Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?

‘‘செம வெயிட்டு’’ எனக் ‘காலா’ பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘வெயிட்டான தகவல்களுடன் வந்திருக்கிறீர் போல... அந்தத் தகவல்களைக் கொட்டும்’’ என்றோம்.

‘‘முதலில் டெல்லியிலிருந்து ஆரம்பிக்கிறேன். மே 1-ம் தேதி டெல்லி சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் திடீரென சந்தித்தார். கொஞ்ச நாள்களாக தேசியச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ள மூன்றாவது அணி குறித்த குழப்பங்களை இந்தச் சந்திப்பு மேலும் அதிகமாக்கிவிட்டது.’’

‘‘என்ன புதுக்குழப்பம்?’’

‘‘திருமாவளவன் - ராகுல் காந்தி சந்திப்புக்கு இரண்டு நாள்கள் முன்னதாகத்தான், சென்னை யில் ஸ்டாலின் - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்புக்கும் இந்தச் சந்திப்புக்கும் முடிச்சு போட்டு தகவல்கள் கிளம்பின. ‘காங்கிரஸைக் கழற்றி விட்டுவிட்டு சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி உள்ளிட்டோருடன் இணைந்து தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க ஸ்டாலின் தயாராகிவிட்டார். அதனால், காங்கிரஸ் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தப் பார்க்கிறது. காங்கிரஸ் தலைமையில் வி.சி.க போன்ற கட்சிகள் இணைந்து இந்த அணியை அமைக்கின்றன. தேசிய அளவில் ஸ்டாலின் மூன்றாவது அணியில் இணைவதால், தமிழகத்தில் மூன்றாவது அணியைக் காங்கிரஸ் ஏற்படுத்துகிறது’ என்பதுதான் அந்தச் செய்தி. சமீபகாலமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பூடகமாகப் பேசி வருவதை, இந்தச் சந்திப்புகளுடன் முடிச்சுப் போட்டனர்.’’

‘‘ராகுலை திருமாவளவன் ஏன் சந்தித்தார்?’’

‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து டெல்லியில் ஒரு போராட்டம் நடைபெற்றது. அதற்காகத்தான், திருமாவளவனும் வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் டெல்லி போனார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து முதலில் பேசியவர்களில் முக்கியமானவர் ராகுல் காந்தி. அதனால், அவருக்கு நன்றி சொல்லலாம் என்று திட்டமிட்டு, ஏப்ரல் 30-ம் தேதி ராகுல் காந்தியின் செயலாளரிடம் பேசி நேரம் கேட்டனர். இவர்கள் டெல்லி போய் இறங்குவதற்குள் அப்பாயின்ட்மென்ட் உறுதியாகிவிட்டது. ‘மே 1-ம் தேதி சந்தித்தால் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசமுடியும். 2-ம் தேதி டெல்லியில் இருந்தால் அரை மணி நேரம்கூட பேசலாம்’ என ராகுல் சொல்லியிருக்கிறார். அதன்பின், 1-ம் தேதியே சந்திக்க முடிவாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வாகியுள்ள சீதாராம் யெச்சூரிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, அதன்பின் ராகுல் வீட்டுக்குத் திருமாவளவன் சென்றார்.’’

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?

‘‘என்ன பேசினார்களாம்?’’

‘‘வாசலுக்கே வந்து வரவேற்ற ராகுல் காந்திக்கு சால்வை போட்டாராம் திருமாவளவன். ‘எதற்காக இது?’ என்று ராகுல் கேட்டதும், ‘நீங்கள் காங்கிரஸ் தலைவராகத் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கவே இந்த சால்வை’ என்றாராம் திருமாவளவன். ‘தமிழ்நாட்டுக்கு யார் வந்தாலும் சால்வை போடுகிறார்களே? இதற்கு அர்த்தம் என்ன?’ என விசாரித்தாராம். பிறகு வன்கொடுமை சட்டம் பற்றிய ராகுலின் கண்டனத்துக்குத் திருமா நன்றி தெரிவித்ததும், ‘இது காங்கிரஸின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்தோம்’ என்றாராம் ராகுல். அதுமட்டுமல்ல, ‘பி.ஜே.பி என்பது அடிப்படையிலேயே தலித்துகளுக்கு எதிரான கட்சி. அதில் தலித்கள் எப்படி இருக்க முடியும். ‘உங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு கட்சியில் உங்களால் எப்படி இருக்க முடிகிறது’ என தலித் தலைவர் உதித் ராஜிடம் நான் கேட்டேன்’ என்றாராம் ராகுல்.’’

