
கம்பேரிஸன் கோவாலு!
‘அர்ச்சனை எந்த சாமிக்கு...?’
‘எடப்பாடி பழனிசாமிக்கு’
- இந்த அற்புத விளம்பரத்தை இனி நம்மால் பார்க்கவே முடியாது! யெஸ், மனசாட்சியின் வெயிட் தாங்காமல் தமிழக அரசே இந்த விளம்பரத்தை தியேட்டர்களிலிருந்து தூக்கிவிட்டது. சரி, அ.தி.மு.க கூடாரத்தில் கன்டென்டுக்கா பஞ்சம்? இவர்களை வைத்தும் அடுத்து குறும்படம் தயாரிக்கலாம்!

• அரசியல்வாதிகளில் கொஞ்சம் வித்தியாசமானவர் ஜெயக்குமார். மற்றவர்கள் எல்லாம் மைக்கை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் இவர் ‘நின்னுக்கோரி வரணும், நிச்சயம் வரணும்’ என இசை மழையில் நனைக்கிறார். அவரின் இசைக் கச்சேரிகளைத் தொகுத்து தியேட்டர்களில் தேசிய கீதம் ஒளிபரப்பான ‘கேப்’பை நிரப்பலாம். கச்சேரி களைகட்டும்!
• நியாயமாக எடப்பாடியைவிட அதிக அர்ச்சனை வாங்கியது செல்லூர் ராஜுதான்... அதுவும் சோஷியல் மீடியாக்களில். எனவே ‘செல்லூர் ராஜுவின் சயின்டிஃபிக் சாதனைகள்’ எல்லாவற்றையும் தொகுத்துக் குறும்படமாக ஒளிபரப்பினால், மொக்கைப் படங்களுக்கு நடுவிலும் மக்களைச் சிரிக்க வைத்த பெருமை தமிழக அரசுக்குக் கிடைக்கும்!
• ஓ.பி.எஸ் எனும் மகத்தான மெரினா போராளியின் வாழ்க்கை வரலாறு அடுத்த தலைமுறைக்குத் தெரியாமல் போகும் ஆபத்துகள் அதிகமாக உள்ளன. எனவே, அவரின் முக்கிய சாதனைகளான கட்சியை உடைத்தது, ஒட்ட வைத்தது போன்றவற்றை குறும்படமாக ஒளிபரப்பலாம்.
• கடந்த இரண்டாண்டுகளாக என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டிருக்கிறான் பாவப்பட்ட தமிழன். யார் யாரோடு கூட்டு, யாருக்கு யாரோடு சண்டை என்பதே புரியாமல் தலை சுற்றிக்கிடக்கும் தமிழனின் பரிதாப நிலையை பார்ட் ஒன், பார்ட் டூ என எக்கச்சக்க குறும்படங்களாக எடுத்து ஒளிபரப்பலாம்.
ஓவியம்: பிரேம் டாவின்ஸி