தொடர்கள்
Published:Updated:

அமைதியை நோக்கி...

அமைதியை நோக்கி...
பிரீமியம் ஸ்டோரி
News
அமைதியை நோக்கி...

ஆ.பழனியப்பன்

ட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய மண்ணில் அடியெடுத்து வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கொரிய தீபகற்பத்தில் அமைதி மேகங்கள் சூழ்ந்துவருவதற்கான அறிகுறிகளாகத் தென்படுகின்றன.

ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலைமையே வேறு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தென்கொரியப் பகுதியை ஒட்டிய கடற்பகுதியில் மிகப்பெரிய அளவில் தளவாட செயற்பாட்டு ஒத்திகையை அதிரடியாக நடத்தியது வட கொரிய ராணுவம். அதற்கு எதிர்வினையாக, அதே பிராந்தியத்தில் போர் ஒத்திகையில் ஈடுபட்டது தென் கொரியா. அது, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அப்போது, “இது, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை” என்று விமர்சித்த வடகொரியா, “அதிரடித் தாக்குதல் மூலம் அந்தக் கப்பல்களை எங்களால் மூழ்கடிக்க முடியும்” என எச்சரித்தது. பதிலுக்கு தென் கொரியா, “அச்சுறுத்தல்களை வட கொரியா தொடர்ந்தால், தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என காட்டமாகக் கூறியது.

அமைதியை நோக்கி...

அந்தப் பரபரப்புக் காட்சிகள் முடிந்து சரியாக ஓராண்டு முடிந்த தருணத்தில், கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் முற்றிலும் விலகியிருந்தது. இந்தச் சூழலில்தான், தனது பகை நாடாகக்  கருதிக்கொண்டிருந்த தென் கொரிய மண்ணில், ஏப்ரல் 27-ம் தேதி காலடி பதித்தார், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். ஒரே நாடாக இருந்து பிரிந்த வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே 1950 முதல் 1953 வரை நடைபெற்ற போருக்குப் பிறகு, வட கொரிய அதிபர் ஒருவர் தென் கொரியாவுக்குப் பயணம் செல்வது இதுவே முதல்முறை.

எதிரி நாடு என்று கருதப்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் இயல்பாக நடந்துசென்ற கிம் ஜோங் உன், திறந்தவெளியில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் நெருக்கமாக நடந்தவாறு பேசிக்கொண்டு, சர்வதேச ஊடகங்கள் முன்பு கூட்டறிக்கை வெளியிட்டு இரு நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

இரு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில், அணுசக்தியற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது, போரால் பிரிந்த குடும்பங்களை ஒன்றுசேர்ப்பது, நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு நாடுகளும் கூட்டாகப் பங்கெடுப்பது உள்பட பல முக்கியமான அம்சங்கள் அடங்கிய ‘பான்முன்ஜோம் பிரகடனம்’ வெளியிடப்பட்டது. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நோக்கிய பயணத்தில் இது முக்கியமான கட்டம். இந்தப் பயணத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

வழக்கமாக அனல் பறக்கக்கூடிய வட கொரியா, தென் கொரியா, அமெரிக்கா தரப்புகளின் பேச்சுகளில், ஆச்சர்யப்படும் வகையில் திடீரென தென்றல் வீச ஆரம்பித்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், கடந்த ஜனவரியில் “நான், கிம் ஜோங் உன் உடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கருதுகிறேன்” என்று அறிவித்தார்.

அந்த சமயத்தில்தான், தென் கொரியாவும் வட கொரியாவும் அதிகாரபூர்வமாகப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சியில் இருந்தன. மார்ச் மாதம், தென் கொரிய அதிகாரிகள் குழு ஒன்று வடகொரியாவுக்கு வந்து கிம் ஜோங் உன்னைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து, தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கிம் ஜோங் உன்னின் தங்கையான கிம் யோ ஜோங் தலைமையிலான வடகொரியா குழு பங்கேற்றது. அதன் பிறகு, இரு நாடுகளிடையே நிலவிவந்த பதற்றம் வெகுவாகத் தணிந்தது.