‘‘அரசியல்ரீதியாக என்ன பேசினார்களாம்?’’

‘‘மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியத்தை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஜூன் மாதம் இந்திய தேசப் பாதுகாப்பு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். அதற்கு ராகுலை அழைத்துள்ளனர். ‘முகுல் வாஸ்னிக்கிடம் பேசி நான் தேதி கொடுக்கிறேன்’ என உறுதியளித்த ராகுல், ஒரு போட்டோகிராபரைக் கூப்பிட்டு திருமாவளவன் மற்றும் ரவிக்குமாருடன் உற்சாகமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டா ராம். வெளியே வந்த திருமாவளவன், ‘அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும். அதில் வி.சி.க-வும் இணைந்திருக்க விரும்புகிறது’ என்று சொன்னார். இதைத்தான் தனி அணி என சிலர் கிளப்பிவிட்டு விட்டனர். சந்திப்பு முடிந்து வெளியே வந்ததுமே மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவனே போன் செய்து, ராகுலுடன் பேசிய விஷயங்களைச் சொல்லி விட்டார். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இந்தக் கூட்டணிக்கு தி.மு.க-தான் தலைமை என்றும் சொல்லிவிட்டார். அதைத் தாண்டி ஏன் இப்படிச் செய்திகள் கிளம்பின என்பதில் திருமாவளவனே குழம்பி விட்டார்.’’

‘‘அப்படியானால், தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது கற்பனைதானா?’’

‘‘தேசிய அளவிலும்கூட, அதைத் தன்னால் இயன்ற அளவுக்குத் தடுப்பதற்காக ஸ்டாலின் புது வியூகம் அமைத்து வருகிறார். ஸ்டாலினைச் சந்திக்க வருவதற்கு முன்பாக சந்திரசேகர ராவ் பேசியதையும், ஸ்டாலினைச் சந்தித்துவிட்டுச் சென்றபிறகு அவர் பேசியதையும் ஒப்பிட்டுப் பாரும். ‘பி.ஜே.பி-யும் காங்கிரஸும் இல்லாத மூன்றாவது அணி அமைப்போம்’ என்று சொல்லி வந்தவர் சந்திரசேகர ராவ். ஆனால், ஸ்டாலினைச் சந்தித்துவிட்டுச் செல்லும்போது, ‘இரண்டாவது அணியோ, மூன்றாவது அணியோ, எந்த அணியைப் பற்றியும் பேசவில்லை. மாநில சுயாட்சி, மாநில நிதி உரிமைகள் ஆகியவற்றைப் பற்றித்தான் பேசினோம்’ என்று சொல்லிச் சென்றுள்ளார் சந்திரசேகர ராவ். கருணாநிதியைச் சந்திக்க வந்த அவர், சென்னையில் தி.மு.க நடத்த இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டிலும் பங்கெடுக்க இருக்கிறார்.’’

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?

‘‘அந்த மாநாடு எப்போது நடக்கவுள்ளது?’’

‘‘மாநில சுயாட்சி மாநாடு என்று சொல்லப் பட்டாலும், இது நாடாளுமன்றத் தேர்தல் அணிச் சேர்க்கை மாநாடாகத்தான் இருக்கப் போகிறது. அநேகமாக, ஜூலை இறுதியில் நடக்கலாம். இதற்கு, பி.ஜே.பி-யைச் சேர்ந்த முதல்வர்கள் தவிர மற்றவர்களை அழைப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். நான் சொன்னதைக் கவனித்தீரா, ‘பி.ஜே.பி தவிர்த்த மற்ற கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள்’ என்றுதான் சொன்னேன். அதாவது, காங்கிரஸையும் உள்ளடக்கிய
தாகத்தான் அந்தக் கூட்டணியை அமைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘ஆனால், மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் வாழ்த்துச் சொன்னாரே?’’

