Published:Updated:

“சந்திக்க வர வேண்டாம்!” - எடப்பாடிக்கு மோடி கட்டளை

“சந்திக்க வர வேண்டாம்!” - எடப்பாடிக்கு மோடி கட்டளை
பிரீமியம் ஸ்டோரி
News
“சந்திக்க வர வேண்டாம்!” - எடப்பாடிக்கு மோடி கட்டளை

“சந்திக்க வர வேண்டாம்!” - எடப்பாடிக்கு மோடி கட்டளை

காவிரி மேலாண்மை வாரியம் கோரி அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்திப்பதற்குத்தான் பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை. டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரிப் பிரச்னை குறித்து பிரதமரைச் சந்தித்துப் பேசுவார். அதன் மூலம், குறைந்தபட்சம் ஒரு நம்பிக்கை யாவது கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி மே 2-ம் தேதி காலை 8.45 மணி விமானத்தைப் பிடித்து டெல்லி வந்தார். விமான நிலையத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் எம்.பி-க்கள் அவரை வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தில் பெரும்பான்மையான நாடாளு மன்ற உறுப்பினர்கள் அவருக்காகக் காத்திருந்தனர். கொங்கு மண்டல எம்.பி-க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் கிளம்பி தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

தமிழ்நாடு இல்லத்தில் செய்தி யாளர்கள், ‘‘யாரையெல்லாம் காவிரி விவகாரம் தொடர்பாக சந்திக்கப் போகிறீர்கள்’’ என்று எடப்பாடியிடம் கேள்வி எழுப்பினர். ‘‘கூட்ட அரங்கில் வாய்ப்பு கிடைத்தால் பிரதமரைச் சந்திப்பேன். வேறு யாரையும் தனியாகச் சந்திக்கும் திட்டம் இல்லை’’ என்றார் அவர். அப்போதே செய்தியாளர்கள் மத்தியில் இருந்த உற்சாகம் குறைந்துபோனது. ‘முதல்வரின் காவிரி ஆலோசனை’ என்று ஆர்வமாக எதிர்பார்த்த செய்தி இல்லை என்றாகிவிட்டதே என்பதுதான் அவர்களது கவலை.

“சந்திக்க வர வேண்டாம்!” - எடப்பாடிக்கு மோடி கட்டளை

நண்பகல் அளவில் காவிரி வழக்கில் தமிழகம் சார்பாக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே தவிர்த்து மற்ற வழக்கறிஞர்களான உமாபதி, பரமசிவம், விஜயகுமார், காவிரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மட்டும் வந்து முதல்வரைச் சந்தித்தனர். அப்போது முதல்வரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார், ஜெயஸ்ரீ, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். ‘மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை எப்படி இருக்கும்? மத்திய அரசு வழக்கறிஞர்கள் வரைவுத் திட்டம் தாக்கல் செய்வதற்கு மேலும் அவகாசம் கேட்பதில் உறுதியாக இருக்கிறார்களா? நீதிபதிகள் அதற்கு அனுமதிப்பார்களா?’ என்பதையெல்லாம் முதல்வர் கேட்டறிந்தார். அந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்குக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முதல்வர் சென்றார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மாநில முதலமைச்சர்கள் உட்கார்ந்திருந்த வரிசைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி மூவரும் ஒன்றாக வந்து வணக்கம் தெரிவித்தனர். அப்போது, குனிந்து வணக்கத்தைத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின்னர் அவருக்குப் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

இதற்கிடையே, ‘காவிரி வரைவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க மேலும் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் இடைக்கால மனு போட்டு, நீதிமன்றம் அதை நிராகரித்த தகவலும் வந்து சேர்ந்தது. கூட்டம் முடிந்து நேராக தமிழ்நாடு இல்லம் வந்த முதல்வர், ‘‘மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டத்துக்காக மட்டுமே டெல்லி வந்தேன். காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இதுவரை கிடைக்கவில்லை. பிரதமரைக் காவிரிக்காக சந்தித்தால், எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இல்லாமல் சந்திக்க மாட்டேன்’’ என்று மட்டும் சொல்லிவிட்டு, அடுத்தடுத்த கேள்விகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவராகத் தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

மாலையில் தம்பிதுரை தமிழ்நாடு இல்லம் பக்கம் வரவே இல்லை. நாமக்கல் எம்.பி-யான சுந்தரம் மட்டுமே முதல்வர் அறையில் அதிக நேரம் இருந்தார். இரவு மீண்டும் சுமார் 20        எம்.பி-க்கள் முதல்வரைக் காண வந்திருந்தனர். காவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய அவர்களுக்கு முதல்வர் நன்றி சொன்னார்.   பின்னர், இரவு எட்டு மணியளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சிறப்பு அலுவல் அதிகாரி அருண் நரேந்திரநாத் திடீரென முதல்வரைச் சந்திக்க வந்தார். சுமார் 20 நிமிடங்கள் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. காவிரி தீர்ப்பைச் செயல்படுத்த நீர்வளத்துறை செயலாளர் உ.பி.சிங் தொடர்ந்து பல ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருப்ப தாக அவர் முதல்வரிடம் எடுத்துக்கூறியிருக்கிறார். ‘‘15 நாள்களுக்குள் ‘ஸ்கீம்’ ஓர் இறுதி வடிவத்துக்கு வந்துவிடும்’’ என அவர் நம்பிக்கையுடன் சொன்னார். அந்த ஒரு நபரைத் தவிர, காவிரி தொடர்பாக யாரையும் சந்திக்க முடியாமல் வியாழக்கிழமை காலை விமானத்தில் சென்னைக்குத் திரும்பினார் எடப்பாடி.

