Published:Updated:

மத்திய அரசுக்கு மோடி.. மாநில அரசுக்கு ரஜினி.. அர்ஜூன் சம்பத்தின் புதுக் கூட்டணி கணக்கு!

மத்திய அரசுக்கு மோடி.. மாநில அரசுக்கு ரஜினி..  அர்ஜூன் சம்பத்தின் புதுக் கூட்டணி கணக்கு!
மத்திய அரசுக்கு மோடி.. மாநில அரசுக்கு ரஜினி.. அர்ஜூன் சம்பத்தின் புதுக் கூட்டணி கணக்கு!

மத்தியில் மோடியும், தமிழகத்தில் முதல்வராக ரஜினியும் பொறுப்பேற்கும் வகையில் புதிய  கூட்டணியை உருவாக்கிட இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர்  அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``வரும் நவம்பர் 5-ம் தேதி சபரிமலை ஒரு நாள் நடை திறப்பு நடைபெறுகிறது. அந்த நாளில் பம்பா நதிக்கரையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் ஒன்றுகூடி சபரிமலையின் புனிதம் காக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர். சபரிமலை நிர்வாகப் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படவுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்து மக்களுக்கும், ஐயப்ப பக்தர்களுக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில் இதுவரை 2445 பேரை கைது செய்திருக்கிறார். எனவே, மத்திய அரசு பினராயி விஜயன் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது உட்பட மொத்தம் 20 பேரவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வெற்றி பெற முடியாத வகையில் இந்து மக்கள் கட்சி ஒரு கூட்டணியை உருவாக்கி செயல்படுத்திட முடிவு செய்துள்ளோம். மத்தியில் மோடியும், தமிழகத்தில் ரஜினியும் முதல்வராகப் பொறுப்பு ஏற்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிகளை ஒருங்கிணைத்துத் தேர்தலை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். 

ரஜினி ஆன்மிக அரசியல் வேண்டும் எனக் கூறி வருவதால் அவரை நேரில் சந்தித்து தி.மு.க, அ.தி.மு.க இல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து அவரைக் கலந்து பேசிடவும் முடிவு செய்துள்ளேன். மீ டூ விவகாரத்தில் பெண்களை பாலியல் தொந்தரவுகள் செய்ததாகக் கூறப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோல புகார் சொல்பவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தால் அவர்கள் மீதும் தகுந்த விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும். பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் செய்திருக்கிறேன். அண்மைக்காலமாக இந்து மத நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் நீதிமன்றங்கள் தொடர்ந்து தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் அரசு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முறையாக நீதிமன்றங்களில் விவாதிப்பதில்லை. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடித்தல், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்குக் கட்டுப்பாடுகள், சபரிமலை தொடர்பான தீர்ப்புகள், ஜல்லிக்கட்டு தொடர்பான பிரச்னைகள் ஆகிய அனைத்துக்கும் நீதிமன்ற தீர்ப்புகள் இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மத கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீர்குலைப்பதாகவே உள்ளது. 

கோயில்களில் யானைகளைப் பயன்படுத்தக்கூடாது என்பது தொடர்பான ஒரு வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது. பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார். இலங்கையில் தமிழர்களைக் கொல்லத் தி.மு.க-வும் உடந்தையாக இருந்தது என ராஜபக்சே பகிரங்கமாகச் சொன்னதற்கு இதுவரை மு.க.ஸ்டாலின் எந்தப் பதிலும் சொல்லவில்லை. மு.க.ஸ்டாலினை சுப.வீரபாண்டியன், வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சிலர் எனப் பலரும் தவறாக வழிநடத்திக் \கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக மு.க.ஸ்டாலின் தவறான வாதங்களை முன்வைத்துக் கொண்டே இருக்கிறார். இது மு.க.ஸ்டாலின் முதல்வராவதைக் கெடுக்கும் சதி என அவருக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.