தொடர்கள்
Published:Updated:

ஆயுதம் செய்வோம்!

ஆயுதம் செய்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயுதம் செய்வோம்!

ஞா.சுதாகர் - படம்: சு.குமரேசன்

‘தமிழகத்தில் டிஃபென்ஸ் காரிடர் அமைக்கப்படும்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், டிஃபென்ஸ் காரிடருக்கான தேவை என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நிலை

மூன்று செய்திகளின் வழி இந்திய ராணுவத்தின் இன்றைய நிலையை அறியலாம்.

1 - “இந்தியா கடுமையான போரில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை வந்தால், நம்மிடம் இருக்கும் வெடிபொருட்கள் 10 நாட்களில் தீர்ந்துவிடும்” - கடந்த ஆண்டு சி.ஏ.ஜி வெளியிட்ட தகவல் இது.

2 -  “இந்திய ராணுவத்தின் தரைப்படையில் இருக்கும் ஆயுதங்களில் 68%  பழைமையானவை. 24% தற்காலத்துக்கு ஏற்றவை; 8% மட்டுமே அதிநவீன ஆயுதங்கள். இதற்குக் காரணம் பட்ஜெட்டில் அதிநவீன ஆயுதங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் மிகக்குறைவான நிதியே” எனத் தெரிவித்திருந்தார் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சரத் சந்த்.

3 - ராணுவச் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஒவ்வோர் ஆண்டும் இரண்டுமுறை ராணுவத் தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்தமுறை இந்தக் கூட்டத்தில் ‘பட்ஜெட்டில் குறைவான நிதி ஒதுக்கியதால் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையைக் கணக்கில்கொண்டு, அதிக செலவு மிகுந்த வெடிபொருட்கள் சிலவற்றை வாங்குவதைத் தவிர்க்கலாம்’ என முடிவெடுக்கப்பட்டதாகத் தகவல்கள்  வெளியாகின.

ஆயுதம் செய்வோம்!

பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்குவது மட்டும்தான் பிரச்னையா?

இந்திய ராணுவத்திற்கென பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் ராணுவத்தைப் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆகும் செலவை விடவும் ராணுவத்தின் பராமரிப்புக்கே அதிக தொகை செலவாகிறது. மிச்சம் மீதியில்தான் முப்படைகளும் புதிய ஆயுதங்களை வாங்குவதற்கான தொகையைப் பங்கிட்டுக்கொள்கின்றன.

குறைவாக நிதி ஒதுக்கப்படுவது ஏன்?

இந்தக் கேள்வி கடந்த ஆண்டு அருண் ஜெட்லியிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், “ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் அவர்கள் வேகம் காட்டினால், நாங்கள் இன்னுமே கூட அதிக நிதி ஒதுக்கத் தயாராக இருக்கிறோம்.”.  ஆனால், இந்த ஆண்டும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்: “எனக்கும் ஆசைதான். ஆனால், நிதி இருக்க வேண்டுமல்லவா?”

இந்த இரண்டு பதில்களில் இருந்து இரண்டு விஷயங்களை நாம் புரிந்துகொள்ளலாம். ஒன்று, இந்திய ராணுவத்துக்கு அள்ளிவழங்கும் அளவுக்கு அரசிடம் நிதி இல்லை. இரண்டு, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு வழங்கும் நிதியை அது முறையாகச் செலவிடுவதில்லை.

அதிக நிதி ஏன் தேவைப்படுகிறது?

ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதுதான் அடிப்படைக்காரணம். இந்தப் பிரச்னையை சரிசெய்யத்தான் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைக் கையில் எடுத்தது மோடி அரசு.  இதனைச் செயல்படுத்தும் விதமாக 2016-ம் ஆண்டில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் புதிய கொள்முதல் திட்டம் ஒன்றை வெளியிட்டார். இதில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் ராணுவத்துக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகமும், வெளிநாட்டிலிருந்து கருவிகளை இறக்குமதி செய்வதைக் குறைக்கும்வகையில், இந்தியாவிலேயே முழுமையாகத் தயாராகும்  Indian-IDDM (Indigenously Designed, Developed and Manufactured) கருவிகளுக்குக் கொள்முதலில் முன்னுரிமை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இருந்தும்கூட ஆயுத இறக்குமதி குறையவில்லை. காரணம், கொள்முதல் செய்வதில் மிகக்கடினமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதுதான். இதனால் சிறு குறு நிறுவனங்களுக்கும், பாதுகாப்புத் துறைக்கும் இடையே இடைவெளி இருந்துகொண்டேதான் இருந்தது. 

