Published:Updated:

“நான் சொல்வதைக் கேட்கும் நிலையில் ஷோபியா இல்லை” - தமிழிசை செளந்தரராஜன்!

ஜனநாயக நாட்டில் நீதிமன்றத்தை நாடுவதற்கு எல்லாருக்கும் உரிமையுள்ளது. ஆனால், ஷோபியா என் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. நான் அவரை ஒருபோதும் திட்டவில்லை.

“நான் சொல்வதைக் கேட்கும் நிலையில் ஷோபியா இல்லை” - தமிழிசை செளந்தரராஜன்!
“நான் சொல்வதைக் கேட்கும் நிலையில் ஷோபியா இல்லை” - தமிழிசை செளந்தரராஜன்!

ந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லாத போதிலும் மற்ற மாநிலங்களின் பி.ஜே.பி. தலைவர்களைக் காட்டிலும் இங்குள்ள தலைவர்கள் அதிகளவு சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர்.

தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பற்றி பேசுகையில், ‘அவர் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்’ என்று கூறிய கருத்து, மாநிலம் முழுவதும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் பி.ஜே.பி-யினருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடத்தினர். இதனால், அந்த இரு கட்சிகளுக்கும் இடையே மோதலாக மாறியது. 

இதற்கிடையே கனடாவில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவி ஷோபியா, விடுமுறைக்காக சொந்த ஊரான தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தபோது, அதே விமானத்தில் சென்ற தமிழிசை செளந்தரராஜனைப் பார்த்ததும், மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார். பின்னர், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி ஷோபியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஷோபியாவின் தந்தை, தமிழிசை மீது வழக்குத் தொடர, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அதன் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, "பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சம்பவதினத்தன்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட பி.ஜே.பி. தொண்டர்கள் மீதான புகாரைப் பதிவு செய்ய வேண்டும். நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர அனுமதி அளிக்கிறேன். அதுதொடர்பான விசாரணை அறிக்கையை நவம்பர் 20-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஷோபியா விவகாரத்தில் நீதிமன்றம் வழக்கு தொடர அனுமதி அளித்திருப்பது பற்றி தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். 

“உங்கள் மீது ஷோபியாவின் தந்தை நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?".

“ஜனநாயக நாட்டில் நீதிமன்றத்தை நாடுவதற்கு எல்லாருக்கும் உரிமையுள்ளது. ஆனால், ஷோபியா என் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. அந்த வழக்கும் பொய் வழக்குதான். அவரின் சாதியைச் சொல்லி நான் திட்டியதாகக் குற்றம்சாட்டுகிறார். நான் அவரை ஒருபோதும் அப்படித் திட்டவில்லை. நான் அனைத்து சமூகத்தினரையும் ஒரேமாதிரி மதிப்பவள். முதலில் நாங்கள்தான் வழக்கு தொடர்ந்தோம். எங்கள் வழக்குப் பதிவாகி, 8 மணி நேரத்திற்குப் பிறகே அவர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் முதலில் அவர் தன்னை தாழ்த்தப்பட்டவர் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், பின்னர் 'தேவேந்திரர்' என மாற்றிவிட்டார். 

வழக்கில் சாதியைச் சம்பந்தப்படுத்துவதன் பின்னணியில் உள்நோக்கம் இருக்கிறது. என்றாலும் என்னை நிரூபிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இந்த வழக்கில் வெற்றி பெறுவேன்”.

“தூத்துக்குடி விமான நிலையத்தில் அன்றைய தினம், நீங்கள் அதிக கோபம் அடைந்ததாக நினைக்கிறீர்களா?”.

“நிச்சயமாக இல்லை. நான் தினமும் பல இளைஞர்களைச் சந்திக்கின்றேன். நான் அனைவரிடமும் நல்லமுறையில் பழகக் கூடியவள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஊடக நண்பர்கள் கேட்கும் கடுமையான கேள்விகளுக்குக்கூட, பல நேரங்களில் நான், நிதானமாகவே பதில் சொல்லி வருகிறேன். ஆனால், ஷோபியாவின் செயல்பாடு அப்படியல்ல. அதில் உள்நோக்கம் இருக்கிறது. ஏற்கனவே, அவர் ‘ட்விட்டரில்’ செய்தியை வெளியிட்டபின், திட்டமிட்டே அவ்வாறு செய்துள்ளார். அந்தச் செயல்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொண்டர்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். ஆனால், நான் தொண்டர்களை அமைதி காக்க வேண்டும் என்று சொன்னேன். நான் காவல்துறையினரிடம்தான் புகார் செய்தேன். ஆனால், நான் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலையில் ஷோபியா இல்லை. நான் பேசிய வீடியோ காட்சிகள் மட்டும்தான் வெளியாகின. ஒருவேளை ஷோபியா, கோஷமிட்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் முழு விவரமும் உங்களுக்குத் தெரிய வந்திருக்கும்”. 

“பி.ஜே.பி-யை எதிர்த்துதான் ஷோபியா கோஷமிட்டார். உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஜே.பி. உங்களுக்குத் துணையாக இருக்குமா?” 

“கட்சியைப் பொறுத்தவரை, இதில் மட்டுமல்ல; எல்லா விஷயங்களிலும் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள்தான், பாகுபாடு காட்டுகின்றனர். இதுவே, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை இதுபோன்று சொல்லியிருந்தால், இந்தப் பிரச்னையை அமைதியாக விட்டிருப்பார்களா?”.

“ஷோபியாவுக்கு இந்த நேரத்தில் ஏதாவது அறிவுரை சொல்ல விரும்புகிறீர்களா?" 

“நான் சொல்லும் அறிவுரையை எல்லாம் கேட்கும் நிலையில் ஷோபியா இல்லை. அவர் மிகவும் திமிர் பிடித்தவர்போல நடந்து கொண்டார். அவர், திட்டமிட்டு முன்கூட்டியே தீர்மானித்துதான் அப்படியெல்லாம் நடந்து கொண்டார்".