‘‘காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்று மம்தா சொல்லவில்லையே! பி.ஜே.பி-யை எதிர்க்கும் கூட்டணி என்றுதான் சொல்லி வருகிறார். அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை என்று சொல்வதை மம்தா ஏற்கவில்லை. ‘ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சி வலிமையாக உள்ளது. அந்தந்தக் கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமையட்டும்’ என்பதுதான் கொல்கத்தா டி.வி-க்கு மம்தா கொடுத்த பேட்டி. அதற்குத்தான் ஸ்டாலின் வாழ்த்துச் சொன்னார். அதை காங்கிரஸுக்கு எதிரான அணி என்று சிலர் பரப்பி விட்டார்கள்.’’

‘‘ஆனால், திருநாவுக்கரசர் மீது ஸ்டாலினுக்கு வருத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே?’’

‘‘அது கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டது. இப்போதும் தொடர்கிறது. திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரை, தி.மு.க-வினர்தான் திட்டமிட்டுத் தோற்கடித்ததாக திருநாவுக்கரசர் அப்போதே புகார் சொன்னார். அதிலிருந்து இரு தரப்புக்கும் கோபம் இருந்தது. திருநாவுக்கரசர் தலைவர் ஆன பிறகு, சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர் போலத் தன்னைக் காட்டிக் கொண்டார். அதுவும் தி.மு.க-வுக்குப் பிடிக்கவில்லை. ‘ஸ்டாலினைவிட நான் சீனியர்’ என்று திருநாவுக்கரசர் சொல்லி வந்ததும் இந்தத் தரப்புக்கு வந்து சேர்ந்தது. இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டது உண்மை. அதற்காக, தி.மு.க கூட்டணியை விட்டு விலகும் முடிவைத் திருநாவுக்கரசர் தன்னிச்சையாக எடுக்க முடியாது. நேரடியாகத் தூதரை அனுப்பித் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் அளவுக்கு ராகுலும் ஸ்டாலினும் இணக்கமாக உள்ளனர் என்பதுதான் உண்மைநிலை. ‘தி.மு.க-வுடன்தான் கூட்டணி என ராகுல் காந்தி முடிவெடுத்து விட்டார். அதற்கு மாறாக திருநாவுக்கரசர் முடிவெடுத்தால், அவரை மாற்றிவிட்டு, தி.மு.க-வுக்கு நெருக்கமான பீட்டர் அல்போன்ஸை நியமிப்பார்கள்’ என்று சத்தியமூர்த்தி பவனில் சொல்ல ஆரம்பித் துள்ளார்கள். ‘பி.ஜே.பி - காங்கிரஸ் இல்லாத அணி’ என்று அகில இந்திய அளவில் சில கட்சிகள் கிளம்பியுள்ள நிலையில் தி.மு.க போன்ற வலிமையான பார்ட்னர்களை காங்கிரஸ் இழக்காது அல்லவா?’’

‘‘கவர்னரை சர்ச்சையில் சிக்கவைத்த நிர்மலாதேவி விவகாரம் எந்த நிலையில் உள்ளது?’’

‘‘இந்த விவகாரத்தில் இனி யாரையும் விசாரிப்ப தில்லை, வழக்கில் யாரையும் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு சி.பி.சி.ஐ.டி டீம் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை மட்டும் மையப்படுத்திக் குற்றப்பத்திரிகை தயாராகிறது. சி.பி.சி.ஐ.டி எஸ்.பி-யான ராஜேஸ்வரி, விசாரணை விவரங்களைப் படுரகசியமாக வைத்துள்ளார். நிர்மலாதேவியுடன் போன் தொடர்பில் இருந்தவர்கள், அவர் ஆடியோவில் குறிப்பிட்டிருந்தவர்கள் என்று பலரிடமும் சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவில்லை. ‘ஆடியோவில் கவர்னர் பெயரை நிர்மலாதேவி குறிப்பிட்டுள்ளார். அதை யாரிடம் விசாரிப்பார்கள்?’ என்ற கேள்வியைச் சிலர் எழுப்பி வருகிறார்கள்.’’

