Published:Updated:

“நடக்கற காமெடிகளை கூலா வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கேன்!”

“நடக்கற காமெடிகளை கூலா வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நடக்கற காமெடிகளை கூலா வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கேன்!”

விஜயகாந்த் விறுவிறு

‘‘கலைஞர் ஓர் அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி, சினிமாவில் எனக்கு முன்னோடி. சினிமாவுக்கு வந்து 40 வருஷம் முடிஞ்சு 41-வது வருஷத்துல அடியெடுத்து வைக்கிற நான், கலைஞர்கிட்ட வாழ்த்து வாங்கணும்னு நினைச்சேன். அவரைப் பார்க்கணும்னு நான் கேட்டதும் உண்மை; ஸ்டாலின் தடுத்ததும் உண்மை. ‘சுதீஷை அனுப்பி வாழ்த்தை வாங்கிட்டுப் போகச்சொல்லுங்க’னு ஸ்டாலின் சொல்லிட்டார்.’’ - எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாகப் பேசுகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, சினிமாவில் 40 ஆண்டுக்காலப் பயணம் என விஜயகாந்த் பேசியதிலிருந்து...

“நடக்கற காமெடிகளை கூலா வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கேன்!”

‘‘கருணாநிதியை நீங்கள் சந்திக்கக் கூடாது என ஸ்டாலின் தடுத்தார் என்று சொல்லியிருந்தீர்கள். என்ன நடந்தது?’’

‘‘ரஜினி, கமல், வைகோனு எல்லாரும் நேர்ல போய் கலைஞரைப் பார்த்தாங்க. அவ்வளவு ஏன்... தான் வளைச்சு வளைச்சு திட்டுற நரேந்திர மோடி வந்தப்பக்கூட வரவேற்க வாசல்ல போய் நின்னார் ஸ்டாலின். ஆனா, நான் பார்க்கிறதை மட்டும் ஸ்டாலின் தடுக்குறது ஏன்? கடந்த சட்டமன்றத் தேர்தல்ல எங்களோட கூட்டணி வைக்கணும்னு கலைஞர் விரும்பினார். அதுக்கான பேச்சுவார்த்தையும் நடந்துச்சு. அந்தக்கூட்டணி ஜெயிச்சுதுன்னா கலைஞர் முதலமைச்சர், நான் துணை முதல்வர்னும் பேசப்பட்டது. ஆனா, நான் கேட்ட அளவு தொகுதிகளைத் தரலை. அப்பவும் நான் இறங்கிவந்து, ‘60 தொகுதிகள் மட்டும் கொடுங்க’ன்னு கேட்டேன். ஆனா, அவங்க ‘40 தொகுதிகளுக்கு மேல முடியாது’ன்னு பிடிவாதமா இருந்தாங்க. அதுக்குக் காரணமே ஸ்டாலின்தான். ஆனா, இப்ப அ.தி.மு.க கையில ஆட்சி போயிடுச்சேனு வயிற்றெரிச்சல்ல துடிக்கிறார்.’’

 ‘‘இந்தக் கோபத்தைத் தவிர்த்துவிட்டு சொல்லுங்கள்... எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருக்கிறது?”

‘‘எப்ப பார்த்தாலும் ‘எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்கப் போறேன்’னு சொல்லிக்கிட்டே இருக்கார். கையில் 89 எம்.எல்.ஏ-க்களை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கார். கலைஞர் மட்டும் பழைய மாதிரி இருந்தார்னா இந்நேரம் அ.தி.மு.க ஆட்சியை எப்பவோ கவிழ்த்து முடிச்சிருப்பார். ‘தே.மு.தி.க அதலபாதாளத்துக்குப் போயிடுச்சு. இனிமே 15 வருஷத்துக்கு எந்திரிக்கவே முடியாது’னு ஸ்டாலின் பேசியிருக்கார். எம்.ஜி.ஆர் 13 வருஷம் தி.மு.க-வைத் தலையெடுக்க முடியாம அடக்கிவெக்கலையா? அதுக்கப்புறம் தி.மு.க ஆட்சிக்கு வரலையா? ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்து முதல்வர் ஆகலையா? அதுபோல எங்க கட்சியும் நிச்சயம் ஒருநாள் ஆட்சிக்கு வரும். நான் எதிர்க்கட்சித் தலைவரா இருந்தப்போ, வெறும் 29 எம்.எல்.ஏ-க்களை வெச்சுக்கிட்டே ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபையில பலமுறை பயங்கரமா விவாதம் பண்ணியிருக்கேன். ஆனா, 89 எம்.எல்.ஏ-க்களை வெச்சிருக்குற ஸ்டாலின் சாதாரண எடப்பாடியை எதிர்க்கத் திராணி இல்லாம சட்டசபையில் சட்டை கிழிச்சிட்டு வெளியில வந்து ஸ்டன்ட் அடிச்சு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறார். தி.மு.க ஆட்சியில ஜெயலலிதா எப்படி சட்டசபையில சேலையைக் கிழிச்சுக்கிட்டு டிராமா போட்டாங்களோ, அதேபாணியில ஸ்டாலினும் சட்டையைக் கிழிச்சுக்கிட்டு நாடகம் போட்டார். அவ்வளவுதான் அவரோட செயல்பாடு.’’