மேக் இன் இந்தியா 2.0

ஒருபக்கம், வெளிநாட்டு ஆயுதங்களை இறக்குமதி செய்வதால் ஏற்படும் நிதி நெருக்கடி, மறுபுறம் பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கொள்கைகளில் இருக்கும் தடைக்கற்கள் என இரண்டு சவால்களையும் எதிர்கொண்டு நின்றது பாதுகாப்புத்துறை அமைச்சகம். இந்த இரண்டிற்கும் தீர்வாக வந்ததுதான் புதிய ‘Defence Production Policy 2018’.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான உற்பத்தியை அதிகரிப்பது, அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுப்பது, 13 வகை ஆயுதங்களின் இறக்குமதியை 2025-ம் ஆண்டுக்குள் குறைப்பது, அந்த 13 ஆயுதங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது, ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது,  AI மற்றும் கணினித் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னேறச் செய்வது போன்றவற்றை குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டம். இந்த இலக்கை எட்டுவதற்காக ‘ Make II’ செயல்திட்டத்தில்  விதிமுறைகளைத் தளர்த்தியிருக்கிறது பாதுகாப்புத்துறை அமைச்சகம். இந்தச் செயல்திட்டத்தின் ஓர் அம்சம்தான் `டிஃபென்ஸ் காரிடர் திட்டம்.’

உள்நாட்டு ராணுவ உற்பத்தியை அதிகரிப்பதற்காக இரண்டு டிஃபென்ஸ் காரிடர்கள்  திட்டத்தை, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டில் அறிவித்தார் அருண் ஜேட்லி. அன்றைய தினமே பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘முதல் டிஃபென்ஸ் காரிடர் தமிழகத்திற்கும் பெங்களூருவிற்கும் இடையே அமையும்’ என அறிவித்தார். பிப்ரவரி 21-ல் மோடி, ‘இரண்டாவது டிஃபென்ஸ் காரிடர் உத்தரப்பிரதேசத்தில் அமையும்’ என அறிவித்தார். இதைத்தொடர்ந்துதான், தமிழகத்தில் இருக்கும் சிறு,குறு தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘டிஃபெக்ஸ்போ’ கண்காட்சியும் இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்பட்டது.

ஆயுதம் செய்வோம்!

தமிழ்நாட்டின் டிஃபென்ஸ் காரிடர்

இந்தியாவில் முதல்முறையாக அமையவிருக்கும் இந்த டிஃபென்ஸ் காரிடர் தமிழகத்துக்கு வரக்காரணம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, மனிதவளம் என எல்லா ஏரியாவிலும் தமிழகம் சிறப்பாக இருப்பதால்தான். பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் ஒன்றிணைந்து, இந்திய ராணுவத்திற்காகக் கருவிகளை உற்பத்தி செய்யும் ஒரு மண்டலம்தான் இந்த ‘டிஃபென்ஸ் காரிடார்’.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர்(கிருஷ்ணகிரி) ஆகிய மாவட்டங்கள் இந்த டிஃபென்ஸ் காரிடரில் இடம்பெறவிருக்கின்றன. இந்தப் பகுதிகளில்  அமைந்திருக்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் அனைத்தையும் இந்தியப் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியில் ஈடுபடச்செய்வதுதான் இந்த டிஃபென்ஸ் காரிடரின் நோக்கம். இதற்காக அரசின் சார்பில் தொழில்நுட்ப உதவிகள், உள்கட்டமைப்பு வசதிகள், கருவிகள் தயாரிப்பதற்கான லைசென்ஸ் வழங்குதல் போன்ற உதவிகள் அனைத்தும் செய்யப்படும்.

சரி, இதனால் தமிழகத்திற்கு என்னவெல்லாம் நன்மை? தமிழகத் தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத்திடம் கேட்டோம். “தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில்துறையில் முதலீடும் பெருகும். ஏற்கெனவே தமிழ்நாடு வர்த்தகத் தொழில் எளிதாக்குதல் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்தியிருக்கிறோம். இதில் மொத்தம் 11 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி புதிதாகத் தொழில் தொடங்குபவர்களின் விண்ணப்பம் ஒற்றைச்சாளர முறையில், 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டுவிடும்.

ஆயுதம் செய்வோம்!


டிஃபென்ஸ் காரிடரில் இணைந்திருக்கும் 5 மாவட்டங்கள் தவிர, நாங்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தையும்  இணைக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அதனையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதில் இணைக்கும் பட்சத்தில், அதற்கும் தேவையான உதவிகளை அளிக்கத் தமிழக அரசு தயாராக இருக்கிறது” என்கிறார் எம்.சி.சம்பத்.

