Published:Updated:

திருட்டு விளையாடல்!

திருட்டு விளையாடல்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருட்டு விளையாடல்!

ப.திருமாவேலன்

‘நரேந்திர மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதா’ என்பது சிலரது கேள்வி. எல்லாமே தவறாக இருந்தால், எதிர்க்காமல் என்ன செய்வது? பக்கத்து மாநிலத்தி லிருந்து வரவேண்டிய காவிரியின் கழுத்தை நெறிப்பதும், நீட் தேர்வு எழுதுவதற்காக தூரத்து மாநிலங்களுக்குத் தமிழக மாணவர்களைத் தூக்கியெறிவதுமான இரண்டு நிகழ்வுகளுக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் என்ன வியாக்கியானம் வைத்திருக்கிறார்?

‘கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான் அடக்கி வாசிக்கிறார்கள்’ என்று குற்றச்சாட்டு வந்தபோதெல்லாம், ‘கர்நாடகா தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்று சொல்லி வந்தார்கள். இதோ மத்திய அரசின் வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத்தில் மே 3-ம் தேதி ஒப்புக்கொண்டு விட்டார். ‘‘கர்நாடகாவில் தேர்தல் நடை பெறுவதால் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அங்கு உள்ளனர். எனவே, இந்த வழக்கு விசார ணையை 10 நாள்கள் தள்ளிவைக்க வேண்டும்’ என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் சொன்னார். அவர்களுக்குக் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிப்பது முக்கியமாக இருக்கலாம்; தமிழ்நாட்டு விவசாயத்துக்கும் வாழ்வா தாரத்துக்கும் மூச்சைப் பிடித்து இழுத்து விடுவது முக்கியம் அல்லவா?

திருட்டு விளையாடல்!

2018 பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது. அன்றிலிருந்தே பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கர்நாடகாவில் இருக்கிறார்களா? இல்லையே. இன்னொரு மெகா பொய்யும் மத்திய அரசின் சார்பில் சொல்லப் பட்டுள்ளது. ‘வரைவு செயல்திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும். பிரதமரும் அமைச்சர்களும் இல்லா ததால் அது கூடவில்லை’ என்பதும் இவர்களின் வாதங்களில் ஒன்று. மே 3-ம் தேதிக்குள் வரைவுத் திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்திருந்தது அல்லவா? அதற்கு முந்தின நாளான மே 2 அன்று மத்திய அமைச்சரவை கூடியிருக்கிறது. பிரதமரின் முதியோர் வந்தன திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் முதலீட்டு வரம்பை ரூ.7.5 லட்சத்திலி ருந்து ரூ.15 லட்சம் என இரு மடங்காக உயர்த்து வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றும், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது என்றும் மத்திய தகவல் துறையே செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூடவில்லை என்ற பொய்யை உச்ச நீதிமன்றத்துக்கே சொல்லலாமா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

‘‘நானே மனதால் கன்னடர். பசவண்ணா, விஸ்வேஸ்வரய்யா வாழ்ந்த கர்நாடக மண்ணில் கால் வைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன். கன்னடர்கள் என் சகோதரர்கள்’’ என்று திருவாய் மலர்ந்திருப்பவர் மோடிதான். ‘I am a Kannadiga too’ என்று சித்தராமையாவோ, எடியூரப்பாவோ, தேவகவுடாவோ, வாட்டாள் நாகராஜோ வாழலாம். ‘இந்தியப்’ பிரதமர் இப்படிச் சொல்லலாமா? மோடி தன்னைக் கன்னடராக உணர்வது பற்றி தமிழர்களுக்கு எந்தக் கசப்பும் இல்லை. கவலைப்பட வேண்டியவர்கள் குஜராத்திகள். ஆனால், இந்த உள்நோக்கச் செயல்பாடுகள் தமிழ கத்தைப் பாதிப்பதுதான் பதற்றத்தை உருவாக்கு கிறது.

திருட்டு விளையாடல்!

இதேபோல் பெல்லாரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘‘பி.ஜே.பி எப்போதும் பெண்களுக்கு உரிய மதிப்பைக் கொடுத்திருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவரைத்தான் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்துள்ளேன்” என்று பேசியது சர்ச்சையானது. இதை சமூக வலைத்தளங்களில் கன்னடர்கள் கிழித்துத் தொங்கவிட்டார்கள். ‘‘தமிழரான நிர்மலா சீதாராமன், ஆந்திராவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டார். கர்நாடகா விலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவருக்கு இங்கு எம்.பி பதவி தரக்கூடாது என அப்போதே எதிர்த்தோம். இதுகூட பிரதம ருக்குத் தெரியாதா?’’ என்கிறார்கள் கன்னடர்கள். இங்கு யாரையாவது ‘தமிழனா, தமிழனில்லையா’ என்று பேசும்போது, ‘தேச விரோதி’ என்று பட்டம் சூட்டுபவர்கள், அவர்களுக்கு லாபம் வேண்டுமானால் எந்த அசிங்கத்தையும் பூசிக்கொள்வார்களா?