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்களை முதல்வராக முன்மொழிந்த வைகோ, இப்போது ‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்’ என்கிறாரே?’’ 


‘‘இதே வைகோதான் முன்னாடி ஸ்டாலினை விஷம் கலந்த பால்னு விமர்சனம் பண்ணினார். இப்ப மட்டும் சுத்தமான பசும்பால் ஆகிட்டாரா ஸ்டாலின்? சுருக்கமா சொல்லணும்னா இப்ப வைகோவும் ஸ்டாலினுடன் சேர்ந்து விஷப்பாலா மாறிட்டார். தேர்தல் ஆணையம் தமிழ்நாட்ல மூணு கட்சிகளைத்தான் அங்கீகாரம் கொடுத்து அனுமதிச்சிருக்கு. அந்தக்கட்சிகள்ல தே.மு.தி.க-வும் ஒண்ணு. அந்தப் பட்டியல்ல ம.தி.மு.க இல்லவே இல்லை. நான் வைகோவை நினைச்சு வருத்தப்படவே மாட்டேன். நடக்கற காமெடிங்க எல்லாத்தையும் கூலா வேடிக்கை பார்த்துக் கிட்டிருக்கேன். அவ்வளவுதான்!’’

 ‘‘சென்ற முறை பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி?’’

‘‘ஒரு திருத்தம். நாங்க பி.ஜே.பிகூட கூட்டணி வைக்கலை. தே.மு.தி.க தலைமையில அமைஞ்ச கூட்டணியில்தான் பி.ஜே.பி சேர்ந்து இருந்துச்சு. ஆனா, இந்தமுறை யாருடனும் தே.மு.தி.க கூட்டணி அமைக்காது. தனித்தே தேர்தலில் போட்டியிடும்.’’

 ‘‘ஹெச்.ராஜா கடுமையாகப் பேசிக்கொண்டு வருகிறாரே?’’

‘‘அவர் ஹெச்.ராஜா இல்லை, உளறல் ராஜா.’’

“நடிகர் எஸ்.வி.சேகரைக் கைது செய்யாமல் இழுத்தடிக்கிறார்களே?”


“எஸ்.வி.சேகரைக் கைதுசெய்யத் தடையில்லைனு நீதிமன்றமே சொல்லுது. ஆனால், ஏன் கைது செய்ய மாட்டேங்குறாங்க? எஸ்.வி.சேகரின் அண்ணன் மனைவியான கிரிஜா வைத்தியநாதன், தலைமைச் செயலாளர். அப்புறம் எப்படிக் கைது செய்வாங்க?”

“நடக்கற காமெடிகளை கூலா வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கேன்!”

“நீங்கள் மறுபடியும் சினிமாவில் நடிக்கப்போவதாகச் சொல்கிறார்களே?”

“சினிமாவில் என் 40 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார், ‘விஜயகாந்த் சினிமாவுல மறுபடியும் நடிக்கணும். நான் டைரக்‌ஷன் பண்ணனும்’னு பேசினார். திடீர்னு செல்வமணி எழுந்து ‘என் டைரக்‌ஷன்ல கேப்டன் நடிக்கணும்’னு சொன்னார். எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்த தாணு சார், ‘கேப்டன் நடிக்கப்போற படத்தை நான்தான் தயாரிப்பேன்’னு சொன்னார். என்மேல அவங்க வெச்சிருக்குற அன்பை நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து வெச்சிருக்காங்க. அதைத் தமிழ்ல ரீமேக் பண்ணி நடிக்கலாம்னு முடிவுசெய்திருக்கேன்.”

