Published:Updated:

ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி!

ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி!

ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி!

காவிரிப் பிரச்னை, நீட் தேர்வு சிக்கல், வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் போராட்டம் என உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், ‘ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்’ என முதல்வர் எடப்பாடி பழனி சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, பிரமாண்ட யாகசாலை பூஜைகளுடன் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். உலகத் தரத்தில் இதை ஓராண்டுக்குள் கட்டிமுடிப்பதாகத் திட்டம்.

36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. செலவு, 50 கோடியே 80 லட்சம் ரூபாய்.

ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி!

எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் உள்பக்கமாக ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் ஈரமண் உலர்வதற்கு முன்பாகவே, இந்த நினைவிடம் பற்றிய சர்ச்சை ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2016 டிசம்பர் 10-ம் தேதி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. ‘‘ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். அதன்பின் இந்த வளாகம் ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நினைவு மண்டபம்’ என அழைக்கப்படும்’’ என்று அறிவிப்பும் வெளியானது. 

அதை அரசியல் கட்சிகள் ஒருபக்கம் எதிர்க்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரிசையாக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ‘சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. மேலும், கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தின்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எந்தவிதக் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. இந்த விதிக்கு மாறாக, ஜெயலலிதா புதைக்கப்பட்ட இடத்தில் மணி மண்டபம் கட்டப் போவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட நபருக்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டுவது சட்ட விரோதமான செயலாகும். இதற்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோல், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைப்பதை எதிர்த்தும், மணி மண்டபம் கட்டுவதை எதிர்த்தும் பா.ம.க வழக்கறிஞர் கே.பாலு தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். தடா எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவும், டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவும் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்தான், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட பூமி பூஜை போட்டுள்ளனர்.

ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி!

2018 பிப்ரவரி 7-ம் தேதி இறுதிநாள் என அறிவித்து இதற்காக டெண்டர் விட்டபோது, ரூ.43.63 கோடி திட்ட மதிப்பீடு இருந்தது. ஆனால், மார்ச் 15-ம் தேதி பட்ஜெட்டில் இதை ரூ.50.80 கோடியாக உயர்த்தி அறிவித்தார் பன்னீர்செல்வம். இப்போது இதற்கு ‘ஜெயலலிதா நினைவு மண்டபம்’ என்று மட்டும் பெயர் வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர் காணாமல் போய்விட்டார்.

வழக்கம் போல இந்தக் கட்டுமான டெண்டரையும் முதல்வருக்கு நெருக்கமான நிறுவனத்துக்கே குஷியாகக் கொடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த இவர்கள், முதல்வரின் சம்பந்திக்குத் தொழில் முறையில் நெருக்கமானவர்களாம்.  

- ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர்
அட்டை மற்றும் படங்கள்: கே.ஜெரோம்

“வீழமாட்டோம் தமிழர்!”

ஜெ
யலலிதாவின் நினைவிடம் நேராகப் பார்ப்பதற்கு பீனிக்ஸ் பறவை போன்றும், கழுகுப் பார்வையில் பார்க்க இரட்டை இலை சின்னம் போன்றும் காட்சியளிக்கிறது. ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வாயிலை இரட்டை இலை போல வடிவமைத்துவிட்டு ‘பறக்கும் குதிரை’ என்றார்கள். அதுபோல இதுவும் சர்ச்சையாகியுள்ளது.

ஜெ. நினைவிடத்தை வடிவமைத்த பிரபல ஆர்க்கிடெக்ட் முரளியிடம் பேசினோம். ‘‘ஜெயலலிதா நினைவிட வடிவமைப்பில் இந்திய அளவில் பல நிறுவனங்கள் பங்கெடுத்தன. எட்டு நிறுவனங்கள் இறுதிச்சுற்றுக்கு வந்தன. சி.எம்.டி.ஏ தலைமை திட்ட அதிகாரி, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், அண்ணா பல்கலைக்கழக கட்டட வடிவமைப்புத் துறைத் தலைவர் உள்ளிட்ட குழுவே இந்த நிறுவனங்களின் மாடல்களை ஆய்வு செய்தது. அதன்பிறகு ஒவ்வொருவரிடமும் வீடியோவாகவும் மாடல்களைக் கேட்டார்கள். திருத்தங்களைச் செய்யச் சொன்னார்கள். நாங்களும் செய்து கொடுத்தோம். நாங்களே திராவிட பாரம்பர்யம், ஜெயலலிதாவின் ஆளுமை, மகுடம் சூடிய தலைவி எனப் பல கான்செப்ட்களில் ஆறு வடிவமைப்புகளை அளித்தோம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் கொண்ட குழு இதை ஆய்வுசெய்து, இந்த பீனிக்ஸ் மாடலை இறுதி செய்துள்ளார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பே இது இறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த மாடலில் ஒரு நினைவிடம் அமைவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. பார்ப்பதற்கு பீனிக்ஸ் பறவை போல் இருந்தாலும், ‘தமிழர்கள் ஒருபோதும் வீழமாட்டோம்’ என்கிற கான்செப்ட் இதில் பொதிந்துள்ளது. மெரினாவில் எந்த நினைவிடத்திலும் மக்கள் ஓய்வெடுக்க இடம் இல்லை. இது ஓய்வெடுக்க வசதியாகவும், கண்காட்சிகள் நடத்துவதற்குப் பொருத்தமாகவும் இருக்கும்’’ என்கிறார் முரளி.