Published:Updated:

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

ழுகார் நுழைந்ததும், ‘‘அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா?” என்ற கேள்வியை மையமாகக்் கேட்டு வைத்தோம். நாம் எதைக் கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டவராக, ‘‘ஓ! அதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். எதை வைத்து என்று கேட்பதற்குள், கழுகாரே தொடங்கிவிட்டார்.

‘‘சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் ஸ்டாலினும் ராமதாஸும் ஒரே மேடையில் உட்கார்ந்து

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

இருந்ததை வைத்துத்தான் அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா என்று கேட்கிறீரா? கூட்டணிகள் மாறுகின்றனவா, கூட்டணிகள் சேர்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும். ‘இந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு’ என்ற பெயரில், சென்னை வேலப்பன்சாவடியில் வணிகர் சங்கப் பேர மைப்பின் 35-வது வணிகர்தின மாநில மாநாடு நடந்தது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர், அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.  இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துக் கட்சித் தலைவர் களையும் அவர் அழைத்திருந்தார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள்  கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். அதாவது, ராமதாஸ், ஜி.கே.வாசன், கமல்ஹாசன் ஆகியோரைத் தவிர, மற்ற அனைவரும் தி.மு.க கூட்டணியினர்தான்.”

‘‘இந்த மாநாட்டில் பங்கேற்க ராமதாஸ் எப்படி ஒப்புக்கொண்டார்?”

‘‘அதுதான் பெரும் அரசியலாகப் பார்க்கப் படுகிறது. பொதுவாகவே, தி.மு.க-வும் பா.ம.க-வும் எலியும் பூனையுமாக இருக்கும் கட்சிகள். கருணா நிதியை ராமதாஸும், ஸ்டாலினை அன்புமணியும் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். சமீபத்தில்கூட, காவிரிப் பிரச்னையில் மோதல் ஏற்பட்டது. ராமதாஸுக்கு துரைமுருகன் பதில் சொன்னார். லோக் ஆயுக்தா பற்றி ஸ்டாலின் பேசியதை ராமதாஸ் கிண்டலடித்தார். இந்தக் கோபத்துக்குக் காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க-வும் அதிக நெருக்கமாக இருப்பதுதான். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தீர்ப்பு குறித்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க கலந்து கொண்டதையும், பா.ம.க வெறுப்புடன் கவனித்தது. ஆனால்...”

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

‘‘என்ன ஆனால்..?”

‘‘சமீபகாலமாக தி.மு.க-வைப் பா.ம.க கனிவாகப் பார்க்க ஆரம்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல்தான் இதற்குக் காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., தே.மு.தி.க., ம.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் இணைந்து பா.ம.க போட்டியிட்டது. அன்புமணி மட்டும் ஓர் இடத்தில் வென்றார்.  வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவுகள் எடுப்பது என இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டது பா.ம.க.”

‘‘அவர்களுக்கு பி.ஜே.பி வலைவீசியிருப்பதாகச் சொன்னார்களே?”

‘‘பி.ஜே.பி. தரப்பு அதிகமாக நம்புவது ரஜினியைத்தான். ரஜினி இருக்கும் கூட்டணிக்கு பா.ம.க போகாது. அதனால்தான், தி.மு.க பக்கமாக பா.ம.க-வின் பார்வை திரும்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும் அன்புமணியும் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், வணிகர் சங்க மாநாட்டில் ஸ்டாலினும் ராமதாஸும் ஒரே மேடைக்கு வந்தனர். இந்த மாநாட்டில், அரசியல் ரீதியாக இருவரும் எந்த சமிக்ஞையும் காட்டவில்லை என்றாலும், இருவரும் ஒன்றாக உட்கார்ந்து இருந்ததே பெரிய சிக்னலாகத்தான் தெரிகிறது.”

‘‘இதுபற்றி பா.ம.க வட்டாரத்தில் விசாரித்தீரா?”

‘‘தி.மு.க-வுக்கு நெருங்கி வராதது மாதிரிதான் அவர்கள் சொல்கிறார்கள். ‘தி.மு.க-தான் இதுபோன்ற செய்திகளைப் பரப்புகிறது. நாங்கள் அவர்களுடன் சேர மாட்டோம். ராமதாஸுக்கு அந்த யோசனையே இல்லை’ என்று சொல்கிறார்கள்.”

