Published:Updated:

‘பாக்யா’வை நம்பும் காங்கிரஸ்... மோடியை நம்பும் பி.ஜே.பி!

‘பாக்யா’வை நம்பும் காங்கிரஸ்... மோடியை நம்பும் பி.ஜே.பி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘பாக்யா’வை நம்பும் காங்கிரஸ்... மோடியை நம்பும் பி.ஜே.பி!

‘பாக்யா’வை நம்பும் காங்கிரஸ்... மோடியை நம்பும் பி.ஜே.பி!

மித் ஷாவின் அதிரடித் தேர்தல் வியூகம்... மோடியின் சூறாவளி பிரசாரம் என்று கர்நாடக சட்டமன்றத் தேர்தலில்  பி.ஜே.பி வேகம் காட்டிவரும் நிலையில், அந்தக் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் கட்சி நம்பும் ஒரே ஆயுதம் ‘பாக்யா’. ‘‘பாக்யா எங்கள் கட்சிக்கு பாக்கியமாக அமையும்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள், கர்நாடக காங்கிரஸார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரம், வேகம் எடுத்துள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சிசெய்த முதல்வர் என்ற பெருமையுடன் களத்தில் நிற்கிறார் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையா. இந்தத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி, பாதாமி என இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார்.

‘‘நல்லாட்சி கொடுத்திருந்தால் எதற்காக இரு தொகுதிகளில் போட்டியிட வேண்டும்?’’ என்று நக்கலாகக் கேட்கிறார்கள் பி.ஜே.பி-யினர். காங்கிரஸ் கட்சியின் தேசிய நோயாக இருக்கும் கோஷ்டி பூசலுக்கு இங்கும் பஞ்சமில்லை. மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி போன்ற சீனியர் தலைவர்களும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வரும் சித்தராமையாவுக்கு எதிராகவே உள்ளனர். தேர்தலில் சீட் வழங்குவதில் கூட, இந்த கோஷ்டிகளிடையே கடும் மோதல். ஆனாலும், ராகுல் காந்தி கடந்த இரு மாதங்களாகக் கர்நாடகாவில் உற்சாகத்துடன் மேற்கொள்ளும் பிரசாரம், காங்கிரஸ் கட்சியினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது.

‘பாக்யா’வை நம்பும் காங்கிரஸ்... மோடியை நம்பும் பி.ஜே.பி!

‘மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம்’ என்று காங்கிரஸ் கட்சி நம்புவதற்கு ஒரே காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் செயல்படுத்திய பாக்யா திட்டம்தான். பாக்யலட்சுமி என்ற பெயரில் பெண் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், திருமணம் என எல்லாவற்றுக்கும் உதவும் வகையான திட்டம் இது. கர்நாடகாவில் பிறக்கும் பெண் குழந்தைகள் எல்லோருக்கும் இந்தத் திட்டத்தில் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும். கர்நாடகாவில் சமூக மாற்றத்துக்கு பாக்யா திட்டம் நான்காவது சமூகப் புரட்சியாக உதவியதாக மைசூரு பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையே காங்கிரஸ் கட்சி பிரசாரமாகச் செய்துவருகிறது. 

‘தென்னிந்தியாவில் பி.ஜே.பி கால் பதிப்பதற்கான நுழைவாயிலாக கர்நாடகா தேர்தல் இருக்கும்’ என்று சொல்லும் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, கடந்த ஆறு மாதங்களாக பலமுறை இங்கு விசிட் அடித்து தேர்தல் வியூகங்களை வகுத்தார். ஆனால், பி.ஜே.பி-யில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு கோஷ்டி அரசியல் இங்கு உள்ளது. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கும், மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கும் ஏழாம் பொருத்தம். இன்னொரு மத்திய அமைச்சரான அனந்தகுமாரும் எடியூரப்பாவுக்கு எதிராக உள்ளார். ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா போன்ற சீனியர் தலைவர்களும் தனி கோஷ்டிகளாகச் செயல்படுகிறார்கள். எடியூரப்பா பரிந்துரை செய்த நிறையப் பேருக்கு சீட் கிடைக்கவில்லை. குறிப்பாக, வருணா தொகுதியில் போட்டியிட தன் மகன் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதில் எடியூரப்பாவுக்கு வருத்தம்.

காங்கிரஸின் ஊழலைப் பேசும் பி.ஜே.பி தலைவர்களுக்கு தர்ம சங்கடம், ரெட்டி சகோதரர்கள். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி ஆட்சியைப் பறிகொடுத்தற்கு முதல் காரணம் ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளே. இப்போது ரெட்டிக்கு நெருக்கமான எட்டு பேருக்கு பி.ஜே.பி-யில் சீட் கொடுத்துள்ளார்கள். பெல்லாரி பகுதியில் நிற்கும் பி.ஜே.பி வேட்பாளர்களின் செலவுகளை ரெட்டி தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. 

‘பாக்யா’வை நம்பும் காங்கிரஸ்... மோடியை நம்பும் பி.ஜே.பி!

அமித் ஷாவின் அதிரடி வியூகத்தில் மைக்ரோ லெவல் பிரசாரத்தை பி.ஜே.பி தரப்பு கையாண்டு வருகிறது. பகுதிவாரியாக பிரச்னைகளை எடுத்து, அதற்கு ஏற்றபடி வாக்குறுதிகளையும் பிரசாரத்தையும் திட்டமிடுகிறார்கள். கர்நாடக தேர்தலில் மோடியின் பிரசாரத்தையே பி.ஜே.பி நம்பியிருக்கிறது. மோடியை வைத்து இறுதிக்கட்டத்தில் 21 யாத்திரைகளை இங்கு நடத்த பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது. முதல் நாள் உடுப்பி பிரசாரத்தில் பேசிய மோடி, ‘‘தொழில் செய்வதற்கு உகந்த நாடாக இந்தியாவை நாங்கள் மாற்றிவருகிறோம். ஆனால், கர்நாடகாவை காங்கிரஸ் கட்சி கொலைக்கு உகந்த மாநிலமாக மாற்றிவருகிறது’’ என்று அனலாகப் பேசி பி.ஜே.பி-யினரை உற்சாகமடைய வைத்துள்ளார். 

கர்நாடகாவில் செல்வாக்குமிக்க கட்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளமும் களத்தில் உள்ளது. இவர்கள் தனியாகக் களத்தில் நிற்பதே அமித் ஷாவின் வியூகம்தான் என்கிறார்கள் பி.ஜே.பி-யினர். இந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதம ருமான தேவ கவுடாவை கர்நாடக பிரசாரத்தில் புகழ்ந்தார் மோடி. ‘‘காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற விடக்கூடாது என்று பி.ஜேபி-யுடன் தேவ கவுடா ரகசியக் கூட்டு வைத்துள்ளார்’’ என சித்தராமையா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். ‘ம.ஜ.த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், 40 முதல் 50 சீட்களைப் பெற்றுவிடும்’ என உளவுத்துறை கணித்துள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால், ஆட்சி அமைப்பதற்கு தேவ கவுடா தயவை இரு கட்சிகளுமே நாடவேண்டியிருக்கும். ஆனால், ‘‘யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தேர்தலை சந்தித்துக் கொள்ளட்டும்’’ என்று கிறுகிறுக்க வைக்கிறார் தேவ கவுடா.

- அ.சையது அபுதாஹிர்,   படங்கள்: சு.குமரேசன்