திருட்டு விளையாடல்!

கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் சித்தராமையா வைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் மோடி. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம்கடந்த சித்தராமையாவின் வாதங்களைத்தான் உச்ச நீதிமன்றத்தில் வைக்கிறார்கள். ஏப்ரல் 26-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ‘‘காவிரி திட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பதிலாக நான்கு மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர்களை நியமித்தால் போதும்’’ என ஆலோசனை கூறியுள்ளார். நான்கு மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களைக் கொண்ட குழுவாக இருந்தால், அது ‘அரசியல் கிளப்’ ஆகத்தான் இருக்கும். நான்கு மாநிலங்களிலும் ஆட்சிகள் மாற மாற அமைச்சர்கள் மாறுவார்கள். எல்லா அமைச்சர்களுக்கும் இந்தப் பிரச்னை புரியாது. செல்லூர் ராஜு போல யாரிடமாவது காவிரி சிக்கிக் கொண்டால் தெர்மாகோல் கதிதான். எனவே, சித்தராமையா சொல்வது இப்பிரச்னையை நீர்த்துப் போகச் செய்வதற்கான வழி. அதற்குத் தான் அதை அவர் சொல்கிறார்.

இந்தக் கடிதத்தை மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துவந்து காட்டியிருக்கிறார். ‘‘இப்படி ஒரு கடிதத்தைக் கர்நாடக முதல்வர் எழுதியிருக்கிறார். இதுபற்றியும் பரிசீலிக்க வேண்டியுள்ளது’’ என்கிறார் வேணுகோபால். அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘நீங்கள்தான் வரைவு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். மாநில அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது’’ என்று சொல்லி யிருக்கிறார். இப்படி காவிரி பிரச்னையில் சித்தராமையாவின் பாதையில் செல்லும் மோடிதான், கர்நாடகாவில் அவரை விமர்சித்தும் பேசி வருகிறார்.

திருட்டு விளையாடல்!

காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்கு முறையாற்று ஆணையம், வரைவு செயல்திட்டம், ஸ்கீம் - என்ற வார்த்தை விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதந்தோறும் வழங்கவேண்டிய தண்ணீரைக் கர்நாடக அரசு வழங்குகிறதா’ என்றால், அதுவும் இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 1.1 டி.எம்.சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு இல்லையா? ஏப்ரல், மே மாதங்களில் குறைவான அளவையே தராதவர்கள், ஜூன், ஜூலையில் அதிகமான அளவை எப்படிக் கொடுப்பார்கள்? ‘‘தண்ணீர் இருந்தால்தானே தரமுடியும்?’’ என்கிறார் சித்தராமையா. ‘‘ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது’’ என்கிறார் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல். சட்டத்தின் ஆட்சியை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றத்தை இதைவிட யாரும் உதாசீனப்படுத்த முடியாது.

‘‘4 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட முடியுமா?” என்று நீதிபதி கேட்கிறார். கர்நாடக வழக்கறிஞர் மறுக்கிறார்.

‘‘2 டி.எம்.சி தண்ணீராவது திறந்துவிட முடியுமா?” என்று கேட்கிறார். கர்நாடக வழக்கறிஞர் மறுக்கிறார்.

‘‘உங்களால் எவ்வளவு தண்ணீர்தான் திறந்து விட முடியும்?” என்று நீதிபதி கேட்கிறார். கர்நாடக வழக்கறிஞர் பதில் சொல்லவில்லை.

இதைப் படிக்கும் உங்களுக்கு ‘திருவிளையாடல்’ படத்தின் காட்சிகள் நினைவுக்கு வரும். ‘பிழைகள் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக்கொடுங்களேன்’ என்பான் தருமி. ஆனால், மத்திய அரசும்  கர்நாடக அரசும் நடத்துவது திருவிளையாடல் அல்ல. திருட்டு விளையாடல், தருமி, அப்பாவி. இவர்கள் அப்பாவிகள் அல்ல.

‘காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்’ என்று 2016-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 19 மாதங்களாக இழுத்தடித்து வந்திருக்கிறது மோடியின் அரசு. “காங்கிரஸ் அரசு 60 ஆண்டுகள் செய்யாததை 60 மாதங்களில் செய்வேன்” என்று ஆட்சியைப் பிடித்தவர் அவர். நான்கு வாரங்களில் செய்ய வேண்டியதை 19 மாதங்களாகச் செய்யாமல் இருப்பவர். மனதளவில் கன்னடராக அல்ல, இந்தியராக உணர்ந்தால்தான் இதற்குத் தீர்வு காணமுடியும்.