‘‘40 ஆண்டு கால சினிமாப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?’’

“இப்போ எல்லோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு சொல்றாங்க. நான் நடிகர் சங்கத் தலைவரா இருந்தப்பவே காவிரி நீர் கேட்டு நெய்வேலிக்குப் போய்ப் போராடினேன். பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், அர்ஜுன் எல்லோரும் கன்னடத்துக்காரங்க. அவங்க வரமாட்டாங்கனு சொன்னாங்க. ‘தைரியமா வாங்க, நான் பாத்துக்கறேன்’னு அவங்க எல்லாரையும் அழைச்சுட்டு வந்தேன். அப்ப எனக்கும் பாரதிராஜாவுக்கும் சின்னதா மோதல் ஏற்பட்டு மனஸ்தாபம் உண்டாகிடுச்சு. காலப்போக்குல எல்லாம் சரியாகிடுச்சு.

சிவாஜி சார் இறந்தப்ப, அப்ப முதல்வரா இருந்த ஜெயலலிதா வந்து அஞ்சலி செலுத்திட்டு கார்ல ஏறினப்ப, பக்கத்துல நின்ன என்னைப்பார்த்து, ‘என்ன விஷயம்’னு கேட்டாங்க. ‘சிவாஜி சாருக்கு மணிமண்டபம் அமைக்கணும்’னு கேட்டேன். ‘நான் இடம் தர்றேன். நீங்களே கட்டுங்க’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. பிறகு அடையாறுல உள்ள இடத்துல நான், ராம்குமார் சார், பிரபு எல்லாரும் சேர்ந்து பூமி பூஜை போட்டோம். மணிமண்டபத்தை உடனடியா கட்டச்சொல்லி வற்புறுத்தினேன். இப்ப கட்டித் திறந்திருக்கிறதுல எனக்கு சந்தோஷம்.

கலைஞருக்கு சீரணி அரங்கத்துல பாராட்டு விழா நடத்தி, தங்கப் பேனாவைப் பரிசா கொடுத்தேன். அப்போ, ‘இதுவரைக்கும் அழைச்சுட்டு வந்துட்டீங்க. பக்கத்துலதான் கோட்டை இருக்கு. அப்படியே அங்க  உட்கார வெச்சுடுங்க’னு பேசினார். பிறகு, சென்னை பீச் ரோட்டுல சிவாஜி சாருக்குக் கலைஞர் சிலை திறந்தார். அதுல கலந்துக்கிட்ட ரஜினி சார், நான் விருத்தாசலம் தொகுதியில் தனியா நின்னு ஜெயிச்சதுக்கு வாழ்த்து சொன்னார். ‘இரட்டைக் குதிரையில சவாரி செய்யறது ரொம்ப கஷ்டம், சினிமா, அரசியல் இரண்டுலயும் சவாரிசெஞ்சு ஜெயிச்ச விஜயகாந்துக்கு ஹாட்ஸ் ஆப்’னு மனம்திறந்து பாராட்டினார்.

இப்ப எனக்கு பாராட்டு விழா நடத்துன இடம் சென்னையில இருந்து ரொம்ப தூரமா இருந்ததாலயோ என்னவோ ராதாரவி, பிரபுனு பலர் விழாவுக்கு வரலை. ரஜினி சார் வீடியோ வாழ்த்து பார்த்தேன். விழா முடிஞ்சதும் ரஜினி சார் எனக்கு போன் செய்து, ‘விஜி, உங்க நிகழ்ச்சி அன்னைக்கு என் வீட்டுல ஒரு ஃபங்ஷன். அதனாலதான் கலந்துக்க முடியலை’னு சொல்லி வாழ்த்தினார்.

நான் நடிகர் சங்கத்துல இருந்தப்ப, எதையும் எதிர்பார்த்து செய்யலை. ஆனா, நீங்க கேட்டதும் சொல்லணும்னு தோணுச்சு. அவ்வளவுதான்.’’

- எம்.குணா
படங்கள்: கே.ராஜசேகரன்