புதிய கொள்முதல் திட்டத்திற்கும், டிஃபென்ஸ் காரிடருக்கும் தொழில்துறையினர் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என தமிழ்நாடு சிறு மற்றும் குறுதொழில் சங்கத்தின் தலைவர் பாபுவிடம் கேட்டோம். “இது நல்ல திட்டம்தான். ஆனால், இந்தத் திட்டத்தை எப்படி அமல்படுத்த ப்போகிறார்கள், அதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்களை எப்படிக் கையாளப்போகிறார்கள் என்பதை யெல்லாம் பொறுத்துதான் எந்தளவுக்கு நன்மையளிக்கும் எனக்கூற முடியும். உதாரணத்திற்கு  Credit Guarantee Fund Trust திட்டம் என ஒன்று இருக்கிறது. அதன்படி  MSME தொழில்முனைவோருக்கு கொலாட்டரல் (உத்திரவாதம்) இல்லாமல் இரண்டு கோடி வரை கடன் தரலாம். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்று எத்தனை வங்கிகள் இப்படி கொலாட்டரல் இல்லாமல் கடன் தருகின்றன?

சென்னையிலேயே ஏராளமான சிறுகுறு தொழில்நிறுவனங்கள் இருந்தும் எத்தனை நிறுவனங்கள் பாதுகாப்புத்துறைக்கு உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன? காரணம், ஆர்டரின் அளவும், அரசின் ஒத்துழைப்பும் குறைவாக இருப்பதுதான். சாதாரண உதிரிபாகங்களைத் தவிர்த்து பாதுகாப்புத்து றைக்காக, தொழில்நிறுவனங்கள் தயாரிக்கும் உதிரிபாகங்களின் தன்மை முற்றிலும் வேறானது. அவற்றைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதிகளவில் ஆர்டர் கொடுத்தால்தான் சாத்தியம். ஆனால், மிகக்குறைந்த அளவில்தான் தொழில்நிறுவனங்களுக்கு ஆர்டரே கிடைக்கும். இந்த அளவை அதிகப்ப டுத்தினாலே நிறைய பிரச்னைகள் சரியாகும். இல்லையெனில் பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் ஆர்டர் எடுக்க முடியும். இதையெல்லாம் மாற்ற வேண்டு மென்றால் அரசு, சிறுகுறு தொழில்நிறுவ னங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துதர வேண்டும். அதன்பிறகுதான் இது பலனளிக்குமா இல்லையா என்பது தெரியும்.” என்கிறார்.

இத்தகைய நடைமுறைச் சவால்களையும் கணக்கில்கொண்டு ‘டிஃபென்ஸ் காரிடர்’ திட்டம் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

உத்தரப்பிரதேசத்தின் டிஃபென்ஸ் காரிடர்

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய பகுதிகள் டிஃபென்ஸ் காரிடரில் இடம்பெறுகின்றன. இதுகுறித்து உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மோடி, ‘இந்த டிஃபென்ஸ் காரிடரின் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 20,000 கோடி ரூபாய் முதலீடும், 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்’ என்றார்.

“இந்தியாவில் சுமார் 70 சதவிகிதத் தளவாடங்கள் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெறும் 30 சதவீதம்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்த 30 சதவீதத்தில் 12 சதவீத நிறுவனங்கள் மட்டும்தான்  MSME-க்கள். மீதி 18 சதவீதம் அரசின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அரசின் நோக்கம்,  MSME-க்களின் உற்பத்தியைப் பெருக்குவதுதான். இதில் 4 சதவிகித  MSME-க்களின் பங்கு உயர்ந்தாலே நிறைய முதலீடு இங்கே வரும். அதுவே எங்களுக்குப் பெரிய நன்மையாக இருக்கும்.

அரசு டிஃபென்ஸ் காரிடருக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்காக, தனி ஆலோசகர்களை அமைத்துள்ளதாக டிஃபெக்ஸ்போவிலேயே கூறினார்கள். அதன்படி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று டிஃபென்ஸ் காரிடருக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்வார்கள். எந்த மாவட்டத்தில் எந்த மாதிரியான பாகங்களைத் தயார் செய்யலாம், அந்த மாவட்டத்தின் பலம் என்ன போன்றவற்றையெல்லாம் ஆராய்வது, அந்தப் பகுதிகளில் இருக்கும் ராணுவத்துக்காக உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை கலந்தாலோசிப்பது போன்ற பணிகளையெல்லாம் முடித்து, பின்னர் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். அந்த அறிக்கை வந்தபின்னர்தான் இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.” என்கிறார் ’கொடிசியா’ அமைப்பின் தலைவர் சுந்தரம்.