Published:Updated:

`` `கலைஞர் இல்லாத கூட்டத்தில் பேசத் தோணல'ம்பாங்க நூர்ஜகான்!" - கனிமொழி

"மகளிர் அணிக் கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்காத சமயங்களில் கடுமையா சண்டை போடுவாங்க. ஆனால், சமீபத்தில் நான்கு கூட்டங்களில் பேசச் சொல்லியும் அமைதியா இருந்துட்டாங்க."

`` `கலைஞர் இல்லாத கூட்டத்தில் பேசத் தோணல'ம்பாங்க நூர்ஜகான்!" - கனிமொழி
`` `கலைஞர் இல்லாத கூட்டத்தில் பேசத் தோணல'ம்பாங்க நூர்ஜகான்!" - கனிமொழி

ன்னுடைய மூச்சிலும் பேச்சிலும் தி.மு.க கட்சியையும், செயல்பாடுகளில் பெண்களை முன்னிறுத்தியும் உழைத்தவர், தி.மு.க மகளிர் அணி புரவலரான நூர்ஜகான் பேகம். சிறந்த மேடைப் பேச்சாளர். எங்கெல்லாம் தன்னை அடக்கினார்களோ, அங்கே இரட்டிப்பான குரல் உயர்த்தியவர், நேற்று முன்தினம் (24-10-18) நிரந்தர மௌனமானர். ``அவரை என் அம்மா ஸ்தானத்தில் வைத்திருந்தேன்'' என்கிறார், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. அவரிடம் பேசினேன்.

``எதற்குமே பயப்படாத பெண், நூர்ஜகான் அம்மா. எத்தனையோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும் கட்சியை விட்டுக்கொடுக்காதவர். அதுதான் அவங்க மேலே எனக்கு ஈர்ப்பு வரக் காரணம். தன்னைச் சுற்றி இருக்கிறவங்களே அடக்க முற்படுறாங்கனு தெரிஞ்சும் சபையில் நின்னு காட்டினவங்க. அவங்களுக்கு 73 வயசாகுது. என் சிறுவயதிலிருந்து அவங்களைப் பார்க்கிறேன். எங்க குடும்பத்தில் ஒருத்தர் போல இருந்தாங்க. நான் டெல்லி சிறையில் இருந்தபோது என்னை அடிக்கடி வந்து பார்க்கும் அளவுக்கு எங்களுக்குள் பிணைப்பு இருந்துச்சு. 

பாசமாப் பேசறதா இருக்கட்டும்; உரிமையாச் சண்டை போடுறதா இருக்கட்டும். அவங்க மாதிரி யாராலும் இருக்க முடியாது. நான் எதற்காகவாது தயக்கம் காட்டறதா தோணுச்சுன்னா `நீ இப்படி இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் கடந்து வெளியில் வரணும். செய்யவேண்டியது நிறைய இருக்குனு' நம்பிக்கை கலந்த வார்த்தைகளைக் கொடுப்பாங்க. தலைவரிடம் எப்பவுமே ஒரு மூத்த சகோதரனிடம் பேசுவதுபோல உரிமையாப் பேசுவாங்க. ஒருமுறை நானும் தலைவரும் பேசிகிட்டபோது, `நான் விடிய காலையில் மதுரை வழியாக வந்தாலும், திண்டுக்கல்லில் கலைஞர் வாழ்க என்ற குரல் கூட்டத்தில் கேட்குதுன்னா அது நிச்சயமாக நூர்ஜகானின் குரலாகத்தான் இருக்கும்'னு சொன்னார்.

நூர்ஜகான் அம்மா எப்போ சென்னைக்கு வந்தாலும், என் அம்மாவைப் பார்க்காமல் போகவே மாட்டாங்க. இருவருமே நண்பர்கள் மாதிரி பழகிட்டிருந்தாங்க. தலைவரையோ, என்னையோ பார்க்காமல்கூட ஊருக்குத் திரும்பிடுவாங்க. ஆனால், அம்மாவிடம் பேசாமல் போனதேயில்லே. கடந்த ஒரு மாசமா அம்மாவைப் பார்க்கவே வரலை. நான் ஏன்னு கேட்டபோது, `என்னால் தலைவர் இல்லாமல் அம்மாவை அந்த நிலைமையில் பார்க்க முடியலை'னு' சொன்னாங்க.

கட்சி சார்பா ஒரு கூட்டம் நடக்குதுன்னா, மேடையேறி பேச ரொம்ப விரும்புவாங்க. மகளிர் அணி கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்காத சமயங்களில் கடுமையாச் சண்டை போடுவாங்க. ஆனால், சமீபத்தில் நான்கு கூட்டங்களில் பேசச் சொல்லியும் அமைதியா இருந்துட்டாங்க. `நீங்க அப்புறம் சண்டை போடுவீங்க. பேசுங்க'னு கட்டாயப்படுத்தினதுக்கு, `தலைவர் இல்லாத கூட்டத்தில் பேசத் தோணல'னு சொல்லிட்டாங்க. 

தமிழ்நாடு முழுக்க அத்தனை இடங்களுக்கும் போயிருக்காங்க. இந்தச் சமூகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமா இருந்த காலகட்டத்திலேயே, கட்சிப் பணிகளில் துணிவோடு ஈடுபட்டிருக்காங்க. இதெல்லாம் சாதாரண விஷயமில்லே. அவங்களை மாதிரி சுயநலமில்லாத பெண் ஆளுமைகள் அரசியலுக்குத் தேவை. ஆனால், காலம் இப்படி அவங்களைக் கூப்பிட்டுக்கும்னு எதிர்பாக்கலை. அவங்க மருத்துவமனையில் எதுவும் பேசமுடியாமப் படுத்திருந்த காட்சி இன்னும் நினைவில் இருக்கு. அடுத்த கூட்டத்துக்கு வர்றேனு வாக்குறுதி கொடுத்தாங்க. நிச்சயமா மீண்டுவருவாங்கனு நம்பி அங்கிருந்து கிளம்பி வந்தேன். ஆனால், அதுவே கடைசி சந்திப்பா ஆகிடுச்சு" என்கிற கனிமொழி குரலில், வேதனை உச்சமாய் வெளிப்படுகிறது.