‘‘சந்தானம் விசாரணை என்ன ஆனது?’’

‘‘மூன்றாம் கட்ட விசாரணைக்காக மதுரை வந்த சந்தானம், மே 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையாவிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடமிருந்து சில ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார். விசாரணை அறிக்கையை விரைவில் தயாரிக்கப்போவதாகச் செய்தியாளர் களிடம் கூறிய சந்தானம், மே 3-ம் தேதி மதுரை சிறைக்குச் சென்று நிர்மலா விவகாரத்தில் கைதாகியுள்ள முருகன், கருப்பசாமியிடம் விசாரணை செய்தார். இந்தச் சிக்கலிலிருந்து தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்தை ஓர் அமைச்சர் காப்பாற்றியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் நிர்மலாதேவி வழக்கு நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது.’’

‘‘குட்கா விவகாரம் எந்த நிலையில் இருக்கிறது?’’

‘‘தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையிலேயே சி.பி.ஐ விசாரணை நடக்க உள்ளது. இதற்கிடையே தி.மு.க போராட்டத்தில் ஒரு சுவாரசியம். குட்கா விவகாரத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கே சென்று தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலரும் விஜயபாஸ்கர் வீடு முன்பாகப் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலங்குடி அடுத்த கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். எப்போது இலுப்பூரில் சர்ச்சை என்றாலும், லோக்கலில் வேறு எங்காவது இருந்துகொண்டு நடப்பதைக் கவனிப்பது விஜய பாஸ்கருக்கு பிடித்தமான ஒன்றாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா?

துணை முதல்வராக ஸ்டாலின் பதவியில் இருந்தபோது, அவரது அலுவலகத்தில் பணியாற்றியவர் இளங்கோ. ஓய்வுபெற்ற இந்த அதிகாரியை அழைத்துவந்து தமிழக விவசாயத்துறையின் முக்கியமான திட்டத்துக்கு கன்சல்டன்ட் பொறுப்பில் அமர்த்தினர். விவரம் தெரிந்து முதல்வர் திட்டியதும், இளங்கோவை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டனர். இளங்கோ நியமனத்தை அரங்கேற்றியவர்கள், விவசாயத்துறை உயர் அதிகாரி மற்றும் நிதித்துறையின் உயர் அதிகாரி ஆகிய இருவரும்தானாம்.

பக்கத்து மாநில முதல்வரின் மனைவியின் கஸ்டடியில் 10 ஏக்கரில் பழைய பங்களா ஒன்று இருக்கிறது. கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள அந்த பங்களாவை இப்போது விற்றுவிட முடிவுசெய்துள்ளனர். விலை கேட்டு யார் வந்தாலும், அந்தப் பெண்மணியே அழைத்துச் சென்று காட்டுகிறாராம். வருபவர்கள் பலரும், அவர் சொல்லும் விலையைக் கேட்டு மிரண்டு ஓடுகிறார்கள்.

நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் கமிஷன், சி.பி.சி.ஐ.டி விசாரணை என இரண்டிலும் விசாரணைக்கு வரும் பலரும் மோகனமான ஓர் அதிகாரியைக் கை காட்டுகிறார்களாம். அந்த அதிகாரி கிண்டி மாளிகையில் அலுவலகரீதியான இணைப்பாளர் என்கிற பெயரில் ஆட்டம் போட்டவராம். இப்போது, அங்கிருந்து தலைமைச் செயலகத்தின் முக்கியமான துறையைக் கவனிக்கும் பொறுப்பை வாங்கிக்கொண்டு நைசாக வந்துவிட்டாராம்.

  கர்நாடகா தேர்தல் முடிவுக்குப் பிறகு கிண்டிக்காரருக்கு கல்தா கொடுக்க முடிவுசெய்துள்ளதாம் மத்திய அரசு. அதுவரை அவரை தகுந்த பாதுகாப்புடன் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.