Published:Updated:

`டிவி, மிக்சி, ஃபேன் , பிரிட்ஜ்.. எல்லா பொருளும் போச்சு!’ - மின்கோளாறால் கதறும் கிராம மக்கள்

`டிவி, மிக்சி, ஃபேன் , பிரிட்ஜ்.. எல்லா பொருளும் போச்சு!’ - மின்கோளாறால் கதறும் கிராம மக்கள்
`டிவி, மிக்சி, ஃபேன் , பிரிட்ஜ்.. எல்லா பொருளும் போச்சு!’ - மின்கோளாறால் கதறும் கிராம மக்கள்

டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீட்டில் இருந்த டிவி, மிக்சி, ஃபேன் , பிரிட்ஜ் , வாசிங் மிஷின் இப்படி எல்லாம் புகைந்துவிட்டது என்று கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலம் கிராமத்தை அடுத்த முத்துவேல்பட்டியில் நேற்று மாலை பலமாக காற்று அடித்ததில் மின் வயர்கள் ஒன்றுக்கொன்று உரசியதில், அப்பகுதியில் இருந்த வீடுகளில் வீட்டு உபயோக பொருட்கள் பாதிப்படைந்து பழுதடைந்துள்ளது. இதனால் பழுதடைந்த வீட்டு உபயோக பொருட்களை சாலையில் போட்டு தங்கள் வேதனையைத் தெரிவித்தனர். இது குறித்து எட்டிமங்கலத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி மாணவன் பிரசாத் கூறுகையில், "மேலூரில் இருந்து நத்தம் செல்லம் சாலையில் உள்ளது எட்டிமங்கலம் கிராமம் எங்களது கிராமத்திற்கு அருகே உள்ள கவட்டையம்பட்டி என்று அழைக்கப்படும் முத்துவேல்பட்டி கிராமத்தில் நேற்று டிரான்ஸ்பார்மரில் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிக மின்சாரம் பாய்ந்து வீட்டு உபயோக பொருட்கள் பாதிப்படைந்துள்ளது. கூலி தொழில் செய்து பிழைக்கும் எங்கள் பகுதி கிராமவாசிகளின் வீட்டு உபயோக பொருட்கள் பாதிப்படைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்கப் பாதிப்பு ஏற்பட்டதற்குரிய காரணங்களை கண்டறிந்து  டிரான்ஸ்பார்மர்களை சரி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து அப்பகுதி மின்வாரிய ஏ.இ.  ஜெயகிருஷ்ணா அவர்களைத் தொடர்பு கொண்டபோது," எட்டிமங்கலம் , மேலவளவு , முத்துவேல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது உண்மை தான். அதற்குக் காரணம் இ.பி வயர்களில் மரங்கள் தட்டுவதே முழு காரணம். பொது மக்களிடம் மரக்கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி கேட்டால் அதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் அந்த மரக்கிளைகள் உயர் அழுத்த மின் வயர்களில் உரசும் போது அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோகப் பொருட்களை பாதிப்படையச் செய்துவிடுகிறது. மேலும் போஸ்ட் மரங்களின் இழுவைக்காக வைக்கும் கம்பிகளை சிலர் வெட்டி எடுத்துவிடுகின்றனர் அதனால் காற்றில் போஸ்ட் மரம் அசையும் போது இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் போது இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என்றார்.