‘‘இவை தெரிந்துதான் திருமாவளவன் தனியாகச் சென்று ராகுல்காந்தியைச் சந்தித்தாரா?”

‘‘ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் திருமாவளவன் இருக்க மாட்டாரா என்ன? இருவரும் ஒரே அணியில் இருந்தவர்கள்தானே? ஒருவேளை இருவரும் சேர்ந்தே தி.மு.க அணியில் இருக்கலாம் அல்லவா?”

‘‘நீரே... ‘ஒருவேளை’ என்றுதான் சொல்கிறீரே?”

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

‘‘இந்த சர்ச்சைக்கு வேறுமாதிரி விளக்கம் கொடுத்துள்ளார் திருமாவளவன். திருச்சி ரோஷன் மஹாலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு மே 5-ம் தேதி நடந்தது. அதில் பேசிய தி.மு.க வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், ‘தனி ஆளாக நின்று வெற்றி பெற்ற தலைவர்கள்கூட மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.”

‘‘திருமாவளவன் மத்திய அமைச்சர் ஆவார் என்கிறாரா?”

‘‘அந்தக் கூட்டத்தில் இறுதியாக மைக் பிடித்த திருமாவளவன், ‘மோடியை நாம் எதிர்ப்பது, அவர் பி.ஜே.பி என்பதற்காக அல்ல. அவர் கோட்பாடு தவறானது. கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில், மக்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், மத்திய அரசைக் கடுமையாக எதிர்க்கிறோம். மேலும், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்கிற நோக்கில் கைகோத்து நிற்கிறோம். தமிழ்நாட்டில் காலூன்ற பி.ஜே.பி துடிக்கிறது. அதற்குத் தடையாக இருக்கும் தி.மு.க ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது எனத் தடுக்கிறது. தி.மு.க-வை அழித்துவிடத் துடிக்கிறது. தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது சமூகநீதிக்கு ஏற்படும் பாதிப்பு. அப்படி நாம் விட்டுவிட முடியாது. அதையொட்டிதான், எந்த நிபந்தனை இல்லாமல் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இயக்கங்களுடன் கைகோத்து நிற்கிறோம். அரசியல்வாதிகள், நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பேரம் பேசுவார்கள். ஆனால், திருமா பேரம் பேசுபவன் இல்லை” என்றார்.”

‘‘ராகுல் காந்தியைச் சந்தித்தது ஏன் என்று அந்தக் கூட்டத்தில் விளக்கம் சொன்னாரா திருமா?”

‘‘அந்தக் கூட்டத்தில் பேசிய திருமா, ‘ராகுல் காந்தியை நான் சந்தித்தது குறித்து, தி.மு.க.வுக்கு திருமா நெருக்கடிக் கொடுக்கிறார் என அவதூறு செய்தி பரப்பப் படுகிறது. தி.மு.க தலைமையிலான அணி வலுவாக இருக்கக்கூடாது எனச் சிலர் நினைக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் பிரிய மாட்டோம். 2019 தேர்தலில் ஓரணியில் நின்று மதவாதத்தை முறியடிப்போம்: என்றார்.’’

‘‘இந்த நிலையில், காமராஜர் விருதை திருநாவுக்கரசருக்கு திருமாவளவன் அறிவித்துள்ளார். அதைப் பார்த்தால், தனி ஆவர்த்தனம் போலத் தெரிகிறதே?”

‘‘திருநாவுக்கரசரைப் பொறுத்தளவில், தி.மு.க-வைவிட தினகரன் பெட்டர் சாய்ஸ் என நினைக்கிறாராம். அதனால், அரசியல் லாபங்கள் அதிகம் என்றும் திருநாவுக்கரசர் நினைக்கிறாராம்.  காங்கிரஸ் கூட்டணிக்கு தினகரன் எடுக்கும் முயற்சிகள் குறித்து முன்பே நான் சொல்லியிருந்தேன். அப்படிப் போனால், திருமாவளவனையும் அழைத்துச் செல்வது என்பது திருநாவுக்கரசரின் திட்டமாம். ஆனால், திருமாவளவன் கடைசிவரை தி.மு.க கூட்டணியில் இருப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார்கள். மனவருத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலை வந்தால், காங்கிரஸ் - தினகரன் எனப் பார்வைகள் மாறலாம். காங்கிரஸ் அந்தப் பக்கமாகப் போனால், ஜி.கே.வாசன் உடனே தி.மு.க பக்கமாக வரலாம். ஜி.கே.வாசனும் அன்புமணியும் சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.”