எடப்பாடி டெல்லி வருவதற்கு முன்பே தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் முயற்சியிலேயே, ‘‘வாய்ப்பில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டாம்’’ என மோடி கட்டளை போட்டாராம். அது மட்டுமல்ல, மத்திய அமைச்சர்கள் யாரையும் இந்தமுறை சந்திக்க வேண்டாம்’’ என்றும் கண்டிப்பாகச் சொல்லப்பட்டதாம்.

- டெல்லி பாலா

ஸ்கீமும் இல்லை... தண்ணீரும் இல்லை!

கா
விரி வழக்கு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மே 3-ம் தேதி காலை 11.10 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ‘‘பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், ஸ்கீம் தயாரிக்க மேலும் 10 நாள்கள் அவகாசம் வேண்டும்’’ என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அப்போது கேட்டார். மேலும், ‘‘மாநில உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து ஆலோசனை நடத்தித் திட்டம் வகுக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்’’ என்றும் அவர் கூறினார்.

ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘தேர்தல் குறித்து நீதிமன்றத்துக்குக் கவலை இல்லை. வரைவுத்திட்டம் வகுப்பதில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. நதிநீர் தாவா சட்டம் பிரிவு 6-ன்படி, மத்திய அரசே திட்டத்தை வகுத்துக்கொள்ளலாம். எந்த மாநில அரசுடனும் ஆலோசிக்கத் தேவையில்லை’’ என்று கறாராகக் கூறினார்.

“சந்திக்க வர வேண்டாம்!” - எடப்பாடிக்கு மோடி கட்டளை

தமிழக அரசு வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இதேபோல ‘நான்கு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று போட்ட உத்தரவை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது. இறுதித் தீர்ப்பு வரும்வரை அந்த உத்தரவை ஒத்திவைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இப்போது இறுதி உத்தரவு வந்து மூன்று மாதங்கள் ஆகியும், மத்திய அரசு இழுத்தடிக்கிறது. அவர்களுக்கு மே 12-ம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடகா தேர்தல் மட்டுமே ஒரே நோக்கமாக இருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தை மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது’’ என்றார்.

அப்போது தலைமை நீதிபதி திடீரென, ‘‘நடுவர் மன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்பட்டதா, இல்லையா?’’ என்று கர்நாடக வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக வழக்கறிஞர் இடைமறித்து, ‘‘ஏப்ரல் மாதத்தில்கூட 2.5 டி.எம்.சி வழங்க வேண்டிய இடத்தில் 1.1 டி.எம்.சி தண்ணீர் மட்டும்தான் கர்நாடகா வழங்கியுள்ளது’’ என்றார். அப்போது தலைமை நீதிபதி, ‘‘நடுவர் மன்றம் வகுத்துள்ள ஃபார்முலாபடி ஏன் தண்ணீர் திறக்க வில்லை? உடனடியாக நான்கு டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றமே தாமாக முன்வந்து கர்நாடக அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும்’’ என்று கடுமையாக எச்சரித்தார். அதற்கு அசராத கர்நாடக வழக்கறிஞர், ‘‘கர்நாடகாவில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. அரசைக் கேட்காமல் எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது’’ என்று கூறினார்.

கடைசியில் மே 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம், ‘‘அன்று நான்கு டி.எம்.சி தண்ணீர் திறப்பது குறித்து பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தலைமைச் செயலாளர் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டிவரும்’’ என்றார் தலைமை நீதிபதி. ‘‘அப்படியானால் ஸ்கீம் குறித்த உத்தரவு..?’’ என்று தமிழக வழக்கறிஞர் சேகர் நாப்டே குறுக்கிட்டுக் கேட்க, ‘‘இப்போது தண்ணீர் கிடைப்பதுதானே முக்கியம்...” என்று அவரைத் தடுத்த நீதிபதி, ‘‘மே 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது ஸ்கீம் அமைக்க இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்று அறிக்கை அளிக்க வேண்டும்’’ என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இந்த உத்தரவு காரணமாக, மே 8-ம் தேதியும் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேவை மத்திய அரசுக்கு இல்லை.

இந்த உத்தரவு விஷயம் வெளியில் தெரிந்ததுமே, இளங்கீரன் தலைமையில் உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருந்த அரியலூர் மாவட்ட விவசாயிகள், போராட்டத்தில் குதித்தனர். தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி, உச்ச நீதிமன்ற வளாத்தில் ஒரு மரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்ட, அவரை போலீஸார் கஷ்டப்பட்டுக் கீழே இறக்கினர்.