Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

‘‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தினகரன் தொடங்கியதை நாங்கள் ஏற்கவில்லை’’ என்கிறாரே திவாகரன்?


‘‘திவாகரனை நான் ஏற்கவில்லை’’ என்று தினகரன் சொல்லிவிட்டார். இவர்கள் இருவரையும் எடப்பாடியும் பன்னீரும் ஏற்றுக்கொள்கிறார்களா என்று தெரியவில்லை. இவர்கள் நால்வரையும் அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், இந்த நால்வரும் தங்களை ஜெயலலிதாவாக நினைத்துக் கொள்கிறார்கள்!

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

தன்னை எறும்பு என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு, ‘‘நான் எறும்புதான். யானையின் காதில் புகுந்தால் என்னவாகும்?’’ என்று கேட்டிருக்கிறாரே கமல்?

அமைச்சர் ஜெயக்குமாருக்கு இதைவிட பெரிய பாராட்டு என்ன இருக்க முடியும்? அவரை ‘யானை’ என்று சொல்லிவிட்டாரே கமல்!

லட்சுமி காந்தம், வேலூர் (நாமக்கல்).


தேர்தல் வருவதற்கான அறிகுறி தெரிகிறதா?


எந்தத் தேர்தல் என்று நீங்கள் கேட்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் வர வேண்டும். ஒருவேளை முன்கூட்டியே நடத்த மோடி நினைத்தால், அடுத்த ஆண்டு ஜனவரியில் வரலாம். நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலும் ஒருவேளை வரலாம். கர்நாடகா தேர்தல் முடிவு, ரஜினியின் தெளிவான முடிவு ஆகிய இரண்டையும் வைத்துத்தான் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிகுறிகள் தெளிவாகும்!

பி.ஸ்ரீதர்ஷினி, பாபநாசம்.


‘‘தினகரனிடம் சசிகலா ஏமாந்திருக்கலாம். ஆனால், நான் ஏமாற மாட்டேன்’’ என்கிறாரே திவாகரன்?

அந்தக் குடும்பத்தில் ஏமாற்றுவதும் ஏமாறுவதும் சகஜம் போலும்!

காந்திலெனின், திருச்சி.


தினகரன் - திவாகரன் மோதலின் பின்னணி என்ன?


பதவியும் பணமும்தான். தன் மகனுக்குப் பதவி கேட்கிறார் திவாகரன்; தரமறுக்கிறார் தினகரன். சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பு விவேக் வசம் உள்ளது. கட்சியைப் போலவே அதையும் கைப்பற்ற நினைக்கிறார் தினகரன்.
இந்த மோதல்தான் இப்போது நடக்கிறது.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.


‘‘மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிப் பார்ப்பதே வாடிக்கையாகிவிட்டது’’ என்று துரைமுருகன் ஆதங்கப்பட்டிருக்கிறாரே?

துரைமுருகனின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும். கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் கட்சியையும் காய்ச்சி எடுத்துள்ளாரே!

கழுகார் பதில்கள்!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

பிஜே.பி-க்கு எதிரான மம்தாவின் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் ஆதரவு தந்தது பற்றி?


மூன்றாவது அணி என்ற வார்த்தையை மம்தா எங்கும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ‘‘பி.ஜே.பி-க்கு எதிரான அணி’’ என்றுதான் அவர் சொல்லி வருகிறார். அதை முன்னிட்டுத்தான், அனைத்துத் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். பழைய பகையை மறந்து சோனியாவையும் சந்தித்தார். காங்கிரஸையும் உள்ளடக்கியதாகத்தான் அவரது அணி இருக்கிறது. காங்கிரஸை உள்ளடக்கிய அணியை மூன்றாவது அணியாகச் சொல்ல முடியாது.

ஆனாலும், ‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சி வலிமையானதாக உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமூல், கர்நாடகாவில் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழ்நாட்டில் தி.மு.க என்று இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் அந்தந்தக் கட்சிகள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் தலைமை என்று சொல்வது சரியானதா?’’ என்ற மம்தாவின் கேள்விதான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதனால்தான், அவரது கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா இருக்காதா என்ற கேள்வியை எழுப்பியது. மம்தாவை ஆதரித்து ஸ்டாலின் கருத்துச் சொன்னதால், ‘ஸ்டாலினும் காங்கிரஸை வேண்டாம் என்று நினைக்கிறாரோ’ என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

‘‘பிஜே.பி-க்கு எதிரான கட்சிகளின் கூட்டணி’’ என்றுதான் ஸ்டாலின் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

 சம்பத்குமாரி, பொன்மலை.


‘‘கமலைப் பின்னால் இருந்து இயக்குவது தி.மு.க-வாகக் கூட இருக்கலாம்” என்கிறாரே விஜயகாந்த்?