‘‘அப்படியா?”

‘‘ஈரோட்டில் உயர் மின்கோபுர மின் தடுப்பு இயக்கத்தின் சார்பில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. திருவண்ணாமலை தொடங்கி திருச்சி வரை, உயர் மின்கோபுரங்கள் விவசாய நிலங்களுக்குள் அமைக்கப்படுகின்றன. இதற்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களை த.மா.கா-வின் யுவராஜும், தி.மு.க-வின் சுப்புலட்சுமி ஜெகதீசனும் ஒருங்கிணைத்து வருகிறார்கள். இந்த விவசாய சங்கத்தினர் சென்னை வந்து ஸ்டாலின், அன்புமணி,   ஜி.கே.வாசன் ஆகியோரைச் சந்தித்தனர். ‘எந்தெந்தக் கட்சியினர் வருகிறார்கள்’ என ஸ்டாலின் கேட்க, தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் பா.ம.க பெயரையும் சொல்லியுள்ளனர். அதை அவரும் ஏற்றுக்கொண்டாராம். மே 6-ம் தேதி, ஈரோட்டில் யுவராஜுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் விவாயிகள் மாநாடு நடந்துள்ளது. தி.மு.க சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசன், கூட்டணிக்கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பா.ம.க சார்பில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வந்துள்ளார். இதுவும் எதிர்காலக் கூட்டணிக்கான சிக்னலாகத்தான் தெரிகிறது.”

‘‘திடீரென ரஜினியைச் சந்தித்துள்ளாரே கராத்தே தியாகராஜன்?”

‘‘ஒரு காலத்தில் கராத்தே தியாகராஜன், வெற்றிவேல், ராயபுரம் மனோ ஆகியோர் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். ‘நட்புரீதியான சந்திப்பு’ என்று கராத்தே சொன்னாலும், அரசியல்ரீதியாகவே பேசினார்களாம். சிலர் தன் கட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பேசிவருகிறார் ரஜினி. அந்தச் சிலரில் ஒருவர்தான் கராத்தே என்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு அதிருப்தி கோஷ்டி அதிகமாகிவருகிறது. அதில் கராத்தேவும் ஒருவர். ஏற்கெனவே ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவருக்கும் அரசருக்கும் மோதல் இருந்தது. இப்போது தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோரும் முரண்பட ஆரம்பித்து உள்ளார்களாம். திருநாவுக்கரசுவின் செயல் பாடுகள்மீது அதிருப்தியுடன் கராத்தே பேசிவந்த நிலையில், ரஜினியுடன் சந்திப்பு நடந்துள்ளது.”

‘‘ரஜினியின் சந்திப்புகள் தொடர்கின்றனவா?”

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

‘‘அடுத்து இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனும் ரஜினியைச் சந்திக்க உள்ளார். அவருடன் தலித் அமைப்புகளின் சில தலைவர்களும் சந்திக்கப் போகிறார்களாம்.’’

‘‘தேவேந்திரகுல வேளாளர்களை தாழ்த்தப் பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்று ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி கூறியிருக்கிறாரே?’’

