Published:Updated:

அ.தி.மு.க எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்

அ.தி.மு.க எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்
அ.தி.மு.க எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்

மதுரை: மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசன் மீது மதுரை மேற்கு ஒன்றியத்தின் துணைத் தலைவர் கலைவேணி உள்பட 5 பெண் கவுன்சிலர்கள் முதல்வருக்கும், கலெக்டருக்கும் புகார் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

அ.தி.மு.க எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்

மதுரை மேற்கு ஒன்றியத்தின் துணை சேர்மன் கலைவேணியும், ஐந்து பெண் ஒன்றிய கவுன்சிலர்களும் சேர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கலெக்டருக்கும் அனுப்பியுள்ள புகாரில், ‘‘பெண்களான நாங்கள் சுதந்திரமாக உள்ளாட்சிப்பணிகளில் ஈடுபட முடியவில்லை. யூனியன் டெண்டர்களை நியாயமான முறையில் விட முடியவில்லை. எல்லா விஷயத்திலும் கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசன் தலையிட்டு, அராஜகம் செய்கிறார்’’  என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தல்லாகுளம் காவல் நிலையத்திலும் எம்.எல்.ஏ மீது அவர்கள் புகார் செய்திருக்கிறார்.

எம்.எல்.ஏ.வுடன் என்னதான் பிரச்னை? என, துணை சேர்மன் கலைவேணியிடம் கேட்டபோது, ‘‘18 வருஷமா அ.தி.மு.க.வுல இருக்கேன். பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். மேற்கு ஒன்றிய சேர்மன் வாய்ப்பை, எம்.எல்.ஏ. தமிழரசன் திட்டமிட்டு எம்.ஏ. படித்த எனக்கு தராமல், கையெழுத்து கூட போடத் தெரியாத பழனியம்மாள் என்ற பெண்மணிக்கு கொடுத்தார். சரி, பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டேன். தன்னுடைய  எம்.எல்.ஏ. பணத்திலிருந்து, யூனியன் கவுன்சிலருக்கு எந்த வேலையும் ஒதுக்கியதில்லை. எல்லாத்தையும் அவரே வைத்துக் கொள்கிறார். இப்போது, யூனியன் பொது நிதியிலிருந்து செய்யப்படும் வேலைகளையும், தன்னுடைய பினாமி காண்ட்ராக்டர்கள் மூலம் டெண்டர் எடுக்கிறார்.

வைஸ் சேர்மனான நானோ, மற்ற கவுன்சிலர்கள் சுட்டிக் காட்டும் நல்ல காண்ட்ராக்டர்களுக்கு, செட்யூல் பார்ம் கூட பெற விடாமல் தடுக்கிறார். கடந்த 18ஆம் தேதி நடந்த டெண்டரில், மற்ற யாரையும் கலந்து கொள்ளவிடாமல், யூனியன் அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு, எம்.எல்.ஏ. தமிழரசனின் பி.ஏ. ரவி, ஒன்றிய செயலாளர் முருகேசன், சேர்மனின் கணவர் தனபால் இன்னும் சிலரும் சேர்ந்து, ஏக ரகளை செய்தனர்.

‘பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா’ன்னு என்னை, அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள். என் தம்பி மேல் பொய்யான புகாரை கொடுத்தார்கள். கடைசியில் அந்த டெண்டர் இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அம்மா ஆட்சியில், பெண்களான எங்களுக்கு, எங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்களால் பாதுகாப்பு இல்லை. அவர்கள் மீது அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் அனைவரும் எங்கள் கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்வோம்’’ என்றார்.

##~~##
மதுரை மேற்கு ஒன்றியத்தில் நடக்கும் இந்த விவகாரம் மதுரை மாவட்ட அ.தி.மு.க. அரசியலுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் அடாவடியில் ஈடுபட்ட, மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவர் ராஜபாண்டியன் என்பவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதுபோல இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரின் நடவடிக்கை யார் மீது பாயும் என்று, கட்சியினர் ஆர்வமாக  பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
செ.சல்மான்


படங்கள்:
பா.காளிமுத்து