இப்போது, வட கொரியாவில் அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்துள்ளது. ஆனாலும், அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து நம்பிக்கைக்குரிய உத்தரவாதத்தைப் பெறும்வரை, அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடாது என்றே தெரிகிறது. மேலும், தென்கொரியாவில் உள்ள அமெரிக்கப்  படைகளை வாபஸ் பெற வேண்டும் என்பது வடகொரியாவின் கோரிக்கை. ஆனால், அதற்கு சாத்தியமில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமைதிக்கான இந்த முயற்சி எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்று ‘ஃபிரண்ட்லைன்’ இதழின் ஆசிரியர் ஆர்.விஜயசங்கரிடம் கேட்டோம்.

“இப்படியான ஒரு சூழல் உருவானதற்குப் பல காரணங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் மிகப்பெரிய சக்தியாக தென் கொரியா வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு எதிராகப் பெரிய அளவிலான போராட்டங்கள் அங்கு அடிக்கடி நடந்துவருகின்றன. இன்னொருபுறம், போரால் பிரிந்த தென் கொரியா மற்றும் வட கொரியா மக்கள் மத்தியில், நாம் ஒன்றுபட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வந்தவரான மூன் ஜே இன், இரு நாட்டு மக்களும் ஒன்றாகச் சேர வேண்டும், அமைதியும் வளர்ச்சியும் வேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்டவராக இருக்கிறார். இன்னொருபுறம், தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை அழிப்பதற்குத் தயார் என்ற அளவுக்கு வட கொரியா வந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் கிம் ஜோங் உன் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார் என்பதை அவரது நடவடிக்கைகள் உறுதிசெய்கின்றன. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், என்ன தான் பிற நாடுகளை மிரட்டிக் கொண்டிருந்தாலும், இன்றைய உலகமயச் சூழலில் சீனாவை அமெரிக்காவால் முற்றிலுமாகப் பகைத்துக்கொள்ள முடியாது. வட கொரியாவைத் தாக்கினால், சீனா வரும். மேலும், உலக அளவில் ஒவ்வொரு நாட்டையும் பொருளாதாரம் பிணைத்துவைத்துள்ளது. அமெரிக்காவும், சீனாவும்கூட பெருமளவில் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டுள்ளன. இதுபோன்ற சூழலில், போர் வருவதை எந்தவொரு நாடும், மக்களும் விரும்பவில்லை என்பதுதான் யதார்த்தம்” என்றார்.

கொரிய நாடுகளுக்குள் ஒற்றுமை நிலவினால், அது உலக அமைதிக்கும் வழிவகுக்கும்.

அமைதியை நோக்கி...

அகற்றப்பட்ட ஒலிபெருக்கி!

கொரியப் போருக்குப் பின் 1960-களில், வட கொரியாவின் எல்லைப் பகுதியில் பிரமாண்ட ஒலிபெருக்கிகளைத் தென் கொரியா நிறுவியது. எதிரி நாடான வட கொரியா மக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினரிடம் தங்களது கருத்துக்களைப் பரப்பும் நோக்கில் செய்தி அறிக்கைகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தென் கொரியா ஒலிபரப்பிவந்தது. அந்த ஒலிபெருக்கிகளைத் தென் கொரியா இப்போது அகற்றியுள்ளது.

மாறிய நேரம்!

2015-ம் ஆண்டு தென் கொரியாவின் நேரத்தைவிட 30 நிமிடங்கள் குறைவான நேரத்தைப் பின்பற்ற வடகொரியா முடிவுசெய்தது. அதனால், தென் கொரியா நேரத்தைவிட வட கொரியா  அரை மணி நேரம் பின்தங்கி இருந்தது. தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, மீண்டும் தென் கொரியாவின் நேரத்தை வடகொரியா பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

சமாதான கிராமம்!

தென் கொரியா -  வடகொரியா எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது பான்முன்ஜோம் கிராமம். இங்குதான் இரு அதிபர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த ‘சமாதான கிராமம்’, தென் கொரியா தலைநகர் சியோலிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலும், வடகொரியாவின் கேசியோங் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது. இரு நாடுகளையும் பிரிக்கும் இந்தக் கிராமமானது, ராணுவம் விலக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்தக் கிராமத்தின் ஒரு பகுதி தென்கொரியாவுக்கும், இன்னொரு பகுதி வடகொரியாவுக்கும் சொந்தம்.