அங்கேயும் ‘இயக்குவது’தானா? தூண்டிவிடுவது இல்லையா? நாட்டு மக்களுக்கு இதுபோன்ற ரகசியங்களைச் சொல்ல நீங்கள் பழைய பன்னீர்செல்வமாக வரணும் கேப்டன்!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

அரசியல்வாதிகள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்களா?


மக்கள் ஏன் முட்டாள் ஆகிறார்கள்?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்

மோடியை எதிர்க்கும் சர்வ வல்லமை படைத்த எதிர்க்கட்சி பிரதம வேட்பாளராக யாராவது கண்ணுக்குத் தெரிகிறார்களா?

பி.ஜே.பி-க்கு உள்ளேயே சிலர் தெரிவதாக டெல்லியில் சில கலகக்காரர்கள் சொல்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

அன்றைய கல்லூரி, பள்ளிக்கூட மாணவர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட மு.வ என்கிற மு.வரதராசனார் நூல்கள் இன்று எப்படி?


 மூவாத் தமிழ் என்பார்கள். அதாவது, மூப்பே அடையாத இளமைத் தமிழை எழுதியவர்    மு.வரதராசனார். தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு என்று அவர் எழுதிய கடித இலக்கியக் கட்டுரைகளின் நடை இன்றும் இனிமையானவை. கள்ளோ காவியமோ, அகல்விளக்கு, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள் போன்ற நாவல்களின் கதைக்களம் இன்றும் கவனிக்கத்தக்கது. இன்றைய நாவல் மொழி மாறுபட்டுவிட்டாலும் அவரது அறவியல் நோக்கம் இன்னமும் பின்பற்றத்தக்கதே.

பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியராக இருந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உயர்ந்தவர் அவர். கோடிகள் புரளும் பதவியாக அது இன்று மாறிவிட்டது. தனது தமிழ்த்தகுதியால் மட்டுமே அந்த இடத்தைப் பெற்ற மு.வ., ஏழை எளிய மாணவர்களுக்குத் தனது சொந்தப் பணத்தில் கல்விக் கட்டணத்தை (யாருக்கும் தெரியாத வண்ணம்) செலுத்தியவர். அறத்தைப் படித்தவர்; அறத்தைக் கற்பித்தவர்; அறத்தின்படி வாழ்ந்தவர். அவரது நூல்கள் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையே படிக்கத்தக்கது.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

? ‘‘11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே? 


அவர் மகிழ்ச்சி அடையும் விஷயங்கள் மட்டுமே நடக்கின்றன.

நடிகர் தம்பி ராமையா

கழுகார் பதில்கள்!

இனி, மனிதனின் ஆயுள் 300 ஆண்டுகள் என்று சொன்னால், மனிதன் என்னவெல்லாம் சாதனை செய்வான்? உலகம் எப்படி மாறும்?

மனிதனின் வயது கூடக்கூட மூளையில் நிகழும் கலகங்களின் எண்ணிக்கை குறையும் என்பார்கள். அதாவது, கெட்ட எண்ணங்கள் குறைந்து நல்லெண்ணங்கள் அதிகமாகுமாம். அதனால், மனிதனின் ஆயுள் கூடுவது அந்த மனிதனுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது. ‘‘ஆயுள் கூடுவதும் குறைவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது’’ என்கிறார்கள் சித்தர்கள். ஒரு நிமிடத்துக்கு எத்தனை தடவை சுவாசிக்கிறீர்கள் என்பதை வைத்து ஆயுளைக் கணித்தார்கள் சித்தர்கள். ‘உள்ளிழுக்கும் மூச்சை அடக்கி வைத்திருந்து மெல்ல விடுவதன் மூலமாக ஆயுளை அதிகப்படுத்த முடியும்’ என்றார்கள். ஆனால், மனிதன் நினைப்பது போல இயற்கை நினைப்பதில்லை.

‘125 ஆண்டுகள் வாழ்வேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தவர் காந்தி. அதற்கான நெறிமுறைகளுடன்தான் காந்தி வாழ்ந்தார். அவரை 78 வயதில் கொன்றுவிட்டார்கள். தன் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் 45 வயதுக்குள் இறந்து போய்விட்டதால் தனக்கும் அப்படி நேர்ந்துவிடுமோ என்று பயந்த பெரியார், 95 வயது வரைக்கும் வாழ்ந்தார். நாத்திகம் பேசிய பெரியாரும் ஆத்திகம் பேசிய ராஜாஜியும் 95 வயதைத் தொட்டார்கள். இருவரது உணவுப்பழக்கமும் வேறு வேறு. எனவே, எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது சாதனை கிடையாது; என்ன செய்தோம் என்பதே சாதனை!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!