப்போது பழுப்பு மற்றும் பச்சை நிறங்களுக்கு மாறுகிறது. இதைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? சர்வதேச நிபுணர்களின் உதவியைக் கேட்டீர்களா?’’ என மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளைக் கண்டித்துள்ளனர் நீதிபதிகள். ‘மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடாமல், யமுனை அழுக்காவதைத் தடுக்காமல் நாங்கள் எப்படி தாஜ்மகாலைக் காப்பாற்ற முடியும்?’ என்று கேட்கிறார்கள் தொல்லியல் துறையினர். அரசுகளின் அலட்சியத்தில் தாஜ்மகால் பறிபோய்விடக்கூடாது.

கிருபாகரன், காஞ்சிபுரம்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராமீதான சர்ச்சைகள் எப்போது முடியும்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமாதானம் அடைந்து விட்டார்களா?
தீபக் மிஸ்ராவைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள், அவர் பதவியில் இருக்கும் காலம்வரைக்கும் தொடரும். அதற்கு முற்றுப்புள்ளி என்பது இல்லை. அதேபோல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சமாதானம் ஆவதாகத் தெரியவில்லை.
‘உச்சநீதிமன்றத்தின் அமைப்புரீதியான பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனைத்து நீதிபதிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகிய இருவரும் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே தலைமை நீதிபதிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த நான்கு மூத்த நீதிபதிகளில் இவர்களும் அடக்கம். உயர் நீதிமன்றமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், ஃபுல் பெஞ்ச் மீட்டிங்கில்தான் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்; சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தீர்க்கப்படும். இதைத்தான் 2018 மார்ச் 21-ம் தேதியே நீதிபதி செல்லமேஸ்வர் சொன்னார். ஏப்ரல் 9-ம் தேதி நீதிபதி குரியன் ஜோசப் சொன்னார். இப்போது மேலும் இரண்டு நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கூட்டம் இதுவரை கூட்டப்படவில்லை. தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரங்கள் குறித்த ஒரு வழக்கைத் தன் தலைமையிலான பெஞ்ச்சில் விசாரித்து, ‘தலைமை நீதிபதி என்பவரே உச்ச நீதிமன்றம் போல ஒரு தனி அதிகாரம் பொருந்திய அமைப்பு போன்றவர்தான்’ என்று தீர்ப்பு சொல்லிக்கொண்டார் தீபக் மிஸ்ரா.
நடிகை ரோகிணி

இன்றைய காலகட்டத்தில் மக்கள் போராட்டங்களுக்குப் பலன் கிடைக்கிறதா? இந்தப் போராட்டங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா?
மக்கள் போராடுவதால்தான், கிடைக்க வேண்டிய உரிமைகள் ஓரளவாவது கிடைக்கின்றன. போராடவில்லை என்றால் இதுவும் கிடைக்காது என்பதுதான் உண்மை. எல்லாப் போராட்டங்களும் வெற்றி பெற்றதா, வெற்றி பெறுமா என்றால், ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். மக்களின் கவனத்தை ஈர்ப்பதும், அரசாங்கத்தின் கவனத்தை இந்தக் கோரிக்கையை நோக்கித் திருப்புவதும்தான் எல்லாப் போராட்டங்களின் நோக்கமும். அந்தக் கடமையை ஒழுங்காகச் செய்தாலே இன்று இல்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் அந்தக் கோரிக்கை நிறைவேறும். இந்தப் போராட்டங்களை அரசு கவனத்தில் கொள்கிறது. இந்தப் போராட்டங்களை நசுக்குகிறது. ஊடகங்களில் வரவிடாமல் செய்யப் பார்க்கிறது. இதிலிருந்தே போராட்டங்களின் வீரியத்தை உணரலாம். ஆனால், அதைக் கண்டுகொள்ளாதவர்கள் மாதிரி இருப்பார்கள். பல்வேறு இடங்களில் சிதறிச்சிதறி நடக்கும் போராட்டங்கள் ஒன்றாகும்போது அரசாங்கம் நிச்சயம் அடிபணியவே செய்யும்!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!