‘‘விருதுநகர், பட்டணம்புதூரில் புதிய தமிழகம் கட்சியின் 10-வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில், ‘எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு முழுக்க முழுக்க பி.ஜே.பி-யினரின் செலவு என்றே கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பி.ஜே.பி சார்புள்ள லோட்டஸ் தொலைக்காட்சி, மாநாட்டு நிகழ்வுகளை ‘லைவ்’ செய்தது. கிருஷ்ணசாமி முழுக்க முழுக்க தி.மு.க-வையே வசைபாடினார். அவரின் மகன் ஷியாம், ‘கோயில் கருவறைக்கு நுழைவதைவிட கோட் டைக்குள் நுழைவதில்தான் நம் போராட்டம் இருக்கவேண்டும். உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டில் தேவேந்திரகுல வேளாளர்களுக்குத் தான் முன்னுரிமை. இன்னும் திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சியை நம்பவேண்டாம்’ என்றார். கிருஷ்ணசாமி பேசுகையில், ‘நமக்கு அரசு சலுகைகளைவிட சுயமரியாதைதான் முக்கியம். எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேறி னால் எதையும் நாம் இழக்கப்போவதில்லை. மாறாகப் பலவற்றைப் பெறுவோம். நான்கு ஆண்டுகளுக்கு முன் அமித் ஷா இதே கருத்தைச் சொன்னார். மற்றபடி பி.ஜே.பி-க்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் ஐந்து மாதங்கள் ‘டைம்’ தருகிறோம். அதற்குள் எங்கள் இனத்தை எஸ்.சி பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள். இல்லை யென்றால், அக்டோபர் 6-ம் தேதி பெரும் போராட்டம் வெடிக்கும்’ என்றார்’’ என சொல்லிமுடித்த கழுகார் பறந்தார்.

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், தே.தீட்ஷித்

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

* ‘துணை’யின் பால்யகால நண்பர், அந்த தேனிக்காரர். ஆரம்ப காலத்தில் ஓரிரு பஸ் ரூட்களை வைத்திருந்தாராம். இப்போது, 50 பஸ்களுக்கு மேல் ஓடுகின்றன. சந்தடியில்லாமல், கடலில் கற்களைக் கொட்டும் வித்தியாசமான கான்ட்ராக்டில் ஈரோடு கம்பெனியுடன் கூட்டு சேர்ந்தபிறகு அவரது காட்டில் ‘பண’ மழை கொட்டியதாம்.

* கோவை அ.தி.மு.க-வில் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ராவணனை ஜெயலலிதா தட்டி வைத்தார். அடங்கி ஒடுங்கிக் கிடந்த இவரை ‘மணி’யான அமைச்சர் பிரெய்ன் வாஷ் செய்ய, இப்போது தினகரன் எதிர்ப்பு அணியில் திவாகரனுடன் ஐக்கியமாகிவிட்டார். பழைய பகையை மூட்டைகட்டி வைத்துவிட்டு ராவணன் கைகுலுக்கியபிறகுதான், புதுத் தெம்புடன் அம்மா அணியை திவாகரன் துவக்கினாராம்.
 
* மத்திய அரசின் உளவுப்பிரிவினர் இரண்டு புதிய இன்வெஸ்ட்மென்ட்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஒன்று, ‘பவ்ய’த்தின் ஏ டு இஸட் பணம் முழுக்க பிரபல செயின் ஹோட்டல் நிர்வாகத்தில் முதலீடு ஆன மேட்டர். இரண்டாவது... கோவை ஏரியாவில் பிரபல டாக்டர்கள் கூட்டாக ஆரம்பித்த மருத்துவமனையின் பல கோடி ரூபாய் கடனை அடைத்து, ‘ராயலாக’ தனதாக்கிக்கொண்ட ‘மாங்கனி’ சாமி விவகாரம்.

* தமிழக வனத்துறையின் முக்கிய அதிகாரிகள் 40 பேர் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், கோவை வட்ட வனப் பாதுகாவலராக திருநாவுக்கரசு என்பவரைப் போட்டிருந்தனர். பிரபல சாமியாரிடமிருந்து பிரஷர் வந்ததால், அவர் ‘ஆசைப்பட்ட’படி திருநாவுக்கரசை திண்டுக்கல் பக்கம் மாற்றிவிட்டனர்.

*  நீட் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவந்த நிலையில், ‘‘இதனால் கெட்டபெயர் வரும்’’ என உயர் அதிகாரி ஒருவர் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றாராம். அமைதியாகக் கேட்டுக்கொண்ட முதல்வர், ‘‘அப்டியா... அப்டியா... பாத்துக்கலாம்... பாத்துக்கலாம்’’ என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தாராம். இவ்வளவுதான் ஆக்‌ஷன், நோ ரியாக்‌ஷன்.