Published:Updated:

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம், பின்னணியில் நடந்தது என்ன?

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம், பின்னணியில் நடந்தது என்ன?
இலங்கை நாடாளுமன்றம் முடக்கம், பின்னணியில் நடந்தது என்ன?

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷே நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலான நிலைமையில், நாடாளுமன்றத்தை வரும் 16-ம் தேதிவரை தற்காலிகமாக முடக்குவதாக அந்நாட்டின் அரசத் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

லங்கை பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷே நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலான நிலைமையில், நாடாளுமன்றத்தை வரும் 16-ம் தேதிவரை தற்காலிகமாக முடக்குவதாக அந்நாட்டின் அரசத் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 106 இடங்களை வென்ற ரணிலின் கூட்டணியும் 95 இடங்களைப் பிடித்த மைத்திரிபால சிறிசேனாவின் கூட்டணியும் இணைந்து, கூட்டரசை அமைத்தன. மைத்திரியும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவும் இலங்கை சுதந்திர கட்சி எனும் ஒரே கட்சியில் இரு பிரிவுகளாகச் செயல்பட்டுவந்த நிலையில், மகிந்தவுக்கு ஆதரவாக 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனி ஆவர்த்தனம் செய்துவந்தனர்.

ஒருகட்டத்தில், சுதந்திர கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்‌ஷே குடும்பத்தினர் விலக்கிவைக்கப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மகிந்த ஆதரவாளர்கள் பொதுசன முன்னணி என்ற பெயரில் தனியாகப் போட்டியிட்டு, நாடு முழுவதும் கணிசமான இடங்களில் வெற்றிபெற்றனர். ரணில் கட்சிக்குக் கடுமையான தோல்வியே கிட்டியது. அதைத் தொடர்ந்து, ஆட்சிப் பீடத்தில் ஏற ராஜபக்‌ஷே குடும்பத்தினர் தீவிரமாகக் களமிறங்கினர்.

இந்தியா, அமெரிக்கா எனப் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட மகிந்த ராஜபக்‌ஷே, அந்தந்த நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்திவந்தார். அண்மையில், இந்தியாவுக்கு வந்த மகிந்த ராஜபக்‌ஷே காங்கிரஸ், பி.ஜே.பி. தலைவர்களைச் சந்தித்துவிட்டுச் சென்றது நினைவுகூரத்தக்கது.

இலங்கைக்குள்ளும் இதைப்போலவே ரணிலுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை மகிந்த ராஜபக்‌ஷே தரப்பு முடுக்கிவிட்டது. அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனும் நிலையிலிருந்த இப்போதைய அதிபர் மைத்திரி, திடீரென மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதன் பின்னணியில், மகிந்த தரப்புக்கும் அவருக்கும் இடையிலான கமுக்கமான உறவே காரணம் எனும் தகவல் வெளியாகியது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சரும் சுதந்திர கட்சியின் முக்கியப் பிரமுகருமான எஸ்.பி.திஸ்ஸநாயக்கவின் வீட்டில், மைத்திரியும் மகிந்தவும் சந்தித்துப் பேசினர். அதையடுத்தே ரணிலுக்கும் மைத்திரிக்குமான மோதல், முறுகல்நிலையை எட்டியது.

கடந்த 16-ம் தேதி நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிக்கும் ரணிலுக்கும் காரசாரமான உரையாடல் இடம்பெற்ற தகவலும் அந்நாட்டு ஊடகங்களில் கசிந்தது. இந்நிலையில், நேற்று மாலையில் கொழும்புவின் அரசியல் வட்டாரங்களில் திடீர்ப் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 7.30 மணியளவில் பிரதமர் ரணில் பதவி விலகாத நிலையில், அதிபர் செயலகத்தில் மகிந்த ராஜபக்‌ஷேவுக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தான் விலகல் கடிதம் அளிக்காத நிலையில், மகிந்தவைப் பிரதமராகப் பிரமாணம் செய்துவைத்தது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் தானே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் தெரிவித்தார்.

அரசமைப்பின் 44-வது பிரிவு உட்பிரிவு 2-ன்படி, நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களின் விருப்பத்துக்குரிய ஒருவரையே பிரதமராக, அதிபர் பிரமாணம் செய்துவைக்க முடியும். இதற்கு நேர்மாறாக, அதிபர் மைத்திரி செயல்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டினார். அரசமைப்பின்படியே அதிபர் செயல்பட்டுள்ளதாக மகிந்த ஆதரவு அமைச்சர்கள் பதிலுக்கு வாதம் வைத்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில், மைத்திரி - மகிந்த கட்சியினர் 95 பேர் உள்ளனர். எதிரணியில், ரணில் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 106 பேர் இருந்தாலும், அந்நாட்டுச் சட்டப்படி ரணில் கட்சியிலிருந்தேகூட மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க முடியும். எனவே, ரணிலுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் நிலை மாறலாம் என்பது ஒரு பக்கம் இருக்க, வெளியில் உள்ள தமிழ்ச் தேசியக் கூட்டமைப்புக்கு 16 பேரும் ஜே.வி.பி. எனப்படும் இடதுசாரி சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கு 6 பேரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி. கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டு தரப்புகளுக்கும் ஆதரவு தரப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்தது. 

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்துவதாக உறுதியளித்தால், ஆதரவு தருவதாக தமிழ்த் தேசியக் கட்டமைப்பு அறிவித்தது. 

இந்தச் சூழலில், நாளை ஞாயிறன்று நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது, முறைப்படி, இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யாவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. அதையொட்டி ஆதரவு, எதிர்ப்பு, பின்னணி பேரம் என நேற்றிலிருந்து விடியவிடிய கொழும்புவின் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக இருந்துவந்த நிலையில், நாடாளுமன்றத்தை முடக்குவதாக மைத்திரி அறிவித்துள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு